• search
keyboard_backspace

கால்களுக்கு சம தளமா, தலைகளுக்கு சம வானமா – எது சமூகநீதி? அ.குமரேசன்

Subscribe to Oneindia Tamil

வாழ்க்கையில் ஒவ்வொரு தினமும் முக்கியமானதுதான்.ஆயினும் உலக அளவில் சில தினங்கள் முக்கியத்துவத்தோடு கடைப்பிடிக்கப்படுகின்றன.மக்களின் பண்பாட்டு வாழ்க்கையோடு இணைந்துவிட்ட புத்தாண்டு தினம், காதலர் தினம் போன்ற சில தினங்கள் அதிகாரப்பூர்வ ஏற்பாடுகள் இல்லாமலே கொண்டாடப்படுகின்றன.ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கீகாரத்தோடு கடைப்பிடிக்கப்படுகிற தினங்களும் இருக்கின்றன. கல்வி தினம், மகளிர் தினம், மனித உரிமைகள் தினம், சகோதரத்துவ தினம், அறிவியலில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தினம், தாய் மொழி தினம், பாகுபாடுகள் எதிர்ப்பு தினம், கவிதை தினம், வன விலங்குகள் தினம், பூமி தினம், படைப்பாக்க தினம், புத்தக தினம், குடும்ப தினம், அகதிகள் தினம், பூர்வீகக் குடிகள் தினம், அணு ஆயுத ஒழிப்பு தினம், மொழிபெயர்ப்பு தினம், ஊரகப் பெண்கள் தினம், குழந்தைகள் தினம், புலம்பெயர்ந்தோர் தினம், மனித ஒருமைப்பாட்டு தினம்... உள்ளிட்ட தினங்கள் ஐ.நா. அறிவிப்பின்படி கடைப்பிடிக்கப்படுகின்றன.

அந்தந்தத் துறைகள் சார்ந்த அலுவலகங்களில் மட்டும் சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்குத் தெரியாமலே போய்விடுகிற தினங்களும் உண்டு. "அக்கறைக்குரிய பிரச்சினைகள் குறித்துப் பொதுச்சமூகத்திற்குக் கற்பிக்கவும், உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் உறுதிப்பாடு மற்றும் நிதியாதாரத்தைத் திரட்டவும், மானுட சாதனைகளைக் கொண்டாடி வலுப்படுத்தவும் உலக தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன," என்று ஐ.நா. ஆவணம் கூறுகிறது. இந்த நோக்கங்கள் நிறைவேற, இத்தகைய தினங்கள் தொடர்புடைய அமைப்புகளோடு சுருங்கிவிடாமல் உலகச் சமுதாயத்தின் கொண்டாட்டமாகவும் கடைப்பிடித்தலாகவும் மாறியாக வேண்டும். கொரோனா தடுப்புக்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பராமரித்தல்போன்ற செயல்கள், முன்னே பின்னே இருந்தாலும் பொதுவாக அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்படுகின்றன.உயிர் அச்சத்தால் அது உலகளாவிய நடைமுறைக்கு வந்தது போல, உணர்வார்ந்த அக்கறையால் இந்தத் தினங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.இந்தத் தினங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னணிகள், நிலைமைகள், இலக்குகள் ஆகியவற்றை உலக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.அரசுகளுக்கும் அமைப்புகளுக்கும் இந்தத் தினங்களைக் கடைப்பிடிப்பதோடு, மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளச் செய்கிற பொறுப்பும் இருக்கிறது.

Writer A Kumaresans Article on Social Justice

அத்தகைய ஒரு முக்கியமான தினம்தான் உலக சமூகநீதி தினம்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20 அன்று இந்தத் தினம் வருகிறது. சமூகநீதி லட்சியங்களோடு செயல்படுகிற இயக்கங்கள் தவிர்த்து அரசாங்கத்தாலோ, அரசியல் கட்சிகளாலோ, தொழிலாளர், உழவோர், மாதர், மாணவர், இளையோர் அமைப்புகளாலோ கொண்டாடப்படுமானால் இந்தத் தினத்தின் முக்கியத்துவம் பற்றிய செய்தி பரவலாக மக்களைச் சென்றடையும். பள்ளிகளில், கல்லூரிகளில்இந்தத் தினம் கொண்டாடப்படுமானால், சமூக நீதி பற்றிய அடிப்படைப் புரிதல்கள் ஏற்படும், அதற்கு எதிரான செயல்கள் பற்றிய எச்சரிக்கை விழிப்படையும்.

உலக தினங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கருப்பொருள் ஒன்று அறிவிக்கப்படும்.2021ம் ஆண்டுக்கான உலக சமூகநீதி தின கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருப்பது "டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூகநீதிக்கான அறைகூவல்," என்பதாகும். புத்துணர்ச்சி மிகுந்த இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அறிவும் தகுதியுமே அடிப்படை, சமூகநீதி அது இது என்று இப்போதும் பேசிக்கொண்டிருப்பது கால மாற்றத்திற்கு ஒவ்வாத பழமைவாதம் என்ற மேல்தட்டுத்தனமான வியாக்கியானங்கள் சுற்றிவருகின்றன. சிலர் நேரடியாகச் சமூகநீதிக் கோட்பாட்டையும் அதற்கான ஏற்பாட்டையும் எதிர்க்க மாட்டார்கள். ஆனால், இந்த டிஜிட்டல் யுகம் தன்னியல்பாகவே சமூகநீதியை நிலைநாட்டிவிட்டது என்றும், ஒருவர் எப்படிப்பட்ட பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் தனி ஏற்பாடுகள் இல்லாமலே டிஜிட்டல் அறிவோடு முன்னேற முடியும் என்றும் வாதிடுவார்கள். இப்படிப்பட்ட இரைச்சல்களுக்கு நடுவே, "டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமூகநீதிக்கான அறைகூவல்," என்ற கருப்பொருள் புத்துணர்ச்சியூட்டுகிற ஒரு பெரு முழக்கமாகவே எழுகிறது.

டிஜிட்டல் இடைவெளி

"உழைப்பு உலகத்தை டிஜிட்டல் பொருளாதாரம் மாற்றிக்கொண்டிருக்கிறது," என்று ஐ.நா.அறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது."கடந்த பத்தாண்டுகளில் (இணையத்தள) பிராட்பேண்ட் இணைப்பு, (ஒரு இடத்தில் பதிவேற்றியதை எங்கே வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள முடியும் என்கிற) கிளவுட் கம்ப்யூட்டிங், (தகவல்களாகிய) 'டேட்டா' ஆகியவை விரிவடைந்து, டிஜிட்டல் தளங்கள் பெருகுவதற்கு இட்டுச்சென்றுள்ளன. இவை பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும், சமூகங்களிலும் ஊடுருவியிருக்கின்றன. 2020 முற்பகுதியிலிருந்து, கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கங்கள் தொலைவிலிருந்தபடி வேலை செய்யும் ஏற்பாடுகளுக்கு இட்டுச்சென்றுள்ளன. பல்வேறு தொழில் செயல்பாடுகள் தொடர்வதற்கு வழிசெய்துள்ளன. அது டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் மேற்கொண்டு வலுப்படுத்தியுள்ன. பெருந்தொற்று நெருக்கடி வளர்ந்த, வளர்கிற நாடுகளுக்கு உள்ளேயும் இடையேயும் பரவலாகவும் டிஜிட்டல் இடைவெளியை அப்பட்டமாக ஏற்படுத்தியிருக்கிறது, மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பங்கள்,இணையம் ஆகியவை கிடைப்பதிலும், கட்டுப்படியாகக் கூடிய செலவில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதிலும் அந்த இடைவெளி ஏற்பட்டிருக்கிறது. இது தற்போதுள்ள சமத்துவமின்மைகளை ஆழப்படுத்தியுள்ளது," என்று அந்த அறிவிப்பு மேலும் கூறுகிறது.

டிஜிட்டல் பணித்தளங்கள் வருவாய்க்கான சில வாய்ப்புகளையும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு நெகிழ்வான பணி ஏற்பாடுகளிலிருந்து சில பலன்களையும் அளித்துள்ளன என்ற போதிலும், சில சவால்களையும் முன்நிறுத்தியிருக்கின்றன. தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் அந்தச் சவால்கள் வேலைகள், வருவாய், நியாயமான பணி நிலைமைகளுக்கான உரிமைகள், சமூகப் பாதுகாப்பு, வாழ்க்கைத்தரம், திறன் பயன்பாடு, சங்கமாகக் கூடும் உரிமை ஆகியவற்றில் கைவைக்கின்றனது. டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாறுவது கட்டுப்படியாகாத நிலையில் சிறிய, நடுத்தரத் தொழில்கள் சந்திக்க நேரிட்டுள்ள நெருக்கடிகள் பற்றியும், குறிப்பாகப் புவிக்கோளத்தின் தென்பாதி நாடுகளில் இந்த நெருக்கடிகள் முற்றிவருவது பற்றியும் ஐ.நா. கவலை தெரிவிக்கிறது.

இதனைச் சமாளித்தாக வேண்டும். தொழிலாளர் நலன்களையும் உரிமைகளையும் கண்ணியங்களையும் விட்டுக்கொடுக்காமல் முழு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துதல், பாலின சமத்துவத்தை நிலைநாட்டுதல், சமூகப் பாதுகாப்பை நிச்சயமாக்குதல், வறுமை ஒழிப்பைச் செயலாக்குதல் உள்ளிட்ட மாற்றங்களை நோக்கிச் சென்றாக வேண்டும். அதற்காக நாடுகளுக்கு உள்ளேயும், உலக அளவிலும் சரியான கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும்.அதற்கான உரையாடல்கள் நடந்தாக வேண்டும் என்று ஐ.நா.வலியுறுத்துகிறது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறிய-நடுத்தரத் தொழில்முனைவோர் உள்ளிட்டோருடன் பேசப்பட்டதாகவும் அவர்களுடைய கருத்துகள் கேட்டறியப்பட்டதாகவும் போலித்தனமாகச் சொல்லிக்கொண்டிருக்காமல், உண்மையான, நேர்மையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதன் அடிப்படையில் அந்தக் கொள்கைகள் வகுக்கப்படுவதுதான் டிஜிட்டல் யுக சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இட்டுச்செல்லும். அந்த உண்மையான, நேர்மையான பேச்சுவார்த்தைகளுக்குத்தானே பெரிதும் ஏங்க வேண்டியிருக்கிறது!

ஒவ்வாமை

ஐக்கிய நாடுகள் அமைப்பு உலகளாவிய கண்ணோட்டத்தோடு இவ்வாண்டின் சமூகநீதி தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கான இத்தகைய கருப்பொருளை, உலகத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) 2008ல் வெளியிட்ட"ஒரு நியாயமான உலகமயமாக்கலுக்கான சமூகநிநீதி குறித்த பிரகடனம், இன்றைய சூழலில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமைகள் பற்றிய அதன் அறிக்கைகள் ஆகியற்றின் அடிப்படையில் உருவாக்கி அறிவித்துள்ளது. சமூகநீதி என்ற சொல்லாக்கமே பலருக்கு ஒவ்வாமைத் திணறலைத் தருகிறது.மேற்குலகம் உள்ளிட்ட பல நாடுகளில், இன்றளவும் பல வடிவங்களில் தொடர்கிற இனவெறியும் நிறவெறியும்மண்டைகளில் குடியேறியிருப்பவர்களுக்கு அந்த ஒவ்வாமைதான்.இந்தியாவில் மதங்கள் மாறுபட்டாலும் தான் மாறாத சாதிய மேலாதிக்க ஆணவத்தில் ஊறிப்போனவர்களுக்கு அந்த ஒவ்வாமைதான்.

இந்த ஒவ்வாமைகள் காரணமாகவே, சமூகநீதி என்றாலே அது இட ஒதுக்கீடுதான் என்று பதறுகிறார்கள். அமெரிக்காவில் சமூகநீதியை நிறுவுகிற முயற்சியாகக் கல்வி நிறுவனங்களில் கறுப்பின மக்களுக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது கடுமையான எதிர்ப்புக்கு உள்ளானது. 1954ல் அவ்வாறு இன அடிப்படையில் மாணவர்களைப் பிரிப்பது சட்டத்துக்கு முரணானது என்று கூறி அதை அந்நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் வரையில் அங்கே இட ஒதுக்கீடு தொடர்ந்தது.போராட்டங்கள் தொடர்ந்தன.இட ஒதுக்கீடு என்றில்லாமல் கறுப்பின மக்களுக்கான கல்வி, வேலைவாய்ப்புகளைஉறுதிப்படுத்தும் நடைமுறைகள் 1969ல் கொண்டுவரப்பட்டன."உறுதிப்படுத்தல் நடவடிக்கை" எனப்படும் அந்த நடைமுறையில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், இனச்சிறுபான்மையினரைச் சேர்த்துக்கொள்வதற்காக இடங்களை அதிகரித்துக்கொள்ள வழி செய்யப்பட்டது. இந்த உறுதிப்படுத்தல் நடவடிக்கை கூட, 9 மாநிலங்களில் ஏற்கப்படாமலிருக்கிறது.அந்த மாநிலங்களிலும் ஏற்கச் செய்வதற்கான இயக்கங்களும் தொடர்கின்றன.

இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை ஒதுக்கித்தள்ளிவிட வற்புறுத்துகிறவர்கள் சொல்கிற காரணம், அதனால் மாணவர்களின் அல்லது வேலைக்கு விண்ணப்பிக்கிறவர்களின் "தகுதி" பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது என்பதே. எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களானாலும் உரிய மதிப்பெண் தகுதியோடு விண்ணப்பித்து இடம் பெறுவதை யாரும் எதிர்க்கவில்லையே என்று வாதிடுவார்கள். அந்தத் தகுதி பழங்குடியினருக்கோ, பட்டியல் சாதிகளிலிருந்து வருவோருக்கோ, பிற்படுத்த சமூகங்களைச் சேர்ந்தோருக்கோ சென்றடைய விடாத தடுப்புகளாக சாதிப்பாறைகள் இருந்து வந்திருக்கிற வரலாறுகளைச் சொன்னால் காதுகளோடு சேர்த்து முகங்களைத் திருப்பிக்கொள்வார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளுக்கான சில எதிர்ப்புகள் கலவரங்களோடும் இணைந்திருந்ததற்கு அந்த ஒவ்வாமையே காரணம் அல்லவா?

மாறிய காட்சி

இட ஒதுக்கீடு கொள்கை அதற்குரிய மக்களுக்கான கல்வி, அரசுத்துறை பணி என்ற வாய்ப்புகளைக் கொண்டுவந்ததோடு நிற்கவில்லை.சமுதாய வெளியிலும் திட்டவட்டமான மாற்றங்களை ஏற்படுத்தியது, தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியியில் அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பைக் கணிசமாக உறுதிப்படுத்தியது. எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் அரசு அலுவலகங்களிலும் வங்கி, காப்பீடு போன்ற நிறுவனங்களிலும் கறுப்பு முகங்களைக் காண முடிகிறது என்றால், அதற்கு இட ஒதுக்கீடு கொள்கையே காரணம்.

நாடு விடுதலையடைவதற்கு முன்பே, 1902ம் ஆண்டிலேயே கோலாப்பூர் அரசாட்சிப் பகுதியின் மன்னர் சாஹூ, அரசாங்க வேலைகளில் பிராமணர் அல்லாதோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தார்.1920ல் அதை 90 சதவீதமாக அதிகரித்தார்.தொடர்ந்து, மைசூரு உள்ளிட்ட வேறு பல மாகாண அரசாங்கங்களிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.தமிழகமும் இணைந்திருந்த மதராஸ் மாகாணத்தில் 1927ல் அரசாங்கப் பணிகளில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது. 12 பேர் பணி நியமனம் பெறுகிறார்கள் என்றால் அவர்களில் 2 பேர் பிராமணர்கள், 5 பேர் பிராமணரல்லாதவர்கள், 2 பேர் முஸ்லிம்கள், 2 பேர் ஆங்கிலோ இந்தியர்கள், ஒருவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்படியாகத் தொடங்கி, தொடர்ச்சியான போராட்ட இயக்கங்களின் வெற்றியாக, 69 சதவீதம் வரையிலான திட்டவட்டமான இட ஒதுக்கீடு கொள்கை தமிழகத்தில் நிலைநாட்டப்பட்டது. அரசாங்க சேவைகள், கல்வி நிலை, தொழில் வளர்ச்சி, பண்பாட்டு மேம்பாடு ஆகியவற்றில் தமிழகம் இன்று அடைந்துள்ள பன்முக முன்னேற்ற வரலாற்றின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இட ஒதுக்கீடு கொள்கை எழுதப்பட்டிருக்கிறது.

அந்த ஓவியம்

இரண்டு ஓவியங்களைக் கொண்ட புகழ்பெற்ற கார்ட்டூன் ஒன்றை இங்கே துணைக்கு அழைக்கலாம்.முதல் ஓவியத்தில், ஒரு விளையாட்டு மைதானவளாகச் சுவருக்கு வெளியே மூன்றுபேர்சமதளத்தில் நின்று, உள்ளே நடைபெறும் விளையாட்டைக் காண முயல்கிறார்கள்.அவர்களில் உயரமானவரால் இடையூறின்றிப் பார்க்க முடிகிறது.உயரம் குறைந்த சிறுமியால் எம்பிக் குதித்துப் பார்க்க முடிகிறது, சக்கரநாற்காலியில் அமர்ந்திருக்கிற சிறுவனுக்கோ குதிக்கவே முடியவில்லை.அடுத்த ஓவியத்தில், உயரமானவர் அப்படியே நின்று பார்க்க, சிறுமிக்கு ஒரு முக்காலி போடப்பட்டிருக்கிறது, சக்கர நாற்காலிச் சிறுவனுக்கு சாய்தள மேடை அமைக்கப்படுகிறது.இப்போது அவர்களது கால்கள் சமதளத்தில் இல்லாமல், தலைகள் சமவானில் இருக்கின்றன, மூவரும் விளையாட்டைக் கண்டு மகிழ்கிறார்கள். சமூகநீதிக்கோட்பாட்டின் பொருளை எத்தனை நயம்பட உணர்த்துகிறது இந்த இரட்டை ஓவியம்!

அண்மைக் காலத்தில், பொதுத்துறைகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது, தனியார் கல்வி நிறுவனங்கள் பெருத்துப்போயிருப்பது, சமூகநீதி லட்சியத்தையே கேள்விக்கு உட்படுத்துவது போல, "பொருளாதாரத்தில் பின்தங்கியோர்" என்ற பெயரில், இட ஒதுக்கீட்டுக்குள் வராத (அதாவது சாதிக்கட்டுமானத்தின் மேல் தளங்களைச் சேர்ந்த) பிரிவுகளுக்கு 10 சதவீதம் என்ற சட்டத்திருத்தம் போன்றவற்றால் சமூகநீதித்தளத்தில் ஆழ்ந்தஅரிமான அபாயம் ஏற்பட்டிருப்பதாக பல்வேறு இயக்கங்கள் எச்சரிக்கின்றன.அந்த அரிமானம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டது, சமூக நீதிக்கான தளம் சீர்ப்படுத்தப்பட்டது என்ற அத்தியாயம் நாளைய வரலாற்றில் எழுதப்படும் என்று எதிர்பார்ப்போம்.

இதைச் சொல்கிறபோதே, சமூகநீதி என்பது இட ஒதுக்கீடு மட்டுமல்ல என்பதையும், இதர பல களங்களிலும் அந்த நீதி நிலைநிறுத்தப்பட்டாக வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியாக வேண்டும். பெண்ணுரிமை, மாறுபாலினத்தவர் உரிமை, மாற்றுத்திறனாளிகள் உரிமை என்று மனித உரிமை சார்ந்த அனைத்திலும் வேரூன்றுவதில்தான் அது முழுமையாகத் தழைத்திருக்கும்.

அந்த வேருக்கு நீரும் உரமும் உறுதிப்படுவது எப்படி? இட ஒதுக்கீட்டிற்கான தேவையே இல்லாத, எவ்வித வடிகட்டல் சல்லடைகளும் குறுக்கிடாத, விரும்புகிற கல்வியும், நாடுகிற வேலையும், கனவுகாண்கிற சமூக மதிப்பும் இயல்பாகக் கிடைக்கிற சமூகமாக உருவெடுப்பதன் மூலமாகத்தான். பொருளாதார ஏற்றத்தாழ்வும், சாதியப் பாகுபாடும், பெண்ணடிமை வன்மமும் இன்னபிற அநீதிகளும் துடைத்தெறியப்பட்டதாக சமூக மனநிலை மாறுவதே நம்பகமான அடித்தளம்.சமூகநீதிப்பயணங்களின் இலக்கு அதுவே.

English summary
Here is Writer A Kumaresan's an Article on World Social Justice Day.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In