• search
keyboard_backspace

இப்பவும் எத்தனை சிலிர்ப்பு- ஆங்கிலேயருக்கு எதிரான வேலுநாச்சியார், மருதுசகோதரர்களின் ரத்த சரித்திரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய விடுதலைப் போரின் முதல் முன்னோடி படை வரிசையில் இடம்பெற்றிருக்கும் வேலுநாச்சியாரையும் மருதுசகோதரர்களையும் காரணம் காட்டி தமிழக அரசாங்கத்தின் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் மருது சகோதரர்களை தீவிரவாதிகள் என மத்திய பாஜக அரசு முத்திரை குத்தி இருக்கிறது.

அதுவும் ஜான்சிராணியின் சாயலில் வீரமங்கை வேலுநாச்சியார் இருக்கிறார் என்பது காரணம். ஜான்சி ராணி பிறப்பதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே பிறந்து விடுதலை யுத்தம் நடத்திய வரலாற்றுப் பெருமைக்குரியவர் சிவகங்கை சீமையின் பேரரசி வீரத்தாய் வேலுநாச்சியார்.

 Who are Velu Nachiyar and Maruthu Brothers- Life History

வேலுநாச்சியாரின் தளபதிகளாக இழந்த நிலத்தை மீட்டு ஆங்கிலேயரை மிரள வைத்தவர்கள் மருது சகோதரர்கள். மருது சகோதரர்களை அவர்கள் யுத்தம் நடத்திய ஆங்கிலேயர்கள் கூட தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என சொல்லவில்லை. ஆனால் இப்போதைய மத்திய பாஜக அரசு மருதிருவர் தீவிரவாதிகள் என்கிறது.

யார் இந்த வேலுநாச்சியார்? யார் இந்த மாவீரர் மருது சகோதரர்கள்?

 Who are Velu Nachiyar and Maruthu Brothers- Life History

வீரத்தாய் வேலுநாச்சியார்

இந்தியாவின் விடுதலைப் போராட்ட வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும் என்பதுதான் பலரது கருத்து. ஆற்காடு நவாப்பிடம் இருந்து வரி வசூல் உரிமையை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகம் பெற்ற முதலே தீரமுடன் யுத்தம் நடத்திய நிலம் தமிழ்நாடு

முத்துவடுக நாதத் தேவர், வீரன் அழகுமுத்துகோன், நெற்கட்டும்சேவல் புலித்தேவர், கான்சாகிப் மருதநாயகம், வீரபாண்டிய கட்டபொம்மன் வரிசையில் இடம்பெறுகிறவர்கள் வீரமங்கை வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாகனேரி வாளுக்கு வேலி அம்பலம், விருப்பாச்சி கோபால் நாயக்கர் உள்ளிட்டோர். இந்திய வரலாறுகளில் சொல்லப்படுகிற கி.பி.1857 முதலாவது சிப்பாய் கலகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஆங்கிலேயருக்கு எதிராக தீரமுடன் போரிட்டவர்கள் தமிழர்கள்.

பிரிட்டிஷ் பேரரசின் பிடியில் இருந்து இந்திய தேசம் விடுதலை பெறுவதற்காக வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலுநாச்சியார். 293 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர். ராணி வேலுநாச்சியாரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டிருந்ததாவது: வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். வீரமங்கை இராணி வேலுநாச்சியார் இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

 Who are Velu Nachiyar and Maruthu Brothers- Life History

இவர் கி.பி. 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதியினருக்கு ஒரே பெண் மகளாக பிறந்தார். வேலுநாச்சியார் ஆண் வாரிசு போலவே வளர்க்கப்பட்டார். மேலும் இவர் பல மொழிகள் கற்றார். வாள் வீச்சு, வளரி வீச்சு உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகளையும் அவர் பெற்றார். இராணி வேலு நாச்சியார் கி.பி. 1746 இல் சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவரை மணமுடித்தார்.

கி.பி.1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி சிவகங்கைப் படைகளை பிரிட்டிஷ் ராணுவதளபதி பெஞ்சர் முற்றுகையிட்டார். ராஜா முத்து வடுகநாதர் அவரது வீரர்களுடன் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் வீரமரணம் அடைந்து விட்டார். வேலுநாச்சியார், முத்து வடுக நாதரை அடக்கம் செய்து விட்டு திண்டுக்கல் அருகே விருப்பாட்சி விரைந்தார். தண்டவராயன் பிள்ளை உடன் ராணி வேலுநாச்சியார் மற்றும் மகள் வெள்ளச்சிநாச்சியார் திண்டுக்கல் அருகே விருப்பாட்சி பாளையத்தில் கோபால் நாயக்கரிடம் அடைக்கலமானார். பின்னர் ராணி வேலுநாச்சியாரின் பாதுகாவலர்கள் வெள்ளைமருது மற்றும் சின்னமருது ஆகியோரும் அவருடன் இணைந்து கொண்டனர். இராணி வேலு நாச்சியார், தளபதிகள் மருது சகோதரர்களுடன் இணைந்து புதிய படையணியை கட்டி எழுப்பினார்.

 Who are Velu Nachiyar and Maruthu Brothers- Life History

மைசூரை ஆண்ட ஹைதர் அலி உதவியுடன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிறிது காலம் வேலுநாச்சியார் தங்கி இருந்தார். வேலுநாச்சியார் படையணியை கட்டமைக்க ஹைதர் அலி, கோபால் நாயக்கர் உள்ளிட்ட பலரும் உதவிக்கரம் நீட்டினர். இதனால் வேலுநாச்சியார் 7 ஆண்டுகள் இடைவிடாமல் ஆங்கிலேயருடன் யுத்தம் நடத்தி இழந்த சிவகங்கை சீமையை மீட்டெடுத்தார். வேலுநாச்சியாரின் படை தளபதிகளில் ஒருவரான குயிலி, பிரிட்டிஷ் படைகளின் வெடிமருந்து கிடங்கை தற்கொலை படை தாக்குதல் மூலம் சிதறடித்தார். உலகின் முதலாவது தற்கொலைப் படை போராளி என்ற சரித்திரத்தைப் படைத்தார் தளபதி குயிலி. வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்டு ஆட்சிபுரிந்த போது சின்னமருதுவை நாட்டின் முதல்அமைச்சராக பணிபுரிவதற்கும் வெள்ளைமருது நாட்டின் தலைமைத்தளபதியாக பணிபுரிவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ராணி வேலு நாச்சியார் தனது கணவரைத் தொடர்ந்து கி.பி.1789 வரை சிவகங்கையை ஆட்சிபுரிந்தார். இவர் நாட்டை நிர்வகிப்பதற்காக மருதுசகோதரர்களுக்கு அதிகாரங்களை வழங்கினார். அதன் பின்னர் சில ஆண்டுகளில் ராணி வேலு நாச்சியார் மரணம் அடைந்தார்.

மாவீரர்கள் மருது சகோதரர்கள்

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் என்ற கிராமத்தில் உடையார் சேர்வை- ஆனந்தாயி ஆகியோரின் மகன்கள்தான் மருது சகோதரர்கள். இருவரது போர்த்திறமைகளைப் பார்த்த சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் தமது படைத்தளபதிகளாக நியமித்தார். முத்துவடுகநாதர் படுகொலைக்குப் பின்னர் வேலுநாச்சியாரின் தளபதிகளாக திகழ்ந்தனர் மருது சகோதரர்கள். விருப்பாச்சி காடுகளில் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்த போது திண்டுக்கல் நகரமும் மலைக்கோட்டையும், ஹைதர் அலியின் வசம் இருந்தது.

 Who are Velu Nachiyar and Maruthu Brothers- Life History

விருப்பாச்சி கோபால் நாயக்கர், ஹைதர் அலி உதவியுடன் 1799-ல் ஆங்கிலேயருக்கு எதிராக யுத்தம் நடத்தி சிவகங்கை சீமையை மீட்டனர் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும். இதே கால கட்டத்தில்தான் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரராக வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களை எதிர்த்து வந்தார். 1799-ல் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார். அவரது தம்பி ஊமைத்துரைக்கு மருது சகோதரர்கள் அடைக்கலம் கொடுத்தனர். இதனையடுத்து மருது சகோதரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்குமான யுத்தம் மூண்டது..

கி.பி.1801 மே 28-ந் தேதி மருது சகோதரர்களின் சிவகங்கை சீமை மீதான தாக்குதலை ஆங்கிலேயர் படை தொடங்கியது. இதனை எதிர்கொள்ள ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களின் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் சார்பாக 1801-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி நாவலந்தீவு பிரகடனம் அல்லது ஜம்பு தீவு பிரகடனம் ஒன்றை மருது சகோதரர்கள் வெளியிட்டனர். இன்றளவும் இந்த பிரகடனம் படிப்பவர்கள் மனதில் வீர எழுச்சியை தூண்டிவிடும் வகையில் இருக்கிறது.

அந்த பிரகடனத்தில், இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும். ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால், மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது.

இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்... ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்... இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!.... இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்... எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்... இப்படிக்கு, மருது பாண்டியன், பேரரசர்களின் ஊழியன், ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி. இவ்வாறு நாவலந்தீவு பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்குப் பின்னரே மருது சகோதரர்களுக்கு எதிரான யுத்தத்தை ஆங்கிலேயர்கள் தீவிரமாக்கினர். ஆங்கிலேயர்களுடனான மருது சகோதரர்களின் யுத்தம் 150 நாட்கள் நீடித்தது.

மருது சகோதரர்களின் படைதளபதிகளில் ஒருவரான பாகனேரி வாளுக்கு வேலி அம்பலத்தின் வீரத்தை தங்களது வரலாற்று பக்கங்களில் ஆங்கிலேயர்களும் விவரித்திருக்கின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தென்பாண்டி சிங்கம் என்ற பெயரில் வாளுக்கு வேலியின் வீரலாற்றை பதிவு செய்திருக்கிறார். இறுதியாக கி.பி.1801-ம் ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

மருது சகோதரர்களுடன் அவர்களது குடும்பத்தினர், உறவினர் என 500க்கும் மேற்பட்டோர் தூக்கில் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். மருது சகோதரர்களின் மகன் துரைசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உறவினர்கள் நாடு கடத்தப்பட்ட கொடூரமும் நிகழ்ந்தது.

1801-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் மருது சகோதரர்களின் தலையை துண்டித்து காளையார்கோவிலில் ஆங்கிலேயர்கள் புதைத்தனர் எனவும் கூறப்படுகிறது.

இத்தகைய வீரம்செறிந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான மருது சகோதரர்களைத்தான் மத்திய அரசு தீவிரவாதிகள் என முத்திரை குத்தி குடியரசு தின விழா அணிவகுப்புக்கான தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் இவர்கள் உருவங்கள் இடம்பெற்றதை சுட்டிக்காட்டி நிராகரித்திருக்கிறது எவ்வளவு பெரிய வேதனை!

English summary
Here is an article on Freedom Fighters Velu Nachiyar and Maruthu Brothers.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In