For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வலிமையும் நுட்பமுமாய் பின்னப்பட்ட 'இந்தியாவின் தலைகுனிவு' சாதியம்- மூத்த பத்திரிகையாளர் அ.குமரேசன்

Google Oneindia Tamil News

காடு, பாலை, கடல், மலை என மாறுபட்ட நில அமைப்புகளும், கடுங்குளிர் முதல் கொடும் வெயில் வரை என மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளும் அமைந்துள்ள பன்முகத் தன்மை இந்தியாவின் புவியியல் சார்ந்த வியப்புக்குரிய தனித்துவம்.இனங்கள், மொழிகள், மதங்கள், மரபுகள் ஆகிய வெவ்வேறு வாழ்முறைகள் சேர்ந்துள்ள பன்முகத் தன்மை இந்தியாவின் பண்பாடுசார்ந்த பெருமைக்குரிய தனித்துவம்.சமுதாயம் சார்ந்த இன்னொரு தனித்துவம் இருக்கிறது.ஆனால் அது தலைக்குனிவுக்கு உரியது.அதுதான் சாதியம்.அது பன்முகத்தன்மை அல்ல, பாகுபாட்டுக் கொடுமை.

சமுதாயத்திற்கான பணிகளைப் பகிர்ந்துகொண்ட அன்றைய ஓர் அறிவார்ந்த வேலைப்பிரிவினைஏற்பாடுதான் வர்ணப் பிரிவினையோடு இணைந்த சாதியமைப்பு என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. வேலைகளைப் பிரித்துக்கொள்வது விருப்பத் தேர்வாகஇல்லாமல், பிறப்புத் திணிப்பாகத் தீர்மானிக்கப்பட்ட ஏற்பாட்டில் என்ன நியாயம் இருக்கிறது?

Writer A Kumarseans Article on Caste system and Left Movemnts

குறிப்பிட்ட வட்டாரங்களின் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டதால் அந்தந்த வட்டாரம் சார்ந்த தொழில்கள் வளர்ந்திருக்கின்றன, இதுவொரு சமூகப் பொருளாதார வளர்ச்சி என்ற வாதமும் வைக்கப்படுகிறது. விவாதத்திற்காக அதை ஏற்றுக்கொள்வதானால்எல்லா வட்டாரங்களிலும் உள்ள துப்புரவுத் தொழில் அதிலே "ஈடுபட்ட" சமூகத்தினரால்தான் வளர்ந்ததா?இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் வந்ததில்லை.

சாதியின் பிறப்பு எதுவானாலும் அதன் இருப்பு கெட்டியானது. "வீடு வாடகைக்கு விடப்படும்" என்ற அறிவிப்பைப் பார்த்து விசாரிக்கச் செல்கிற இடத்தில், வாடகை, முன்தொகை, மின்கட்டணம் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு, "அப்புறம், நீங்க என்ன ஆளுக" என்று கூசாமல் கேட்பது, சட்டப்படி தேர்தலில் வெற்றி பெற்று வந்திருந்தாலும் ஊராட்சித் தலைவர் நாற்காலியில் உட்கார விடாமல் தடுப்பது, பெற்று வளர்த்த மகளேயானாலும் காதலனோடு சேர்த்து வைக்காமல் அவனோடு சேர்த்துக் கொலையே செய்வது, இட ஒதுக்கீட்டினால்தகுதியும் தராதரமும் பாழாகிவிட்டதாக வாதிடுவது, பள்ளிக்கூடத்திலேயே சாதி கேட்கும்போது எப்படி அது ஒழியும் என்று திசை திருப்புவது, டீ கடைகளில் இரட்டைக் குவளை தண்டனைக்குரிய குற்றம் என்ற காரணத்தால் பிளாஸ்டிக் கப்புகளில் டீ கொடுக்க வைப்பது.....இப்படி காற்று நுழையாத இடத்திலும் சாதி நுழைந்திருக்கிறது.விலையுயர்ந்த நவீன குடியிருப்புகளில், பல லட்சம் விலை கொடுக்கத் தயாராக வரக்கூடிய பட்டியல் சாதிகள், பழங்குடிகளைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் விற்கப்படுவதில்லை.அப்படி விற்பதற்கு மற்றவர்கள் தடை போடுகிறார்கள் என்று கட்டுமான நிறுவனங்கள் கூறுவது பற்றித் தெரிவிக்கிறது ஒரு செய்திக்கட்டுரை (தி ஹிண்டு, ஜனவரி 20, 2019).

சாதியத்தை ஒழிப்பதில் அதன் தொடக்கம், தொடர்ச்சி பற்றிய திட்டவட்டமான புரிதல்கள் தேவை.அக்கறை மிகுந்த ஆய்வுகள் தேவை.பலரும் அப்படிப்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருவது ஆரோக்கியமானது.கொல்கத்தா பல்கலைக் கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ராஜ் சேகர் பாசு அத்தகையதோர் விரிவான ஆய்வைநடத்தியிருக்கிறார். அவர் எழுதிய, சேஜ் பப்ளிகேசன்ஸ் வெளியிட்ட 'நந்தனார்ஸ் சில்ரன் - தி பறையன்ஸ்ட்ரைஸ்ட் வித் டெஸ்டினி, தமிழ்நாடு 1850 - 1956' என்ற ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம் 'நந்தனின் பிள்ளைகள் - பறையர் வரலாறு 1850-1956'. கிழக்கு பதிப்பகத்தின் வெளியீட்டில் இதனை மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.இந்தக் கட்டுரையின் நோக்கம் புத்தக அறிமுகம் மட்டுமல்ல,அதிலிருந்து விளைகிற சாதிய ஒழிப்பு தொடர்பான சிந்தனைகளைப் பகிர்வதே.

ஒரே கதாபாத்திரம், மாறுபட்ட கதைகள்

நந்தனார் யார்?நந்தனாரின் பிள்ளைகள் யார்? சேக்கிழார் எழுதிய பெரியபுராணக் கதையின்படி புலையர் குலத்தைச் சேர்ந்த நந்தனார் தனது துடவை நிலத்தில் சொந்தச் சாகுபடி செய்தவர். கோவில் பேரிகைகளுக்குத் தோல் உரித்து வழங்கி வந்த சிவபக்தரான அவர் சிதம்பரம் ஆலயத்திற்குச் சென்று தரிசனம் செய்ய விரும்புகிறார்.குலப்பிறப்பால் உள்ளே செல்ல இயலாத துயரத்துடன் உறங்குகிற அவருடைய கனவில் சிவன் வருகிறார்.ஆலயத்தின் முன்பாகத் தீக்குழி அமைத்து அதில் நுழைந்து வந்தால் தன்னை அடையலாம் என்கிறார்.ஊரின் பார்ப்பணர்கள் கனவிலும் தோன்றி நந்தானாருக்குத் தீக்குழி அமைக்கக்கூறுகிறார்.அந்த நெருப்பில் இறங்கி நடந்து வருகிற நந்தனார் புலைய உடல் நீங்கி, பிராமண ஞானி உடல் பெற்றவராக இறைவனின் பாதத்தில் ஐக்கியமாகிறார்.இன்னொரு நாயன்மாராகப் போற்றப்படுகிறார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவி கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய 'நந்தனார் சரித்திரம்' நூலின்படி, ஒரு பிராமணப் பண்ணையாரின் நிலத்தில் அடிமை போல வேலை செய்து வந்த நந்தனார், சிதம்பரம் ஆலயத்திற்குச் சென்று சிவதரிசனம் செய்யப் பெருவிருப்பம் கொள்கிறார். பண்ணையார் அடுத்தடுத்து வேலைகளைக் கொடுக்கிறார்.தீவிரமாக உழைத்து அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு ஒருநாள் புறப்படுகிறார்.அங்கே, தன் பிறப்பை எண்ணித் துயரத்தோடு உறங்க, கனவில் வந்த சிவபெருமான்அக்கினியில் மூழ்கி வரக் கூறுகிறார்,சிவன் ஆணைப்படி அந்தணர்கள் அமைத்த தீக்குழி வழியாக வருகிற தன் பக்தனை சிவன்ஆட்கொள்கிறார். கோபால கிருஷ்ண பாரதியின் கவிச் சிறப்பாலும், நாடகம், திரைப்படம் என வந்ததாலும அவர் எழுதிய கதையே எல்லோருக்கும் தெரியவந்திருக்கிறது என்று காஞ்சி மடத்தின் சங்கராச்சாரியார்தனது "தெய்வத்தின் குரல்" உரையில்கூறியிருக்கிறார் (காமகோடி இணையத்தளம்).

இந்த இரண்டு கதைகளுக்கிடையே வேறுபாடு இருந்தாலும், புலைய உடல் நீங்கி பிராமண ஞான உடல் பெறுவதே உயர்வானது என்ற கருத்து இருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.ஆதி திராவிடர் இயக்க ஆசான்களில் ஒருவரும் தமிழ் ஆய்வாளருமான அயோத்திதாசப் பண்டிதர் இந்த இரண்டு கதைகளிலிருந்தும் விலகி, நந்தனை ஒரு வரலாற்று நாயகராகச் சித்தரித்தார். அவர் ஒரு பௌத்த அரசர் என்றும், அவரை வஞ்சகத்தால் வரவழைத்து, சூழ்ச்சியாகச் செய்திருந்த சிதம்பரச் சூத்திரத்தில் நிற்கவைத்து உயிரிழக்கச் செய்தார்கள் என்றும் எழுதியதைப் பதிவு செய்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.

ராஜ் சேகர் பாசுவின்புத்தகம், 1890ம் ஆண்டுகளில்ஈடுபட்டது கிறிஸ்துவ ஊழியர் ஏ.சி.கிளேடன்இதர அதிகாரிகளோடு இணைந்து மறு உருவாக்கத்தில் ஈடுபட்டதைத் தெரிவிக்கிறது.அவருடைய கதையாக்கத்தின்படி,ஒதுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தனாரின் தரிசன விருப்பத்தை, சிவபெருமான் திருப்புங்கூர் கோவில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காளையை (ரிஷபம்) விலகிக்கொள்ளஆணையிட்டு நிறைவேற்றுகிறார். தொடர்ந்து பல சிவாலயங்களுக்குச் செல்லும் நந்தனார் சிதம்பரத்தில் சிவன் கூறியபடி தீக்குழியில் இறங்கி ஞானியின் உடலைப் பெறுகிறார்.

புராணமோ, வரைலாறோஒதுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு நந்தனார் ஒரு அடையாளமாகியிருப்பது உண்மை.அதன் அடிப்படையிலேயே புத்தகத்திற்கு இந்தத் தலைப்பு.

இங்கு ஏன் மாறாநிலை?

"சமுதாய வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே," என்றார் கார்ல் மார்க்ஸ்.அது முதலாளி-தொழிலாளி முரணாக, நிர்வாக-தொழிற்சங்கமோதலாக மேலாட்டமாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.ஆனால், அது சமூகப் போராட்டமாகவே நடைபெறும் என்றும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.இந்திய மண்ணில் அதற்குச் சரியானதொரு சான்றுதான் தலித் மக்களின் போராட்டம்.

குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்கிற பாவத்தை எதிர்த்தவர்கள், வர்ண வளையங்களுக்கு வெளியே தள்ளப்பட்ட சமூகங்கள் மட்டுமல்ல. சாதிப் பிரமிடுக் கட்டுமானத்தின்"உயர்நிலை" என்பதற்குக் கீழே நிறுத்தப்பட்ட பிற சமூகங்களும்தான். ஆனாலும் மிக மிக அடிப்படையான போராட்டம் தலித் மக்கள் நடத்தி வந்திருப்பதுதான்.

உலகின் வேறு பல பகுதிகளில் நடந்த சமூகப் போராட்டங்களின் வெற்றிகரமான விளைவுகளைசம உரிமைச் சட்டங்களாகவும், அதிகார வாய்ப்புகளாகவும், பொதுவெளி மரியாதையாகவும் காண முடியும்.இப்போதும் கறுப்பினத் தொழிலாளி ஜார்ஜ் ஃபிளாய்ட், ஒரு வெள்ளையின போலீசின் முழங்காலில் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது போன்ற கொடுமைகள் நடக்கின்றன.ஆயினும், ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது, தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.ஆயினும் குறிப்பிட்டுச் சொல்கிற அளவுக்குப் பெரிய மாற்றங்கள் நிகழவில்லையே, ஏன்?சாதியத்தின் பிடி அவ்வளவு வலுவாக இருக்கிறது.வர்க்கப் போராட்டத்திற்கான அணித்திரட்சிக்குச் சாதி வரப்புகள் பெருந்தடையாக இருக்கின்றன.

இதை, இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த பிரிட்டனின் முதலாளித்துவ வர்க்கம் அன்றைக்குப் புரிந்துவைத்திருந்தது. இந்தியாவில் முதலாளித்துவத்தைக் கட்டுவதற்குச் சாதியும் மதவாதமும் தடையாக இருந்தன என்று ஜெர்மன் நாட்டு சமூகவியலாளரும் அரசியல் பொருளாதார ஆய்வாளருமான மேக்ஸ் வெபர் பதிவு செய்திருப்பதை இந்தப் புத்தகம் தெரிவிக்கிறது. தற்கால இந்தியாவின் பெருமுதலாளித்துவம், அல்லது இன்றைய உலகளாவிய அடையாளத்தில் சொல்வதானால் கார்ப்பரேட்டியம், சாதிப் பாகுபாட்டையும் மதவாதத்தையும் தனது சுரண்டல் வேட்டைக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயல்வதை எதிர்கால ஆய்வாளர்கள் பதிவு செய்யக்கூடும்.

நெருக்கமான பின்னல்

சாதியின் பிடி கறாராகத் தொடர்வதற்கு ஒரு முக்கியமான காரணம் அது வலிமையாக இருப்பதோடு நுட்பமாகவும் இருப்பது.ஒரு துணியின் நூல்கள் அலசலாக நெசவு செய்யப்பட்டிருந்தால் அதைக் கிழிப்பது எளிது.நெருக்கமாக நெசவு செய்யப்பட்டிருந்தால் கிழிப்பது கடினம்.சாதியம் இங்கே நெருக்கமான நுட்பத்தோடு பின்னப்பட்டிருக்கிறது.அந்த நுட்பம் என்னவென்றால், சமூகப் பொருளாதாரக் காரணங்களைத் தாண்டிய ஒரு மனநிலை.தன்னை மேலேயிருந்து மிதிக்கிறார்கள் என்று ஆத்திரம் கொள்வதற்கு மாறாக, தன்னிடம் கீழே மிதிபடுகிறார்கள் என்று ஆறுதல் கொள்கிற மனநிறைவு. மிக உயரத்தில் வைத்துக்கொண்ட பிரிவுகளுக்கிடையேயும் "அவர்களை விட நாங்கள் மேலானவர்கள்" என்ற எண்ணமும், அடியில் தள்ளப்பட்ட பிரிவுகளுக்கிடையேயும் "எங்களை விட அவர்கள் தாழ்ந்தவர்கள்" என்ற எண்ணமும் குருதியோட்டத்தோடு ஊறிப்போனதாக ஊட்டப்பட்டு வந்திருக்கிறது.

வர்க்கப் போராட்டம் சமூகப் போராட்டமாக நடைபெறுவது என்பது இந்தியச் சூழலில் சாதியக் கட்டமைப்பின் எல்லா மேலடுக்குகளிலிருந்தும் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கும், ஒதுக்கல்களுக்கும் எதிரான அடித்தட்டு மக்களின் நெடிய போராட்டத்திற்கு ஆதரவாகக் கரம் கோர்ப்பதேயாகும்.அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் வர்க்க உணர்வு பெற்றவர்களாகத் தோள் சேர்வதேயாகும்.ஒடுக்கப்பட்ட மக்கள் பாட்டாளி வர்க்கத்தின் தோழர்கள் மட்டுமல்ல, அடிப்படையில் அவர்கள் பாட்டாளிகளுமாவர்.இந்தப் போராட்ட அணி வலுப்பெறுவதில்தான், பின்னுக்குத் தள்ளப்பட்ட அனைத்துப் பிற சமூகங்களின் சமத்துவ தாகம் தீர்வதற்கான வழியும் இருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் 1840ஆம் ஆண்டுகளில் அடிமை முறை ஒழிப்புச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.ஆயினும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை.சட்டங்களைச் செயல்படுத்துவதில் அதிகாரிகளிடையே இருந்த முரண்பாடுகள் ஒரு காரணம்.இன்னொன்று முதலில் குறிப்பிட்ட அந்த நுட்பமான உளவியல் பின்னப்பட்ட சமுதாயத்தில் சட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியவில்லை.1850களின் பிராமணர் அல்லாதார் இயக்கங்களிலும், பின்னர் நீதிக்கட்சியிலுமே கூட இந்த மனநிலை கொண்டவர்களும் இருந்தார்கள்.அவற்றிலிருந்து புறப்பட்ட திராவிட இயக்கம் மாறுபட்ட சிந்தனைகளோடு மக்களிடம் வருகிறது.

இந்த நெடும் பயணத்தில், தமிழகத்தில் ஆதி திராவிடர் மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்கிற, மறு உருவாக்கம் செய்கிற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கல்வி வாய்ப்புப் பெற்ற, நிலைமைகளை மாற்ற வேண்டும் என்ற அக்கறையோடு செயல்பட்ட சிந்தனையாளர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டார்கள். அதன் ஒரு பகுதியாக 'பறையன்' என்ற பத்திரிகை தொடங்கப்பட்டதுஉள்ளிட்ட செய்திகள் இப்புத்தகத்தில் கிடைக்கின்றன..

இயக்கங்களின் பின்னணி

ஒரு கூட்டான சுய அடையாளத்தின் வளர்ச்சியும் முக்கியத்துவமும், ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்காக அமைக்கப்பட்ட சங்கங்களின் பங்களிப்பு, அன்றைய காங்கிரஸ் இயக்கத் தலைவர்களுடன் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்கள் நடத்திய உரையாடல்கள், 1920கள்-30களில் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் தலைவர்களது கண்ணோட்டங்கள், 30களிலும் 40களிலும் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், புனா உடன்பாடும் தீண்டாமைப் பிரச்சினையை காங்கிரஸ் இயக்கம் சேர்த்துக்கொண்டதும், தீண்டாமை ஒழிப்புப் பரப்புரை, காந்தியின் ஹரிஜன இயக்கம், 1937ம் ஆண்டுத் தேர்தல்களும் ஒதுக்கப்பட்டோர் தலைவர்களை அதிகாரப்பூர்வ பகிர்வு மூலம் காங்கிரஸ் இணைத்துக்கொண்டதும், தன்னாட்சி வகையிலான அரசியல் குறித்த அம்பேத்கர் தொலைநோக்குக்கு ஏற்பட்ட பின்னடைவு ஆகிய பின்னணிகளில் தாழ்த்தப்பட்டோர் இயக்கங்கள் தொடங்கியதாகத் தெரிவிக்கிறார் ஆய்வாளர்.

உழைப்பு எடுத்துக்கொள்ளப்பட்டு சமூகம் ஒதுக்கப்பட்ட சூழலில், அந்த மக்களைக் குறிப்பிடும் "தலித்" என்ற சொல் புரட்சிகர சிந்தனையாளர் ஜோதிராவ் புலே எழுத்துகளிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார். இப்போது அந்தச் சொல் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி கொண்ட மக்கள் என்ற விரிந்த பொருளைக் கொண்டிருக்கிறது.

அந்நாட்களில் இந்த எழுச்சி உடனடியாக இரண்டு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ஒன்று ஆக்கப்பூர்வமானது .அரசியல் மட்டத்தில் பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கும் ஆதி திராவிடர் இயக்கத்திற்கும் இடையே ஒத்துழைப்பு ஏற்படுகிறது. எதிர்மறைத் தாக்கமாக, ஊர் மட்டத்தில் ஆதி திராவிடர் மக்கள் மீது அவர்களை ஒடுக்கிய சாதிகளைச் சேர்ந்த நில உடைமையாளர்களும் அவர்களால் தூண்டிவிடப்பட்டவர்களும் வன்முறைகளைத்தொடுக்கிறார்கள். பிழைப்புக்கு ஆதாரமாக இருந்த நிலத்திலிருந்து வெளியேற்றுகிற கெடுபிடிகளைச் செய்கிறார்கள். ஏன் அப்படித் தாக்க முடிந்தது என்றால், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த உழவுத் தொழிலாளிகள் நிலம் சார்ந்த அடிமையாகத் தங்களைத் தாங்களே விற்றுக்கொண்ட நிலையில் இருந்தார்கள்.இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா என்ற ஆதங்கத்துடன் ஆதி திராவிடர் இயக்கங்கள் எழுகின்றன.

ஆக, திராவிட இயக்கத்திற்கும் சுயமரியாதை இயக்கத்திற்கும் முன்பாகவே ஆதி திராவிடர் இயக்கம் உருவெடுத்துவிட்டது என்று தெரிகிறது. அதே போல, எல்லோருக்கும் முன்பாகவே பூர்வீகக் குடிகளாக இங்கே வாழ்ந்தவர்கள் ஆதி திராவிட மக்கள் என்று நிறுவுகிற முயற்சியும் வரலாற்று மீட்புப் பதிவுகளில் மேற்கொள்ளப்பட்டது.

பிரித்து ஆண்டார்களா, பிரித்ததை ஆண்டார்களா?

இவ்வாறான களத்திற்குத்தான், பிரிட்டிஷ் ஆட்சியின் முன்னோடியாக கிழக்கிந்தியக் கம்பெனி வருகிறது.பிரித்தாளும் சூழ்ச்சியில் அவர்கள் இறங்கினார்கள் என்று பேசி வந்திருக்கிறோம். அதை மறுப்பதற்கில்லை என்றாலும், அவர்கள் பிரித்தாண்டார்கள் என்பதை விட, ஏற்கெனவே மக்கள் பிரித்துப் பிரித்து வைக்கப்பட்டிருந்த நிலைமையை அவர்கள் பயன்படுத்திக்கொண்டு எளிதாக வளைத்துக்கொண்டு ஆண்டார்கள் எனலாம்.இன்னொரு பக்கத்தில் ஆதி திராவிடர் வாழ்வில் அந்த ஆட்சியால் சில தாக்கங்கள் ஏற்படுகின்றன.சட்டச் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன, அரசாங்க அலுவலகங்களிலும் ராணுவத்திலும் வேலைகள் கிடைக்கின்றன.வெளிநாடுகளில் வேலை கிடைத்துப் போகிற வாய்ப்புகளும் ஏற்படுகின்றன.ராணுவத்தில் எளிய சிப்பாய் வேலைதான் என்றால் கூட அன்று அது சமூகத்தில் ஒரு மதிப்பு நிலையை ஏற்படுத்தியிருக்கும்.

குறிப்பாக ஆதிதிராவிடர் நலத்திற்கென தொழிலாளர் வாரியம் (லேபர் போர்டு) ஏற்படுத்தப்பட்டது.அதன் பொறுப்பில் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான தனிப்பள்ளிகள் அமைக்கப்பட்டன.'லேபர் ஸ்கூல்' என்று அமைக்கப்பட்டதன் வரலாற்றுப் பின்னணி இதுதான்.

இவ்வாறாக, ஆதி திராவிட மக்களின் கைகளில் பணம் புழக்கத்திற்கு வருகிறது.அதைக்கொண்டு சொந்தமாக நிலம் வாங்கிப்போடுகிறார்கள்.அன்றைய மிராசு முறையில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாகவும் அவர்களால் நிலம் வாங்க முடிந்திருக்கிறது.நில உடைமை என்பது, அது மறுக்கப்பட்டு வந்த மக்களுக்கு மிக முக்கியமானதொரு மதிப்பு நிலையைத் தருகிறது.மற்ற சமூகங்களைச் சேர்ந்த நில உடைமையாளர்களில் ஒரு பகுதியினரின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்படுகிறது.இன்னொரு பகுதியினர் அதைச் சகித்துக்கொள்ள முடியாதவர்களாகத் தாக்குதலில் இறங்குவதும் நடக்கிறது. இப்போதும் கூட தலித் மக்கள் மீதான தாக்குதல்களில் அவர்களது புதிய வீடுகள் நொறுக்கப்படுவதும், இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைக்கப்படுவதும்செய்திகளாக வரத்தானே செய்கின்றன?

நகரக் காட்சி...

நிலவுடைமை சார்ந்த சிறு மாற்றங்கள் கிராமங்களில் நடந்தன.நகரங்களில் ஆங்கிலேய ஆட்சி வருகையோடு இணைந்ததாகப் திறக்கப்பட்ட புதிய தொழிற்சாலைகளில் ஆதி திராவிட மக்களுக்கு வேலைகள் கிடைக்கின்றன.நிலையான வருவாய் உறுதியாகிறது. ஆயினும், ஊரகப் பகுதிகளின் நிலங்களில் ஏற்பட்டது போன்ற மாற்றம் நகரங்களின் தொழிற்சாலைகளில் நடந்துவிடவில்லை!

ஆலைச் சங்கு ஊதியதும் எந்திரங்கள் முன்பாக வரிசையாக நின்று வேலையைச் செய்தவர்கள், உணவுக்கான சங்கு ஒலித்ததும் எந்திரக் கூடங்களிலிருந்து வெளியே வந்து வளாகங்களுக்கு உள்ளேயே அவரவர் சாதி சார்ந்த தனித்தனிக் குழுக்களாகத்தான் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.மாலைச் சங்கு ஒலித்த பின், ஆலையிலிருந்து வெளியே வந்து அவரவர் சாதிக் குடியிருப்புகளுக்குத்தான் சென்றார்கள்.

இந்தத் தகவல்களைப் படிக்கிறபோது, 1940களில் நடந்த வேலைநிறுத்தப் போரோட்டத்தின்போது தொழிற்சங்கத் தலைவர்களுக்குக் கடிதம் எழுதிய அம்பேத்கர், "போராட்டத்திற்குப் பிறகு எல்லாத் தொழிலாளர்களும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதை உங்களால் உறுதிப்படுத்த முடியுமா," என்று கேட்டது நினைவுக்கு வருகிறது.

அதற்கு முன் 'மெட்ராஸ்' நகரின் பி அன் சி மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, அப்போதுதான் புதிய வாழ்க்கை கிடைக்கப்பெற்றிருந்த ஆதி திராவிடர் தொழிலாளர்கள் வேலைக்குப் போனார்கள். வர்க்க உணர்வற்ற தலைவர்களின் தவறான வழிகாட்டலால், வர்க்க உணர்வு வளர்க்கப்படாத பிற சமூகங்களின் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் அவர்கள் மீது சாதி அடிப்படையில் வன்முறைத் தாக்குதல் நடத்தினார்கள். புளியந்தோப்பு வன்முறை குறித்த தகவல்கள் நமக்கு சாதியத்தின் கூர்மையை மேலும் உணர வைக்கின்றன.

ஆம், "பொருளாதார மேம்பாடு" இன்றியமையாதது என்றாலும் அது மட்டுமே சமுதாய சமத்துவம்அல்ல. தொழிற்சங்கப் போராட்டம் தலையாயது என்றாலும் அது மட்டுமே வர்க்கப் போராட்டம் அல்ல.

மிஷனரிகள் தலையீடு

புத்தகத்தில், அந்தக் காலக்கட்டத்தின், கிறிஸ்துவ ஊழிய சபைகளாகிய மிஷனரிகள் வருகையால் ஏற்பட்ட தாக்கம் பற்றியும் அறிய முடிகிறது. மிஷனரி பணிகளில் ஈடுபட்ட பாதிரியார்களில் ஒரு பிரிவினர், பைபிள் வழியில் சாதி பேதத்திற்கு இடமில்லை என்ற புரிதலோடு கிறிஸ்துவத்திற்கு மாற்ற முயன்றவர்களும் இருந்தார்கள். மதத்தைப் பரப்புவதற்காகவே சாதிய ஒதுக்கல் பிரச்சினையை எடுத்துக்கொண்டவர்களும் இருந்தார்கள்.பிரச்சினைகளில் அரசாங்கம் தலையிட வலியுறுத்தி, சேவைகளில் ஈடுபட்டவர்களும் இருந்தார்கள். மிஷனரி ஊழியர்கள் இந்த மக்களின் வாழ்க்கை நிலை பற்றி ஆய்வு நடத்தி, அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்க, அதிகாரிகள் அதைப் புறக்கணித்த முரண்பாடுகளும் இருந்திருக்கின்றன.

சென்னையில் பல பகுதிகளில், குறிப்பாக தலித் மக்கள் மிகுதியாக வாழும் பகுதிகளில் மாதா கோவில்களும் தேவாலயங்களும் வந்தது எப்படி கேள்விக்கு இந்தப் பின்னணி விடையளிக்கிறது.தேவாலயத்திலேயே சாதிப் பாகுபாடு என்ற, இன்றைக்கும் அவ்வப்போது முன்னுக்கு வருகிற பிரச்சினையும் அப்போதே இருந்திருக்கிறது.ஆயினும் அந்தக் காலக்கட்டத்தில் ஆதி திராவிடர் மக்களின் வாழ்நிலையிலும் சமூக நிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களில் மிஷனரிகளின் வருகையும் பங்களித்திருக்கிறது.

தேசிய, திராவிட இயக்கங்கள்

தேசிய இயக்கத்தின் தாக்கமும் முக்கியமானது. நாடு முழுவதுமே ஒதுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளில் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் தலையிட்டது, தேசிய இயக்கத்தில் செயல்பட்ட நிலையிலேயே பெரியார் மேற்கொண்ட வழிமுறைகள் அந்தத் தாக்கத்தோடு இணைந்திருக்கின்றன.

அப்போது வந்த தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர்களிடையே இரண்டு அணுகுமுறைகள் இருந்தன. ஒரு பிரிவினர் தேர்தல் வெற்றிக்கான உத்தியாக ஆதி திராவிடர் பிரச்சினைகளில் தலையிட்டார்கள், இன்னொரு பிரிவினர் உண்மையிலேயே அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இயக்கத்தைப் பயன்படுத்தினார்கள்.

இந்நிலையில் தேர்தலில் தொகுதி ஏற்பாடுகள் தொடர்பாக காந்தி, அம்பேத்கர் இருவருக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை கவனம் பெறுகிறது.அதைத் தொடர்ந்து கையெழுத்தான புனா உடன்பாட்டை ஆதரித்தும் எதிர்த்தும் ஆதி திராவிடர் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் ஏற்படுகின்றன.அந்த முரண்பாடுகளை அன்றைய உரையாடல்களாகவே பார்க்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரையில் சரியாகவே எடுத்துக்கொண்டு ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்காகவும், பிற சமூகங்களுடனான நல்லிணக்கத்திற்காகவும் செயல்பட்டது.அந்தச் செயல்பாடு இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்தது. ஆயினும் பிற்காலத்தில், திராவிட இயக்கத்திலிருந்து உருவான கட்சிகள் ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு, அதனைத் தக்கவைத்துக்கொள்வதில்தான் அதிகமாகக் கவனம் செலுத்தின என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறது புத்தகம்.

தேர்தல் அரசியலால்தான் சாதிகள் வளர்ந்தன என்று சிலர் சொல்வதுண்டு.ஆனால் ஆதி திராவிடர் மக்கள் தங்களை அரசியல் களத்தில் உறுதிப்படுத்திக்கொண்டது தேர்தலால் நடைபெற்றது.

கம்யூனிஸ்ட்டுகள் வருகை

1920ம் ஆண்டுகளிலில் கம்யூனிஸ்ட் இயக்கமும் களத்திற்கு வந்துவிட்டது.ஆதி திராவிடர் பிரச்சினைகளில் கம்யூனிஸ்ட்டுகளும் வலுவாகத் தலையிட்டார்கள்.கட்சிக்குப் பயன்படுத்துவதற்காக அல்லாமல், ஆதி திராவிடர்களான விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்குக் கட்சியைப் பயன்படுத்தினார்கள்.தஞ்சை உள்ளிட்ட வட்டாரங்களில் பள்ளர் கட்சி, பறையர் கட்சி என்று சொல்லப்படுகிற அளவுக்குக் கம்யூனிஸ்ட் இயக்கம் அடையாளம் பெற்றது.திராவிட இயக்கத்தினரும் கம்யூனிஸ்ட்டுகளும் ஆதி திராவிடர் பிரச்சினைகளைக் கூட்டாகவும் தனித்தனியாகவும் கையில் எடுத்தார்கள்.

கம்யூனிஸ்ட்டுகளின் வருகைக்குப் பிறகு புரட்சிகளின் பக்கம் போய்விடுமோ என்ற பார்வையோடு காங்கிரஸ் தலைமையும், சுதந்திர இந்தியாவின் அரசும் புதிய அணுகுமுறைகளைக் கையாண்டார்கள். பரம்பரை அடிமையாக்கிச் சுரண்டுவதற்கு முடிவு கட்ட கம்யூனிஸ்ட்டுகள் போராடி, விவசாயத் தொழிலாளர்களுக்கான கூலி ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருந்தன.நாடு விடுதலை பெற்ற பிறகு 1952ல் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இப்படியொரு சட்டத்தைக் கொண்டு வர வலியுறுத்தி வந்த கம்யூனிஸ்ட்டுகள், இப்போது சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வலியுறுத்தும் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆச்சார்யா வினோபா பாவே முன்மொழிவில் நாடு முழுக்க பூதான இயக்கம் நடைபெற்றது.மிகுதியாக நிலம் வைத்திருந்தவர்கள் அதில் ஒரு பகுதியை அரசாங்கத்திடம் தானமாக ஒப்படைக்கிற, அதை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு அளிக்கிற இயக்கம் அது. நிலத்தை அரசாங்கம் கைப்பற்றி விநியோகிக்க வலியுறுத்தும் போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் நடத்திக்கொண்டிருந்த நிலையில், இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஆதி திராவிட மக்களில் கணிசமான பகுதியினரை அரசின் பக்கம் திருப்பின. குத்தகைதாரர்கள் பெருமளவுக்கு கம்யூனிஸ்ட்டுகளின் பக்கம் நின்றார்கள்.

ஒருவழிப் பாதையல்ல

புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுகிற இந்த வரலாற்று நிகழ்வுகள் ஒரு உண்மையைப் பளிச்சென்று காட்டுகின்றன: உழைப்பாளி மக்களை வர்க்கமாக அணி திரட்டுவதில் இன்னும் முழு வெற்றி கிட்டிவிடவில்லை. இது இடதுசாரிகள், ஜனநாயக சக்திகளின் குறை மட்டுமல்ல. முதலில் குறிப்பிட்ட சாதியக் கட்டமைப்பின் வலிமையும் நுட்பமும் ஓர் அடிப்படையான காரணம்.

இன்றைக்கு தேர்தல் தேவைகள் சார்ந்ததாக, தலித் சமூகங்களையும் இணைத்துக்கொண்ட அரசியல் கூட்டுகள் சாத்தியமாகியிருக்கின்றன, ஆனால் அது அடிப்படை மாற்றங்களுக்குத் தேவையான சமூகக் கூட்டாக உருப்பெறவில்லை.

"அது ஒன்றும் ஒருவழிப் பாதையல்ல, அதற்குப் பல ஆழமான பலவீனங்கள் தடையாக இருக்கின்றன.அந்தப் பலவீனங்கள் முக்கியமாக தேச அரசு என்பது பற்றிய குறுகிய அரசியல் புரிதல்களிலிருந்தே வருகின்றன.சில நேரங்களில் அந்தக் குறைபாடுகள் புகட்டப்பட்ட, செயற்கையான நடைமுறைப்போக்குகளாகக் காட்சியளிக்கின்றன.சில நேரங்களில் ஒரு கூட்டான ஒட்டுமொத்தக் கண்ணோட்டமாக முன்னுக்கு வருகின்றன. அதில் எதிரெதிரான வர்க்க அடையாளங்களும் சாதி அடையாளங்களும், வட்டார அடையாளங்களும், தேசம் என்ற தலையாய கருத்தாக்கத்தோடு இணைந்திருக்கின்றன," என்று புத்தகத்தை முடித்திருக்கிறார் ஆய்வாளர் ராஜ் சேகர் பாசு.

ஆங்கிலப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தாகிவிட்டது.இத்தகைய ஆய்வுநூல்கள் இந்தியாவின் இதர மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படக் கூடும்.மிக முக்கியமான மொழிபெயர்ப்பு ஒன்று நடந்தாக வேண்டும்.அந்த மொழிபெயர்ப்பின் பெயர் "செயல்". ஆய்வுகள் காட்டுகிற வரலாறுகளிலிருந்து, சரியான பாதைகளை வகுக்கிற புரிதல்களிலிருந்து சமத்துவ மாற்றத்திற்கான அந்த மொழிபெயர்ப்பு நடைபெறும்போது புதிய அத்தியாயம்வரையப்படும்.அதுவே நந்தனார் தியாகத்தின் தர்க்கப்பூர்வ வரலாறாக உருவாகும்.ரத்த உறவுகளாக மட்டுமல்லாமல், சித்த உறவுகளாகவும் கைகோர்க்கும் நந்தனின் பிள்ளைகள் அந்த வரலாறை எழுதுவார்கள்.

English summary
Here is an artilce from writer A Kumaresan on Caste Sytem and Left Movements.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X