• search
keyboard_backspace

கொரோனாக்கள் கற்பிக்கும் மருத்துவ மாற்று அணுகுமுறை- அ.குமரேசன்

Subscribe to Oneindia Tamil

மாற்று மருத்துவம், ஒருங்கிணைந்த சிகிச்சை, பாரம்பரியப் பண்டுவம் - இவையெல்லாம் அண்மை நாட்களில் அதிகமாக முன்வைக்கப்பட்டிருக்கிற பேசுபொருள்கள்.குறிப்பாக, கொரோனா வருகைக்குப் பிறகு இவை கூடுதல் கவனம் பெற்றுள்ளன.ஆயினும், பேசுபொருள்களாக இருக்கிற அளவுக்கு, புதிய அணுகுமுறைகளுக்கு இட்டுச்செல்கிற விவாதப் பொருள்களாகிவிடவில்லை.மருத்துவம் சார்ந்த மாற்றுச் சிந்தனைகளுக்கான தேவை உணரப்பட்டாலும், அதை நோக்கிய செயல் முனைப்புகள் பெருமளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பிட்ட ஒரு மருத்துவ முறையைக் கையாளுகிற மருத்துவர்கள், அந்த முறை சார்நத ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறவர்கள், அந்த முறையில் தங்கள் நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்கிறவர்கள் எல்லோருமே அந்தந்த முறையின் எல்லைகளில் நின்றுகொள்கிறார்கள். மாற்று முறைகள் பற்றிய அறியாமையும் ஏற்பின்மையும் எங்கும் பரவலாக இருக்கிறது.தங்களுடையது மட்டுமே சரியானது என்ற நம்பிக்கை மற்ற முறைகளின் அடிப்படைகளைக் கூட தெரிந்துகொள்ள விடாமல் தடுக்கிறது.

Writer A Kumarseans Article on Alternative Medicines

உலகளாவிய கோவிட் எதிர்ப்புப் போர் அனைத்து மருத்துவமுறைகளின் அடிப்படைகளையும் அறிந்துகொண்டாக வேண்டியதன் தேவையை வலியுறுத்துகிறது.ஆனால் இது பற்றிய முழுமையான, முறையாக அமைக்கப்பட்ட விவாதங்களும் கருத்துப் பகிர்வுகளும் போதுமான அளவுக்கு இல்லை. இதில் அக்கறையுள்ள சிறு சிறு குழுவினர் பேசுகிறார்கள். அந்தந்த மருத்துவப் பிரிவினரின் மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் இதர பிரிவுகள் பற்றிய உரைகள் அவ்வப்போது இடம் பெறுவது ஆரோக்கியமானது.ஆனால் ஒரு மரியாதை அழைப்பாகவே அது நிகழ்கிறதேயன்றி, ஒரு கூட்டுச் செயல்பாட்டுக்கு வழியமைக்கிற, அதை வரவேற்கிற முயற்சியாக மேற்கொள்ளப்படுகிறதா?

அரசு கடமையை நிறைவேற்றுகிறதா?

முக்கியமாக, அத்தகைய கூட்டுச் செயல்பாட்டுக்கு வழியமைக்கிற ஒருங்கிணைப்பு முயற்சிகளை அரசுகள் ஒரு சட்டப்பூர்வக் கடமையாகவே மேற்கொள்ள வேண்டும்.அது நடக்கிறதா? உலக அளவில் மருத்துவ ஆராய்ச்சிகளையும் சேவைகளையும் ஒருங்கிணைப்பதற்கென 1948ல் தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூ.எச்.ஓ.) கூட எந்த அளவுக்கு இந்த முயற்சிகளை ஊக்குவிக்கிறது? 194 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிற அந்த அமைப்புக்கான தனது பங்களிப்பு நிதியை அமெரிக்காவின் டிரம்ப் அரசு சென்ற ஆண்டு விலக்கிக்கொண்டது. அந்த நடவடிக்கையில் சீனாவைத் தனிமைப்படுத்துகிற அரசியல் உள்நோக்கம் இருந்ததேயன்றி, உலகளாவிய மருத்துவத்தைப் பொதுமைப்படுத்துகிற அறிவியல் பொறுப்பு இருந்ததா? மக்கள் நலனுக்குப் பாதகமான டிரம்ப் ஆணைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று சொல்லிவந்துள்ள பைடன் இதில் என்ன நடவடிக்கை எடுப்பார்?பொறுத்திருந்து பார்ப்போம்.

உலக அளவில் அதிகாரப்பூர்வமான ஒருங்கிணைந்த மருத்துவ அமைப்புகள் என வேறெதுவும் இல்லாத நிலையில்பெரும் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் உரியதாக இருக்கிறதுடபிள்யூ.எச்.ஓ. அதன் திட்டங்கள் ஓரளவுக்காவது ஒப்பீட்டு ஆய்வுகளுக்கு இட்டுச்செல்வதாக இருக்க முடியும். ஆனால், அந்த நிறுவனத்தின் நிதிநிலையில், உறுப்பினர் நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்ற ஐ.நா.பொதுக்குழு தீர்மானத்தின்படி வருகிற நிதி 20 சதவீதம்தான்.மீதி 80 சதவீத நிதியை பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், ஐ.நா.வுடன் இணைந்த அமைப்புகளும், நாடுகளுக்கிடையேயான அமைப்புகளும், தனியார் துறையினரும்தான் தருகின்றன.தனியார் துறை என்பதை விரித்துப் பார்த்தால் உலக மருந்துச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகிற நிறுவனங்கள் இருக்கின்றன.அந்த நிறுவனங்களில் ஆகப்பெரும்பாலானவை எந்த மருத்துவமுறை சார்ந்த மருந்துகளை உற்பத்தி செய்து விற்கின்றன என்பதை விளக்க வேண்டியதில்லை.

'கொரியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓரியன்டல் மெடிசன்' என்ற நிறுவனம் 'இன்டகிரேட்டிவ் மெடிசன் ரிசர்ச்' என்ற காலாண்டிதழை வெளியிட்டு வருகிறது.அதில் கிழக்கத்திய நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகள், மருந்துகள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருகின்றன.அறிவியல் ஆதார அடிப்படையிலான ஆய்வு எழுத்துகளே தேர்ந்தெடுக்கப்படுவதாக அந்தப் பத்திரிகை கூறுகிறது.மருத்துவத்துறையில் ஈடுபட்டிருப்போருக்கு அது பற்றிக் கூடுதலாகத் தெரிந்திருக்கக்கூடும்.

ஆயுஷ் முன்னுள்ள பொறுப்பு

இந்தியாவில் ஆயுர்வேதம், யோகம், நேச்சுரோபதி, யுனானி, சித்தம், ஹோமியோபதி, சோவா-ரிக்பா ஆகிய மருத்துவமுறைகளை ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவந்து அதற்காக 'ஆயுஷ்' என்ற தனி அமைச்சகமே 2014ல் ஏற்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒரு சட்டத்திருத்தம், இவற்றில் ஆயுர்வேதத்தை மட்டும் முன்னிலைப்படுத்துகிறது, அதில் சமஸ்கிருதப் பரப்பல் அரசியலும் இருக்கிறது என்று விமர்சிக்கப்பட்டது.ஆயினும் பாரம்பரிய மருத்துவமுறைகளைப் பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்குமான பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்புடன் அமைச்சகத்திற்கு வரவேற்பும் இருக்கிறது.

ஆயுஷ் மரத்தின் கிளைகளில் ஒன்றாக அக்குபங்சர் சிகிச்சையையும் அங்கீகரிப்பது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு, அது தனது அறிக்கையையும் அளித்துவிட்டது.தற்போது, அறிவியலுக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதன் அறிக்கையைத் தொடர்ந்து, பல நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள அக்குபங்சர் இந்தியாவிலும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, அக்கு சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவம் சார்ந்தவர்களிடமிருந்து இதற்கு வரவேற்பும், அலோபதி மருத்துவம் சார்ந்தவர்களிடமிருந்து இது போலி மருத்துவர்கள் பின்வாசல் வழியாக நுழைவதற்கு இடமளித்துவிடும் என்ற எதிர்ப்பும் சுற்றி வருகின்றன.

இவ்வாறு எதிர்ப்புத் தெரிவிக்கிறவர்கள் உலக மருந்துச் சந்தையிலும், மருத்துவமனைச் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்துகிற அலோபதி நிறுவனங்களின் குரல்களையே எதிரொலிக்கிறார்கள் என்று பாரம்பரிய மருத்துவ முறைகள் சார்ந்தவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.அந்த ஆதங்கத்தில் நியாயமில்லை என்று சொல்லிவிட முடியாது, அதேவேளையில் இப்படி விமர்சிக்கிறவர்கள் எல்லோரையுமே அப்படி முத்திரை குத்திவிடவும் முடியாது.உண்மையாகவே அறிவியல்பூர்வமாக, மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்வதாக இருக்க வேண்டும் என்ற சமுதாய அக்கறையோடு எச்சரிக்கிறவர்களும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

ஆதார அடிப்படை

இது பற்றிக் கருத்துக்கூறிய அறிவியல் எழுத்தாளரான நண்பர் ஒருவர், "பாரம்பரிய மருத்துவமுறைகள் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன என்றோ, அவை நம்பமுடியாதவை என்றோ சொல்ல மாட்டேன். அதே போல் அலோபதிதான் நவீன மருத்துவம் என்றும் சொல்ல மாட்டேன்.பாரம்பரிய சிகிச்சைகள் சில குறிப்பான, சிக்கலான நோய்களை அற்புதமான முறையில் குணப்படுத்துவதை அறிவேன்.ஆனால், ஆய்வுக் களத்தில் எனக்குத் தேவைப்படுவது ஆதார அடிப்படையிலான அறிவியல்பூர்வ மருத்துவம். அப்படி அறிவியல்பூர்வ ஆதாரங்களை நிறுவுவதற்குப் பாரம்பரிய மருத்துவர்கள் முன்வருகிற வரையில் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறார்கள் என்ற விமர்சனம் தொடரத்தான் செய்யும்," என்றார்.

அப்படியெல்லாம் நிறுவிக்காட்ட வேண்டியதில்லை என்ற கறார்க்குரல்களும், தலைமுறை தலைமுறையாக வாழ்க்கை அனுபவமாகியிருப்பதை எதற்காக சபைகளில் வந்து நிறுவ வேண்டும் என்ற வாதக்குரல்களும் எழுகின்றன. அந்தக் குரல்களுக்கு நடுவே, "ஏற்கெனவே ஆவணப்படுத்துகிற முயற்சிகளும், ஒப்பிட்டு வகைப்படுத்துகிற ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டன," என்ற நிதானமான, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தத்தக்க குரல்களும் ஒலிக்கின்றன.சித்தம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவர்களாக உள்ள நண்பர்கள் இதைத் தெரிவிக்கிறார்கள்.

சித்த மருத்துவத்தில் சிறுநீரில் நெய்த்துளிகளை விட்டு, மேல் படிவத்தில் ஏற்படுகிற தோற்றங்களை வைத்து நோயை அறிகிற பரிசோதனை முறைகள் இருந்திருக்கின்றன என்று தெரிவிக்கிறார் பாரம்பரிய முறை சார்ந்த மருத்துவரான இன்னொரு நண்பர். அப்படிப்பட்ட வழிமுறைகளை வளர்த்துவிடுவதற்கு மாறாக, பாரம்பரிய மருத்துவர்களும் கூட வேதிப்பொருள் சார்ந்த பரிசோதனை அறிக்கைகளுக்காக நோயர்களை அனுப்புகிற நிலை ஏற்படுத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு?

அரசுக் கொள்கைகளால் இப்படிப்பட்ட முயற்சிகள் பின்தங்கிப்போவதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.முதலில், ஆயுஷ் அமைப்பின் கீழ் நாட்டின் பாரம்பரிய மருத்துவங்களையும் ஹோமியோபதி, யுனானி முறைகளையும் கொண்டுவந்துவிட்டு, அலோபதி முறையை மட்டும் தனி அந்தஸ்துடன் இருக்க விடுவதே ஒரு பாரபட்சமான ஏற்பாடாகிறது. அடுத்து, அலோபதியில் பட்டம் பெறுகிற ஒருவர், சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று பாரம்பரிய மருந்துகளையும் பரிந்துரைக்க சட்ட விதிகளில் வழி இருக்கிறது.அப்படிப்பட்ட வழி பாரம்பரிய மருத்துவர்களுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுவதைக் கண்டுகொள்ளாமல் விட முடியாது.அடைக்கப்பட்ட அந்த வழியைத் திறப்பது யார்?அரசுதானே அதைச் செய்ய வேண்டும்?மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றங்களுக்கும் செல்கிறவர்கள் இதற்காக வலியுறுத்த வேண்டாமா?

உடல்நலம், உணர்வுநலம், செயல்நலம் ஆகியவற்றோடு மனிதர்கள் உயிர் வாழ்வதற்கானது மருத்துவம்.ஆகவே அது அறிவியல்பூர்வமானதாக இருக்க வேண்டும் என்று கோரப்படுகிறது."ஒருபுறம், வணிக வலைகள் இருப்பது உண்மை.பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கி இன்று வரையிலான அரசியல் பின்னணிகள் இருப்பதும் உண்மை.இன்னொருபுறம், நவீன மருத்துவம் இந்த அளவுக்கு வளர்ந்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்றால், அதற்கு அறிவியல் பூர்வ ஆதார அடிப்படையிலான நிரூபணங்கள் முக்கியமான காரணம்.பாரம்பரிய மருத்துவ முறைகளில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் வலியுறுத்தப்பட்டாக வேண்டும்," என்கிறார்கள்.

சுயம்புவல்ல நவீனம்

முற்றிலும் நியாயமான வலியுறுத்தல் இது.நவீனம் என்பதே தனியாக, திடுதிப்பென்று முளைத்த சுயம்புவாகத் தோன்றியதல்ல. பாரம்பரியத்தின் வாதநியாயப்பூர்வமான பரிணாம வளர்ச்சிதான் நவீனம்.இன்றைய நவீனம் நாளைய பாரம்பரியமாகிவிடும், நாளை மறுநாள் புதிய நவீனம் பரிணமித்துவிடும்.இந்தப் புரிதலை வளர்த்தெடுக்காமல் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது உலகத்தின் முக்கியமான சோகம்.

அறிவியல் ஆராய்ச்சியும், ஆதாரப்பூர்வமாக நிறுவுவதும் எந்தவொரு குறிப்பிட்ட மருத்துவத்திற்கும் உரியதல்ல. அது பூமிக்குப் பொதுவானது.உலகின் எந்த மூலையிலும் ஒரே வகையான தெளிவுகளைத் தரக்கூடியது.ஆனால், அலோபதி மருத்துவத்திலும், மருந்துத் தயாரிப்பிலும் பின்பற்றப்படுகிற ஆராய்ச்சிமுறைகள் மட்டுமே அறிவியல்பூர்வமானவை என்ற நிலைப்பாடு மறுஆய்வுக்கு உரியது. மாற்றங்களுக்குத் தயாராக இல்லாமல் முடிந்த முடிவான கருத்தோடு இருப்பதே அறிவியல் கண்ணோட்டத்துக்கு எதிரான மனநிலைதான்.

ஆனால், பாரம்பரிய மருத்துவங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்கான அறிவியல்பூர்வ நிறுவுதல் முறையை உருவாக்கியாக வேண்டும்.ஏற்கெனவே அப்படி இருக்குமாயின் அதை வலுவாக்கி விரிவுபடுத்தியாக வேண்டும்.அப்படியான முயற்சிகளுக்கு உள்நாட்டில் ஆயுஷ், உலக அளவில் டபிள்யூ.எச்.ஓ. ஆகியவையும், பல்வேறு மருத்துவ அமைப்புகளும் துணை செய்ய வேண்டும்.இப்படித்தான் எதிர்கால மருத்துவம் இருக்கும் என்றால், மருந்து நிறுவன முதலாளிகளும் தாராளமாக நிதி மடகைத் திறப்பார்கள்.

சீனாவில் டூ யு என்ற அலோபதி மருந்து ஆராய்ச்சியாளர், மலேரியாவுக்கு சிகிச்சையளிக்கப் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மூலிகை ஒன்றின் வேதி மூலக்கூறுகளைப் பிரித்து, அவை எப்படி நோயை வெல்கின்றன என்று நிறுவிக்காட்டினார். அந்த அம்மையாருக்கு நோபல் விருது வழங்கிக் கௌரவித்திருக்கிறது உலகம். விருதுகளுக்காக இல்லையென்றாலும், நோய்களுக்கு எதிரான மனிதகுலப் போராட்டத்தின் வெற்றிக்காக இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு எல்லோரும் முன்வருவது ஒரு வரலாற்றுத் தேவை.

'கருப்பட்டி' மருந்து

ஒரு சொந்த அனுபவத்தை இங்கே பகிர்ந்தாக வேண்டும்.நாற்பது ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மஞ்சாள் காமாலையின் தாக்குதலுக்கு உள்ளானேன். அலோபதி மருத்துவரான நண்பர், சில மருந்துகளைப் பரிந்துரைத்துவிட்டு, கண்டிப்பாக மூன்று வாரங்களாவது வீட்டில் ஓய்வில் இருக்க வேண்டும், உளுந்து, எண்ணெய், தயிர் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தினார். தகவலறிந்து வந்த இரண்டு நண்பர்கள் அதிகாலையில் என்னைத் தங்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டு, கருப்பட்டி என்ற கிராமத்திற்கு, அங்கே ஒரு பாட்டியின் வீட்டுக்கு அழைத்துச்சென்றார்கள். அவர் ஒரு கோழியைப் பிடித்து, அதன் காலிலிருந்து சில துளிகள் ரத்தம் எடுத்து, எருமைத்தயிரில் கலந்து, எங்கோ சென்று பறித்துவந்த இலைகளைக் கசக்கிய சாறு ஊற்றினார்."கிழக்குப் பக்கம் திரும்பி மடக்குனு குடிச்சிருங்க தம்பி," என்றார்.அப்படி மூன்று நாட்கள் காலையில் சூரிய உதய நேரத்தில் மடக் மடக்கென்று குடித்தேன்.நான்காம் நாள் "உளுந்த வடை" சாப்பிடச் சொன்னார்.ஐந்தாம் நாள் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு ஓய்வெடுக்கச் சொன்னார்.ஆறாம் நாள் வேலைக்குப் போகச் சொன்னார்.மிகக் குறைவான தொகையை சன்மானமாகப் பெற்றுக்கொண்டார்.

அலோபதி நண்பர் பரிசோதனைகளை ஒப்பிட்டுப் பார்த்து வியப்புத் தெரிவித்தார். பின்னர் நாங்கள் கேள்விப்பட்ட தகவல், அந்தப் பாட்டியைப் பற்றித் தெரியவந்திருந்த ஒரு இளம் மருத்துவர் தனக்கே மஞ்சள் காமாலை ஏற்பட்டபோது, தனது தந்தையாரான முன்னணி மருத்துவருக்குத் தெரிவிக்காமல், தானே கருப்பட்டிக்கு நேரில் சென்று அந்த சிகிச்சையை மேற்கொண்டார்.பரிசோதனை முடிவுகளைத் தனது தந்தையாரிடம் காட்டினார்.இருவருமாகப் பாட்டியை அணுகி, அந்த மூலிகையும் கலவையும் என்னவென்று கேட்டபோது அவர் சொல்ல மறுத்துவிட்டார்."உலகத்துக்கே பயன்படும், மருந்துக்கு உங்கள் பெயரையே வைக்கிறோம்," என்றெல்லாம் கூட மருத்துவர்கள் பேசியிருக்கிறார்கள். பாட்டியோ, "இல்லைங்கய்யா. எங்க பாரம்பரியப்படி வம்சத்திலே பெண் வாரிசுக்கு மட்டும்தான் சொல்வோம்.வேற யாருக்காவது சொன்னாமருந்து பலிக்காது. அதனாலதான் உங்களுக்குச் சொல்ல மாட்டேங்கிறேன்," என்று கூறினார். அவரைப் பாராட்டிவிட்டுத் திரும்பினார்கள் மருத்துவர்கள்.இன்று அந்த ஊரில் அந்தப் பாட்டியின் பெண் வாரிசு இந்த மருத்துவத்தைத் தொடர்கிறாரா?தெரியவில்லை.

இப்படி எத்தனையோ மருத்துவ மகத்துவங்கள் மக்களறியாமல் மறைந்துகொண்டிருக்கின்றன.அவற்றையெல்லாம் மாற்று மருத்துவங்கள் என்று அடையாளப்படுத்துவதே கூட தவறு என்பேன்.அப்படிச் சொல்கிறபோது அலோபதி மட்டுமே நேரான மருத்துவம், மற்றவை அதற்கு மாற்றான மருத்துவங்கள் என்ற பொருளமைகிறது.உண்மையில் பாரம்பரிய முறைகளுக்கு மாற்றாகவே அலோபதி வந்தது.அரசியல், வணிகம், வலைப்பின்னலான ஏற்பாடு என்று அது மேலோங்கிவிட்டது - மற்றவை கீழே தள்ளப்பட்டுவிட்டன.

அவர்கள் "புரூவ்" பண்ண மாட்டேனென்கிறார்கள், அதுதான் தடையாக இருக்கிறது என்கிறார்கள் அலோபதி ஆதரவாளர்கள். உண்மைதான்.ஆனால், அந்த மருத்துவ முறைகளால் பயனில்லை என்பது உண்மையானால், அலோபதி ஆதரவு ஆராய்ச்சியாளர்களே அந்த மருந்துகளை "டிஸ்புரூவ்" பண்ணலாமே?அதற்கு என்ன தடை?

இதையெல்லாம்மனதில் கொண்டு விவாதிக்க முன்வருவதே கூட அறிவியல் அணுகுமுறைதான்.தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கொரோனா ஊரடங்குக் காலத்தின் இணையவழி நேரலையில் "மாற்று மருத்துவம்" தொடர்பாக ஒரு கலந்துரையாடலை நடத்தியது.அலோபதி, ஆயுர்வேதம், சித்தம், யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் உரையாற்றினார்கள்.நிறைவாகப் பேசிய மூத்த மருத்துவர், "ஒருங்கிணைந்த மருத்துவம் உடனடியாக சாத்தியமில்லாமல் போகலாம்.ஆனால் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை, அது சாத்தியமே," என்று கூறினார்.ஒரு பத்திரிகையாளனாக, அந்தக் கலந்துரையாடல் ஆக்கப்பூர்வமான தொடர் விவாதங்களுக்கு இட்டுச்செல்லும் என்று மிகவும் எதிர்பார்த்தேன். எல்லா எதிர்பார்ப்புகளும் கைகூடிவிடுவதில்லையே...

ஆயினும், அந்த ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கான கட்டாயத் தேவையை கொரோனாக்கள் அழுத்தமாகக் கற்பிக்கின்றன.மானுடமும் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது.ஒருபக்கச் சார்புகள் கைவிடப்பட்டால் கற்பதற்குக் குறுக்கே கிடக்கிற தடைகள் நீங்கும் - ஏனென்றால் அதுவே அறிவியல் அணுகுமுறை.

English summary
Writer A Kumarsean's Article on Alternative Medicines.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In