Sidhanathan K       Mar 15, 2024

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏன் மகாத்மா காந்தி படம் மட்டும் இடம்பெற்றுள்ளது..?

நம் இந்திய நாட்டில் 5 லிருந்து 500 வரை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இதில் நடுவே 2000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்து சமீபத்தில் ரிசர்வ் வாங்கி அதனை திரும்பவும் பெற்றுக்கொண்டது.

இப்படியாக பழைய ரூபாய் நோட்டுகளானாலும் சரி, புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டாலும் சரி, அதில் அகிம்சாவாதி காந்தி புகைப்படம் தவிர வேறு ஒருவரது படத்தை பார்த்திட முடியாது. அதற்கான காரணம் என்ன என்பதை தெளிவாக பார்க்கலாம்.

நாணயங்களும், ரூபாய் நோட்டுகளும் தான் ஒரு நாட்டின் இறையாண்மையின் அடையாளமாகும். அவை பெரும்பாலும் வரலாற்றில் முக்கிய பங்காற்றிய தலைவர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களின் புகைப்படத்தை பிரதிபலிக்கும் விதமாக வெளியிடப்படுகின்றன.

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், 6ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை தான் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வந்தது.

1969-ல் காந்தியின் நூற்றாண்டு விழா வந்தபோதுதான் முதன்முறையாக அவரது புகைப்படத்துடன் கூடிய 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.

அதன்பிறகு, 1975ல் வெளியான 100 ரூபாய் நோட்டுகளில், இந்தியா உணவு தேவையில் தன்னிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் வேளாண் நடவடிக்கைகளை சித்தரிக்கும் படங்கள் அச்சிடப்பட்டன.

1980 ஆம் ஆண்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை முன்னிலை படுத்தும் வகையிலான படங்கள் ரூபாய் நோட்டுகளில் இடம்பெற்றன.

1987ல் மகாத்மா காந்தியின் உருவப்படத்துடன் கூடிய 500 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. இறுதியாக 1996ல், மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் அச்சிடப்பட்ட நோட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டன.

ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, காந்தியின் உருவப்படத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட அனைத்து சின்னங்களும் உயிரற்ற பொருட்கள் மற்றும் எளிதில் போலியாக மாற்றப்படலாம். அதுவே, மனித முகத்தை நகலெடுப்பது கடினம் என்பதால் காந்தியின் புகைப்படம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

மகாத்மா காந்தியை கௌரவிக்கும் வகையில் ரூபாய் நோட்டுகளில் அவரது உருவப்படம் இடம் பெற்றதை போல, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

அதற்கு பதிலளிக்கும் வகையில், இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படங்களை தவிர வேறு படங்கள் இடம்பெறக் கூடாது என ரிசர்வ் வங்கி 2010-ல் முடிவு செய்தது. இந்த முடிவை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி தவிர, வேறு இந்திய தலைவர்களின் உருவப்படங்கள் இடம் பெற்றால், அவர்கள் மீது மதம் மற்றும் ஜாதி சாயம் பூசப்படும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவப்படம் 1946 இல் ராஷ்டிரபதி பவனுக்கு வெளியே வைசிராய் இல்லத்தில் எடுக்கப்பட்ட அசல் படத்திலிருந்து வெட்டப்பட்டதாகும்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories