பச்சிளம் குழந்தைகளுக்கு பெரும்பாலும் இயற்கை மூலிகை இந்த வசம்பு பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் இதற்கு பிள்ளை மருந்து, பிள்ளை வளர்த்தி என்று கூறுகின்றனர்.
குழந்தைகள் எந்த நோய் நொடியில்லாமல் இருப்பதற்காக இந்த வசம்பை புதிதாக பிறந்த குழந்தைகளின் கைகளில் கோர்த்து கட்டுவது உண்டு. இந்த வசம்பு திருஷ்டி பொருளாகவும் பயன்படுவதுண்டு.
குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வயிறு உப்புசம், வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
இந்த வசம்பினை ஒரு கல்லில் வைத்து உரசி, அதை வழித்து எடுத்து தாய்ப்பால் அல்லது தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
மருத்துவரின் ஆலோசனையை பெற்று குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்துவது நல்லது. வசம்பு கொடுத்துவிட்டால், அடுத்த அரை மணி நேரத்துக்கு குழந்தைகளுக்கு பால்தரக்கூடாது.
வசம்பினை சிறு சிறு துண்டுகளாக்கி அரைஞாண்கயிறு போல, தாயத்து வடிவில் குழந்தைகளுக்கு இடுப்பு அல்லது கைகளில் கட்டினால் வலிப்பு நோய் வருவது தடுத்து நிறுத்தப்படும்.
அதேபோல, வசம்பை நெருப்பில் சுட்டு சிறிது தண்ணீரில் தெளித்து தேய்த்தால் கருப்பு நிறத்தில் மை போல வரும். இதை குழந்தைகளின் நெற்றி, உள் பாதம் மற்றும் கன்னத்தில் பொட்டு போல வைப்பார்கள். இதனால் குழந்தைகளை நோய்த்தொற்றுகள் அண்டுவதில்லை.
குழந்தைகள் பேச தாமதமானால், இந்த வசம்பினை நாக்கில் வைத்து தேய்ப்பார்கள். இதனால் குழந்தைக்கு ஏதாவது அலர்ஜி இருந்தாலும் நீங்கிவிடும். அதேபோல, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், கூர்மையான பார்வை திறனுக்கும் இந்த வசம்பு உதவுகிறது.
குழந்தைகளுக்கு பசியின்மை இருந்தாலும் இந்த வசம்பு தருவார்கள். அதேபோல் குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, அந்த தண்ணீரில் வசம்பு பொடியை கலந்து பயன்படுத்துவது உண்டு.