For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்துணவு திட்டம், இலவச கல்வி, தொழில் வளம், விவசாய புரட்சி...இவற்றின் தந்தை காமராஜர்!!

Google Oneindia Tamil News

சென்னை: காமராஜர் என்று கூறும்போது கர்ம வீரர் காமராஜர் என்றுதான் கூறத் தோன்றும். நம்மை அறியாமலும் அந்த வார்த்தை நம்முடன் ஒட்டிக் கொள்ளும். அந்தளவிற்கு தமிழகத்திற்கு தன்னுடைய அரிய பணிகளை விட்டுச் சென்றுள்ளார். தமிழ் சமுதாயத்தை தொலை நோக்குப் பார்வையுடன் பார்த்து, கல்வி அறிவை கொடுத்து சென்றவர். குழந்தைகள் படிப்பதற்கு அவர் போட்ட விதைதான் இன்று தமிழகத்தில் கல்வி சதவீத வளர்ச்சிக்கு காரணம் என்றுகூட கூறலாம்.

இன்று அவரது பிறந்த நாள். 1903ல் பிறந்து 1975ம் ஆண்டு மரணம் அடைந்தார். தமிழகத்தின் மூன்றாவது முதல்வராக பணியாற்றியவர். கருப்பு காந்தி என்று அன்பாக மக்களால் அழைக்கப்பட்டவர். இவர் முதல்வரான பின்னர் வயல் வெளி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது பெற்றோருடன் குழந்தைகளும் வயல் வெளியில் வேலை செய்வதைப் பார்த்தார். உடனே அங்கு தனது காரை நிறுத்திவிட்டு ஏன் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டார்.

சதா அதே சிந்தனையுடன் சென்னைக்கு திரும்பியவுடன் மூத்த அதிகாரிகளை அழைத்தார். பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்குவதற்கு என்ன செலவு ஆகும் என்ற திட்டத்தை தன் முன் வைக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சமர்பித்தனர். அவர்களில் சிலருக்கு சந்தேகமாக இருந்தது. எதற்காக அரசுக்கு இந்த வருமானம் இல்லாத செலவு என்று. ஆனால், மதிய உணவு இலவசமாக கொடுத்தால்தான் பிள்ளைகளை பள்ளிக்கு பெற்றோர் அனுப்புவார்கள் என்பது அவரது மனக் கணக்கு. அது சரியாகத்தான் இருந்தது.

who is kamarajar and what he achieved in Tamil Nadu including free meals, industrial development

கல்வி அறிவு கொடுத்தால் தானே ஒரு மாநிலம் தன்னிறைவு பெற்ற மாநிலமாக வளர்ச்சி பெறும். சிறந்த மருத்துவர்களை, பொறியாளர்களை, விஞ்ஞானிகளை பெற முடியும் என்பது அவரது கணக்கு. இத்துடன் அவர் நின்று விடவில்லை. கிராமங்களுக்கு தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொண்டு, பள்ளிகள் இல்லை என்றால் துவங்குமாறு கிராமத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு, பணக்காரர்களுக்கு, பெரிய வர்த்தகர்களுக்கு கட்டளை இட்டார். 10 கி. மீட்டருக்குள் உயர் கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரித்தது.

இந்த தொலைநோக்கு திட்டம் கொண்டு வந்த காமராஜரின் படிப்பு என்னமோ வெறும் 6ஆம் வகுப்புதான். வறுமை அவரை படிக்க வைக்கவில்லை. ஆனால், தனது தமிழக மக்களுக்கு அதை கொடுத்தார். இவருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக, அதிமுக போன்ற கட்சிகளும் சத்துணவு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தன.

இவர் முதல் அமைச்சர் ஆன முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் என்று ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.

கல்விக்கு அடுத்து இவர் எடுத்துக் கொண்டது விவசாயம். இவரது ஆட்சியில்தான் பல அணைகள் கட்டப்பட்டன. இன்றும் அந்த அணைகள்தான் தமிழகத்தில் விவசாயத்திற்கு உயிர் கொடுத்து வருகின்றன. பவானித்திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம், சாத்தனூர், மணிமுத்தாறு, அமராவதி, கிருஷ்ணகிரி, மேட்டூர் கால்வாய்த் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், வைகை, ஆரணியாறு ஆகியவையாகும். காமராஜரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு இந்த தொட்டிப் பாலத்தை கட்டி இருந்தார்.

அரிசி உற்பத்தியிலும் உச்சம் தொட்டவர். ஜப்பான் , ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்து ஐ.ஆர். 20, ஐ.ஆர். 8, சம்பா நெல், ரப்பர் சம்பா போன்ற நெல் ரகங்களின் மாதிரிகள் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு தஞ்சாவூர் போன்ற காவிரி டெல்டா பகுதிகளில் விதைக்கப்பட்டு, புரட்சி செய்தவர்.

மாநிலத்தில் தொழில் வளத்தையும் பெருக்கினார். அம்பத்தூர், கோயம்புத்தூர், ஒசூர் ஆகியவை மாநிலத்தின் தொழில் நகரங்களாக வளர்வதற்கு அவர் இட்ட அடித்தளம்தான் காரணம். பெரம்பலூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன், திருச்சியில் பெல் நிறுவனம், ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை, குந்தா மின் திட்டம், நெய்வேலி, ஊட்டி ஆகிய இடங்களில் மின் வெப்ப திட்டம், அரக்கோணம் இலகுரக ஸ்டீல் தொழிற்சாலை, சமய நல்லூர் அனல் மின் நிலையம் ஆகியவையும் இவரால் கொண்டு வரப்பட்டவை.

இதற்குப் பின்னர் மாநிலத்தின் சுகாதாரத்திலும் அக்கறை காட்டினார். போலியோ இல்லாத, அம்மை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்தார். இந்த திட்டங்களை எல்லாம் அரசுக்கு கிடைத்த அற்ப, சொற்ப வருமானத்தில் இருந்து செய்து காட்டினார்.

ஒன்பது ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்தார். இவரது ஆண்டு பட்ஜெட் அப்போது வெறும் ஆயிரம் கோடி ரூபாய்தான். 8 அமைச்சர்களை வைத்துக் கொண்டு அனைத்து சாதனைகளையும் செய்து காட்டினார்.

இவர் கொண்டு வந்த காமராஜர் திட்டத்தின்படி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சிக்கு தொண்டு செய்ய சென்று விடவேண்டும். இதை நேருவிடமும் கூறினார். அவரும் ஏற்றுக் கொண்டார். தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சிக்குப் பணிக்கு சென்றார். சில அமைச்சர்களையும் அவ்வாறு ராஜினாமா செய்ய வைத்தார். முதல்வர் பதவியை பக்தவச்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.

இதையடுத்து இவருக்கு தேசிய அளவில் செல்வாக்கு பெருகியது. நேரு இறந்த பின்னர் அந்த இடத்திற்கு லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார். அவர் இறந்த பின்னர் அந்த இடத்திற்கு இந்திரா காந்தி வருவதற்கும் இவர் காரணமாக இருந்தார். பின்னர் அதே இந்திரா காந்தியுடன் அவருக்கு கசப்பு ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியேறினார். சிண்டிகேட் காங்கிரஸ் உருவாக்கினார். அப்போது தமிழகத்தில் திமுக அசுர வளர்ச்சி பெற்று வந்த சமயம். திமுகவின் செயல்பாட்டையும் எதிர்த்து வந்தார். தவறுகளையும் சுட்டிக் காட்டினார். எமர்ஜென்சியை எதிர்த்தார். இறுதியில் 1975, அக்டோபர் 2ஆம் தேதி காலமானார். காந்தி மீது அன்பு கொண்டிருந்த காமராஜர், காந்தி ஜெயந்தி நாளில் இறந்தார்.

இவர் முதல்வராக இருந்தபோது தனது தாய்க்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 15 அனுப்புவார். முதல்வரின் தாய் என்று எங்கும் கூறி ஆதாயம் தேடக் கூடாது என்று கூறி வைத்து இருந்தார். அவர் இறந்தபோது, அவரது வீட்டில் மிஞ்சியது வெறும் ரூ. 100 மற்றும் மூன்று, நான்கு கதர் வேஷ்டி, சட்டைகள்தான். அவர்தான் கர்மவீரர் காமராஜர்.

English summary
who is kamarajar and what he achieved in Tamil Nadu including free meals, industrial development
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X