For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீட்டுப் பணிகளுக்கு வேண்டுமா ஊதியம்? நீதிமன்றக் கருத்தும் கமல்ஹாசன் பேச்சும்- அ.குமரேசன்

Google Oneindia Tamil News

வீடுகளில் பெண்கள் செய்கிற வேலைகளுக்கு பண ஈடு வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் கூறியுள்ள கருத்து ஒரு விவாத அலையை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் திரைப்பட நட்சத்திரமுமான கமல்ஹாசன் சென்ற மாதம் தனது தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, வீடுகளில் பெண்களின் வேலைகளுக்கு ஊதியம் அளிக்கப்படும் என்று பேசியது அந்த விவாத அலைக்கு மேலும் ஓசை சேர்த்துள்ளது. இதனை காங்கிரஸ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் வரவேற்றிருப்பது, அந்தக் கட்சி இத்தகைய வாக்குறுதியை அளிக்குமா என்று கேட்க வைத்திருக்கிறது.

பாலின சமத்துவத்தை நோக்கி எடுத்துவைக்கப்படுகிற ஓர் அடியாக, பெண்களின் வீட்டுப்பணிகளுக்கு ஊதியமளிக்கும் நடவடிக்கை அமையும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.இது நீதிமன்றத்தின் ஒரு கருத்துதான், தீர்ப்போ ஆணையோ அல்ல என்பதால் இதற்குரிய சட்டத்தைஉருவாக்குவது பற்றி அரசுகள் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கட்சியின் தேர்தல் பரப்புரையில் ஒரு வாக்குறுதியாக வருகிறபோது, மற்ற கட்சிகள் எதிர்வினையாற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது. பெண்களின் வாக்குகளை ஈர்க்கிற ஒரு கவர்ச்சிப் பேச்சாகத் தள்ளிவிடுவதற்கில்லை. குறைந்தது இதே போன்றோ, இதை விட மேம்படுத்தப்பட்டதாகவோ சில கட்சிகள் அறிவிக்கக்கூடும். அறிவிக்க வேண்டும்.

Writer A Kumarseans Article on Salary for Domestic works

பதற்றமும் பசப்பலும்

ஆணாதிக்க சமுதாய அமைப்பு அவ்வளவு எளிதாக இதனை ஏற்றுக்கொண்டுவிடாது. குடும்பப் பொறுப்புக்குச் சம்பளமா என்று கொந்தளிக்கும். இது பெண்களைப் பணத்திற்காகப் பணிவிடை செய்கிறவர்களாக மாற்றிவிடும் என்று பதறும். இல்லறப் பணிகளை இன்முகத்தோடு ஏற்றுச் செய்வதில் கிடைக்கிற மனநிறைவையும் குடும்பத்தாரின் பாசத்தையும் விட வேறென்ன ஊதியம் வேண்டும் என்று பசப்பும். பணத்துக்காக உடலை விற்பவர்கள் கூட தங்களைப் பாலியல் தொழிலாளர்கள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள், அப்படியானால் இந்தக் கருத்தின்படி வீட்டின் கட்டில் பகிர்வுக்கு ஊதியம் கொடுக்க வேண்டுமா என்று திசைதிருப்பும். பெண்ணை நம் சமுதாயம் எப்படியெல்லாம் போற்றுகிறது தெரியுமா என்று பெருமைகளின் பட்டியலைத் தரும், அந்தப் பெருமைகள் எல்லாம் அடிப்படையில் ஆணுக்குச் சேவகம் செய்யவைப்பதிலிருந்து கட்டப்பட்டதுதான் என்று எடுத்துக்காட்டினால் இதெல்லாம் மேற்கத்திய சிந்தனை என்று நழுவும்.

உண்மை என்னவென்றால், மேற்கத்திய, கிழக்கத்திய, தெற்கத்திய, வடக்கத்திய என பூமியின் எல்லாத் திசைகளிலும் இதுதான் நிலைமை. சதவீத அளவிலும் ஆண்களின் வேலைப் பகிர்விலும் சில வேறுபாடுகள், முன்னேற்றங்கள் இருந்தாலும் எல்லா நாடுகளிலும் இதுதான் மெய்மை.இந்திய உச்சநீதிமன்றம் ஒரு தீவிபத்து இழப்பீடு வழக்கில் 2001ம் ஆண்டு தீர்ப்பளித்தபோது, அந்த இழப்பீடு, உயிரிழந்தவர்களின் மனைவியருக்கு அவர்கள் வீடுகளில் செய்கிற பணிகளுக்காக வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கூறியிருந்தது. 2014ல் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்த இணையரைச் சார்ந்திருந்தோருக்கான இழப்பீடு தொடர்பாக வந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த 2021 ஜனவரி 5ம் தேதி தீர்ப்பளித்தபோது வீடுகளில் பெண்கள் செய்கிற வேலைகளின் மதிப்பு அலுவலகங்களில் ஆண்கள் செய்கிற வேலைகளுக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல என்ற கருத்தை முன்வைத்திருக்கிறது.

உலக விவாதம்

உலக நாடுகளுக்கான ஐநாசபை இதைப் பற்றி விவாதித்திருக்கிறது. கணக்கில் வராத உழைப்பாக வீடுசார் உழைப்பு இருக்கிறது, பலலட்சம்கோடிரூபாய் மதிப்புவாய்ந்த அந்த உழைப்பு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடீபி) கணக்குகளில் காட்டப்படுவதில்லை என்று தெரிவித்திருக்கிறது. இங்கிலாந்து நாட்டின்மான்செஸ்டர்நகரத்தில் 1972ல்மூன்றாவது தேசியபெண் விடுதலைமாநாடு நடைபெற்றது. அதில், மார்க்சிய இயக்கப் பின்புலமுள்ளவர்களும் இதர முற்போக்காளர்களும் உள்ளிட்ட பெண்ணியலாளர்களின் முன்முயற்சியில், பெண்களின் வீட்டு உழைப்புக்கு ஊதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வீடுகளில் பெண்களின் இலவசஉழைப்புமுதலாளித்துவ லாபக்குவிப்புக்குப் பயன்படுகிறது என்று அந்தக் கோரிக்கை மீதான விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது, முதலாளித்துவ அமைப்பில் தொழிலாளர்களுக்கு அவர்களது உழைப்புக்கான முழு மதிப்பு ஊதியமாக வழங்கப்படுவதில்லை. மாறாக, மறுநாள் அவர்கள் தெம்போடு வேலை செய்ய வரவேண்டும் என்பதற்கான அளவிலேயே வழங்கப்படுகிறது. அதன் நீட்சியாக, இல்லத்தில் பெண் செய்கிற சமையல், சலவை, குழந்தை கவனிப்பு, வீடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் கணவனைத் தெம்போடு வேலைக்கு அனுப்பிவைக்கின்றன.ஆகவே வீட்டுப் பணிசமுதாயத்தின்அடிப்படையானபணிஎன்றஅங்கீகாரம்வேண்டும்,அதற்குஅரசுஊதியம்அளிக்கவேண்டும்என்றுகோரப்பட்டது. இக்கோரிக்கையைப் பின்னர் அமெரிக்கா, கனடா, இத்தாலி உள்ளிட்ட வேறு சில நாடுகளின் பெண்ணுரிமை அமைப்புகளும் முன்வைத்தன.

ஆய்வுப் புள்ளிவிவரங்கள் இக்கோரிக்கைக்கு வலுச் சேர்க்கின்றன. 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, தொழில் என்ற கேள்விக்கு, வீட்டு வேலை என்று பதிலளித்த பெண்கள் 15 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம். ஆண்களின் எண்ணிக்கை 57 லட்சத்து 90 ஆயிரம்தான். ஊதியமில்லா வீட்டு வேலைகளில் ஒரு பெண் செலவிடும் சராசரி நேரம் ஒரு நாளில் 299 நிமிடங்கள் (ஐந்து மணி நேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவு). ஆண் செலவிடும் நேரம் 97 நிமிடங்கள் (ஒன்றரை மணி நேரத்திற்கு 7 நிமிடங்கள் அதிகம்). ஊதியமின்றிக்குடும்பத்தில் குழந்தைகளையும் உதவிகள் தேவைப்படும் பெரியவர்களையும் கவனித்துக்கொள்வதில் ஒரு பெண் ஒரு நாளில் செலவிடும் நேரம் சராசரியாக 134 நிமிடங்கள் (இரண்டேகால் மணி நேரத்திற்கு ஒரு நிமிடம் குறைவு). ஆண் செலவிடும் சராசரி நேரம் 76 நிமிடங்கள் (ஒன்றேகால் மணி நேரத்திற்கு ஒரு நிமிடம் அதிகம்).

உலகின் ஊதியமில்லா வீட்டுப்பணிகளில் 76.2 சதவீதம் (முக்கால் பங்கு) பெண்களால்தான் செய்யப்படுகின்றன என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) பதிவு செய்திருக்கிறது. அத்தகைய வீட்டுப் பணிகளில் கால் பங்குக்கும் குறைவாகவே ஆண்கள் செய்கிறார்கள்.டென்மார்க், ஸ்வீடன், நார்வே, ஐஸ்லாந்து, ஃபின்லாந்து ஆகிய ஐந்து ஸ்காண்டினேவிய நாடுகளில் வீட்டுப்பணிகள் சார்ந்த பாலின சமத்துவம் ஓரளவுக்கு எட்டப்பட்டிருக்கிறது. இந்நாடுகளில் ஊதியமில்லா இல்லக் கவனிப்புப் பணிகளில் 40 சதவீதம் வரையில் ஆண்களால் செய்யப்படுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா, மாலி ஆகிய நாடுகளில் ஆண்கள் இந்த வேலைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே செய்கிறார்கள். 53 நாடுகளின் புள்ளிவிவரங்களை ஆராய்கையில், ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு குறைந்தபட்ச ஊதியம் என்ற வகைமுறையில் கணக்ககிடுகிறபோது, ஊதியமில்லா வீட்டுப் பணிகளின் மதிப்பைப் பணமதிப்பின் அடிப்படையில் அளவிடுவதெனில், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் இடம் 9 சதவீதமாகும் என்கிறது ஐஎல்ஓ அறிக்கை.

இந்தியாவின் தொழிலாளர் படையில் பெண்களின் பங்கு (15 முதல் 64 வயது வரை) தொடர்ச்சியாகக் குறைந்து வந்திருக்கிறது. உலக வங்கி தகவல்களின்படி 2005ம் ஆண்டில் 31.79 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் பங்கேற்பு 2019ம் ஆண்டில் 20.52 சதவீதமாகச் சரிவடைந்துவிட்டது. கொரோனா கால வேலை ஒழிப்புகளில் பெண்கள் மிகுதியும் பாதிக்கப்பட்டிருப்பதால் சென்ற ஆண்டில் இந்தச் சதவீதம் மேலும் குறைந்திருக்கும் என ஊகிக்கலாம். ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் பற்றிய செய்திகள் "இந்த ஆண்டும் மாணவிகள்தான் சாதனைத் தேர்ச்சி" என்ற குறிப்போடுதான் வருகின்றன. பல சோதனைகளைத் தாண்டி இந்தச் சாதனையைப் படைக்கிற பெண்கள் பிறகு என்னவாகிறார்கள்? அவர்களின் பெரும்பாலோர் வீட்டுப் பணிகளை மட்டுமே விரும்பிச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் இது காட்டுகிறது.

பாதி வானம்

அப்படியானால், தேசத்தின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் ஆகப்பெரும்பாலானபெண்களுக்கு இடமில்லையா? முற்றிலும் அது ஆண்களுடையதுதானா? சென்ற ஆண்டு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான அமைச்சர்கள் நிலைக்குழு தனது அறிக்கையில், "உண்மையில் பெண்கள்தான் பாதி வானத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியப் பொருளாதாரத்தில் அவர்களுடைய வேலை இன்னமும் அங்கீகரிக்கப்படாததாக, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததாகவே இருக்கிறது," என்று கூறியிருக்கிறது. "வானத்தில் பாதியைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள்," என்பது சீனப்புரட்சியின் தலைமை நாயகர் மாவோ கூறிய சொற்றொடராகும். அந்நாட்டுப்பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து மீட்கப்பட்டுப் தொழில்முறைக் களங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளைப் புதிய சமுதாயம் உருவாக்கும் என்று அறிவித்தபோது இவ்வாறு அவர் கூறினார். இன்று இந்திய அமைச்சர்கள் குழு இதனைச் சொல்கிறபோது, இந்தியச் சமுதாயம் இன்னமும் அந்த நிலையை உருவாக்கவில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பாதி வானத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிற பெண்களின் பங்கேற்பை அங்கீகரிக்கவும் தேசப்பொருளாதாரத்தோடு இணைக்கவும் திட்டமிட்ட முறையிலான நடவடிக்கைகள் இஙகே மேற்கொள்ளப்படுமா?

தொழிலாளர் படையில் பெண்களின் பங்கேற்பை ஆண்களுக்கு நிகராக அதிகரிப்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 27 சதவீதம் அளவுக்கு வளர்த்துவிடும் என்று பன்னாட்டு நிதியம் தனது அறிக்கையிலும் கூறியிருக்கிறது. அதற்கான ஒரு வழியாக, இல்லம் ஆக்குவோருக்கு (ஹோம் மேக்கர்ஸ்) ஊதியம் வழங்குவதையும் பரிந்துரைத்தது. வீடு என்பது சுவர்களும் அறைகளும் உள்ள கட்டடம் மட்டுமே. இல்லம் என்பதோ உயிர்களும் உறவுகளும் உள்ள இயக்கம். அத்தகைய இல்லத்தை ஆக்குகிறவர்களில் ஆகப்பெரும்பாலோர் பெண்கள்தான்.

பெண்களின் இல்லப் பங்களிப்பு ஆண்களின் அலுவலகப் பங்களிப்புக்குத் துணையாகிறது என்கிறபோது அதற்கான ஊதிய மதிப்பை அளிப்பதில் தவறில்லை என்று, இது பற்றி 'டைம்ஸ் ஆப் இந்தியா' வெளியிட்டுள்ள காணொளி விவாதத்தில் ஒரு பகுதியினர் கூறுகிறார்கள். ஊதியம் அளிப்பது பெண்களின் உழைப்புக்கான சமூக மதிப்பாக, அவர்கள் கையில் பணம் புழங்குவது ஒரு சுய மரியாதையாக இருக்கும் என்ற கோணங்களில் வரும் ஆதரவுக் குரல்களின் நியாயங்கள் முற்றிலுமாக ஏற்கத்தக்கவை. இன்னொரு பகுதியினரோ, வீட்டுப் பணிகளுக்கு ஊதியம் வழங்குவது இல்லற உறவைக் கொச்சைப்படுத்துவதாகிவிடும் என்கிறார்கள். அன்பையும் பொறுப்பையும் வெறும் பணத்தால் மதிப்பிடுவது இந்தியக் குடும்ப மாண்பைக் கீழிறக்கிவிடும் என்ற கோணங்களில் வரும் எதிர்ப்புக் குரல்களின் பதற்றங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை. ஆதரிப்போரில் ஆண்கள் இருப்பது போலவே, எதிர்ப்போரில் பெண்களும் இருக்கிறார்கள்.

சரி, அந்த ஊதியத்தை யார் வழங்குவது? அரசாங்கமா, கணவன்மார்களா? முன்பொரு முறை நண்பர்களின் குடும்பச் சந்திப்பு விருந்தில் இது பற்றிய பேச்சு வந்தது. ஒருவர், "நான்தான் மாதாமாதம் என் முழுச் சம்பளத்தையும் பொண்டாட்டி கையிலே கொடுத்திடுறேனே. நூறு ரூபாய் குறைஞ்சாலும் சட்டையைப் பிடிக்கிறாளே," என்று கேட்க, உடனிருந்த இணையர் அவர் தலையில் குட்ட, அது சிரிப்போடு முடிந்துபோனது.

ஆனால் இது சிரிப்புக்குரியது அல்ல. முழு ஊதியத்தையும் பெண்களிடம் கொடுத்தாலும், அதிலிருந்தே உணவுச் செலவுகள் முதல் குழந்தைகளின் படிப்பு வரையில் பெண்கள் கையாளுகிறார்கள் என்றாலும், நுட்பமாகப் பார்த்தால் அடிப்படையில் அது ஆண்களின் தேவைகளை சரியாக நிறைவேற்றித் தருவதற்காகத்தான் என்பது புலப்படும்.

வேலிக்குள்நிறுத்திவிடும்...

வீட்டுப் பணிகளுக்காக ஆணோ அரசாங்கமோ நேரடியாக ஊதியம் வழங்குவதே கூட, பெண்களை அந்த வீட்டு வேலிகளுக்குள் நிறுத்துவதாகிவிடும் என்ற எச்சரிக்கும் வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. வீட்டுக்குள் எளிதில் கையாளக்கூடிய வெட் கிரைண்டர், ஓசை எழுப்பாத மிக்ஸி, எலெக்ட்ரிக் ரைஸ் குக்கர், துணிகளை உலர்த்தியும் தருகிற வாஷிங் மெஷின், உடையாத கண்ணாடி மேடையுடனான கேஸ் ஸ்டவ், காய்கறி முதல் சாம்பார் வரை செய்வதற்கான ஆவன், சாண்ட்விச் மேக்கர் என்று வந்து குடியேறினாலும், அவற்றை இயக்குகிற வேலை பெண்களிடம்தானே தரப்படுகிறது? பரம்பரை பரம்பரையாகப் பாட்டியிடமிருந்து அம்மாவிடம், அம்மாவிடமிருந்து மகளிடம், மகளிடமிருந்து பேத்தியிடம் என்று ஒப்படைக்கப்படும் சாவிக்கொத்து வளையத்தில் இந்த வேலைப்பொறுப்பும் கோர்க்கப்பட்டிருக்கிறதே?

என்னப்பா இது, பெண்ணின் வேலைச்சுமை பற்றியும் பேசுகிறீர்கள், அதற்கொரு மாற்று ஆலோசனையை முன்வைத்தால் அதையும் குறைசொல்கிறீர்கள் என்று சலிப்பொலிகளும் கேட்கின்றன. உண்மையான, உறுதியான தீர்வுதான் என்ன? வீட்டுப் பணிகளை வெளியே கொண்டுவந்து சமூகமயமாக்குவதுதான் அறிவார்ந்த தீர்வு என்று பெண் விடுதலைச் சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள். "அனைத்திந்திய ஜனநாயகமாதர்சங்கம்ஊதியம்கேட்பதுஎன்றகோரிக்கையைஎழுப்பாமல், பெண்களின்வீடுசார்உழைப்புஅங்கீகரிக்கப்படவேண்டும், அளவீடுசெய்யப்படவேண்டும், சமூகமும்திட்டம்தீட்டுபவர்களும்இதன்மதிப்பைஉணரவேண்டும்என்றுமுன்னெடுத்தது. இன்றுஇதில் அக்கறையுள்ள பல அன்பர்கள் தனிப்பட்ட முறையிலும், பல அமைப்புள் இயக்கமாகவும்வீடுசார்உழைப்புஎவ்வளவுமதிப்புமிக்கதுஎன்பதைப்பரப்புரைசெய்வது வரவேற்கத்தக்கது," என்கிறார் சங்கத்தின் மூத்த தலைவரான உ.வாசுகி.

பாலின சமத்துவக் கருத்துகளை முன்னெடுத்துச்செல்வதில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவரான அவர், "நவீனதாராளமயக்கொள்கைகள்பெண்ணின் தற்போதைய நிலைமையைமேலும்கடுமையாக்குகின்றன. பல்வேறுநல நடவடிக்கைகளிலிருந்துஅரசுதனது பொறுப்பைக் கைகழுவுகிறது. அந்தச் சேவைகள் படிப்படியாகத் தனியாரிடம் தாரைவார்க்கப்படுகின்றன. பெண்ணின்சுமையைமேலும்கனமாக்குகிற இந்த நடவடிக்கைகளை வலுவாக எதிர்க்க வேண்டாமா?. பெண்ணுரிமை ஒடுக்கப்பட்டு வந்திருப்பதற்குஆணாதிக்கம்மட்டுமல்ல, அதற்குஅடிப்படையான காரணிகளாகநிலப்பிரபுத்துவ சமுதாய போதனைகளும்முதலாளித்துவப் பசப்பல்களும்இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் பேசாமல் தேர்தல் நேரப் பரப்புரையாக ஊதியத்தை மட்டும் பேசுவது உண்மையான சமத்துவ மாற்றத்திற்கான பயணத்தைத் திசை திருப்புவதற்குத்தான் உதவும்," என்கிறார்."என்மனைவி சும்மாஇருக்கிறாள்,"என்று பல ஆண்கள்பேசுவதைக் கருத்தியல் தளத்தில் மாதர் சங்கம் சாடுகிறதுஎன்றும் கூறுகிறார்.,

ஐந்து மணிக்கு அலாரம் அடிக்க
எழுந்துபோனாள் வாசல் தெளிக்க
கோலம் போட்டு கூடம் பெருக்கி
அடுக்களை கழுவ ஆறு ஆனது.
பால் தரும்ஆள் வர
காப்பி போட்டு
எழுப்பிக் கொடுக்க ஏழு ஆனது.
சட்டினி அரைத்து இட்டிலி சுட்டு
தட்டில் தருகையில் சரியாய் இட்டு
சின்ன மகனுக்கு சீருடை மாட்டி
கேட்டுக்கு வந்து டாட்டா காட்டி
ஸ்கூலுக்கு அனுப்பி ஹாலுக்குள் நுழைகையில்
மணியோ ஒன்பது.
கணவரின் தேவை கணக்காய் முடித்து
ஆபீஸ் அனுப்பி
பத்துத் தேய்த்தபின் பார்த்தால் பத்து.
அழுக்குத் துணிகள் பொறுக்கிச் சேர்த்து
வழுக்கும் பாத்ரூம் கழுவிக்குளிக்க
பதினொன்று ஆனது.
பாஸ்கெட் எடுத்து மார்க்கெட் புகுந்து
பேரம் பேசி வாங்கி வருகையில்
நேரம் பன்னிரண்டை நெருங்கியிருந்தது.
காய்ந்த துணிகளுக்கு இஸ்திரி போட்டு
உண்டு முடிக்க ஒரு மணியானது.
அலமாரி பீரோ ஒழுங்குபடுத்தி
அறையைப் பெருக்க சரியாய் இரண்டு.
வந்தபின் கொடுக்கக் காப்பி போட்டு
பிள்ளைகளை அழைக்கச் செல்கையில் மூணு.
டியூஷன் எடுக்கணும் டிபன் செய்யணும்
ஓய்வில்லாமல் வேலை பார்த்தால்தான்
பத்து மணிக்காவது படுக்கப் போகலாம்.
எந்திரகதியில் வேலை நடக்கையில்
வந்தார் கணவர் புது நபருடனே.
காப்பி கொடுக்கையில் கணவர் சொன்னார்
"இவ என் மனைவி."
கூப்பிய கையுடன் வந்தவர் கேட்டார்
"என்ன செய்யுறாங்க?"
பட்டென்று உடனே பதில் வந்தது
"சும்மாதான் இருக்கா."

-கவிஞர் ஜீவி எழுதிய இந்தக் கவிதையை முற்போக்கு இலக்கிய மேடைகளும் பெண்ணின் சுயமரியாதை இயக்கங்களும் வரவேற்றுக் கொண்டாடின. ஆனால் சமுதாயம் இக்கவிதையின் கருப்பொருளை வரவேற்றுத் தனதாக்கிக்கொள்ளவில்லையே?

வீட்டுக்கு வெளியே வெளுப்பது!

பாலின சமத்துவக் கருத்தாக்கத்தைச் சமுதாயம் தனதாக்கிக்கொள்வதற்கான ஒரு கட்டம்தான், வீட்டுப் பணிகளை வெளியே கொண்டுவந்து சமூகமயமாக்குவது. அதன் பொருள் என்ன? "சமூகமயமாக்குவதுன்னா பாத்திரங்களை தெருவிலே போட்டு, ஊர்க்காரங்க சேர்ந்து கழுவணுமா, துணிகளை வெளியே குவிச்சு எல்லாருமா துவைக்கணுமா," என்று கேட்டுச் சிரிப்பவர்கள் இருக்கக்கூடும். கொச்சையான புரிதலிலிருந்தே சிரிக்கிறார்கள், ஆனால் ஒரு வகையில் சமூகமயமாக்கலின் நுனியைத் தொடுகிறார்கள்.

சலவையையே எடுத்துக்கொள்வோமே. துணிகளைச் சலவைக்காக வெளியே கொடுப்பது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல. காலங்காலமாக நடந்துவந்திருப்பதுதான். குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் மட்டுமே அதைச் செய்ய வேண்டும் என்று ஒதுக்கப்பட்டதும் காலங்காலமாக நடந்துவந்திருக்கிறது. இன்றைக்கு நவீன சலவையகங்கள் உருவாகி, மொத்தமாகத் துணிகளை வாங்கிச் சென்று, வெளுத்துத் தேய்த்து அழகாக அடுக்கிவைத்துக் கொடுத்துப் போகிற வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இதனையே விரிவுபடுத்தினால், அனைத்து நவீன வசதிகளும் உள்ள பொதுச் சலவைக்கூடத்திற்குத் துணிகளை அனுப்புவது, அங்கே பலரும் பணியாளர்களாக வந்து உழைப்பது என்ற நடைமுறையாக மாற்ற முடியும். பணியாளர்களாக வருகிறவர்களில் இயல்பாகப் பெண்கள் கூடுதலாக இருப்பார்கள். அலுவலகப் பணிகளுக்குத் தரப்படுவது போன்றே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். வீட்டில் செய்கிற வேலைக்கு அரசாங்கம் கருணையோடு தருகிற பணத்தை விட, பொதுச் சலவைக்கூடப் பணிக்கு உரிமையோடு பெறுகிற ஊதியம் எவ்வளவு பெரிய மதிப்பு!

பாத்திரம் கழுவுவதல் உள்ளிட்ட, வெளியே கொண்டுவரக்கூடிய பல பணிகளையும் இவ்வாறு சமூகப் பொறுப்பாக்க முடியும். ஏன், குழந்தைகள் பராமரிப்பைக் கூட இத்தகைய ஏற்பாட்டில் மேற்கொள்ள முடியும். பல பெண்கள் படிப்பு, நல்ல வேலை என்று வாய்ப்புகளைப் பெற்றாலும், குழந்தை பிறந்தபின் வேலையை விட வேண்டியவர்களாகிறார்கள். குழந்தைகள் வளர்ந்து பள்ளிக்குப் போகத் தொடங்கிய பிறகு மறுபடி வேலையில் சேரலாம் என்ற எண்ணம் மிகப் பலருக்கும் வெறும் கனவாகவே கரைந்துவிடுகிறது. இது சமூகப் பொறுப்பாக்குகிறபோது, உணவூட்டுவது, கழுவிவிடுவது, உடைமாற்றிவிடுவது, விளையாடுவது, கதை சொல்வது, மருந்துகள் கொடுப்பது உள்ளிட்ட பணிகள், நவீன பொதுப் பராமரிப்பு மையங்களில் ஊதியத்துடன் கூடிய வேலையாக்கப்படலாம். அந்த வேலைக்கு, வீடுகளில் சும்மா இருக்கும் துயரத்தைச் சந்திக்கிற பாட்டிகளும் தாத்தாக்களும் விரும்பி வருவார்கள். முதுமைக்காலத்தில் கையில் சொந்த உழைப்புக்கான பணம் புழங்குவது எவ்வளவு பெரிய கம்பீரம்!

ஜெர்மானியசமூகஜனநாயககட்சியைநிறுவியவர்களில்ஒருவரான ஆகஸ்ட்பெபெல் இதனை 140 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைத்திருக்கிறார். 1879ல்அவர்எழுதிய 'பெண்களும்சோஷலிசமும்' என்றநூலில்அரசாங்கமேஊரெங்கும்மையப்படுத்தப்பட்டஉணவகங்கள், சலவையகங்கள் போன்றவற்றை நடத்துவது பற்றிக் கூறியிருக்கிறார். அவ்வாறு அரசாங்கமே நடத்தினால், பெண்கள் தங்களது தனிப்பட்ட வேலையாக மாட்டப்பட்டுவிட்டவீட்டுப்பணி விலங்கிலிருந்து பெருமளவுக்குவிடுதலையாகமுடியும்என்று விளக்கியிருக்கிறார்.

புள்ளியை நோக்கி

இவ்வாறு பல பணிகளும் சமூகத்தின் பொதுப்பொறுப்பாக மாறுகிறபோது, பெண்ணின் பாடுகள் அங்கீகரிக்கப்பபட்டு ஒட்டுமொத்த தேசப் பொருளாதாரத்திற்கும் கணிசமான பங்களிப்பாகிவிடும். இது ஏதோ மாயவுலக கற்பனையல்ல. சோசலிச சோவியத் யூனியன் இருந்த வரையில் செயல்படுத்தப்பட்டதுதான். சமையல் என்றால் அடுப்பில் வைத்துச் சூடாக்கி இறக்குவது மட்டுமில்லையே, எரிபொருள் இணைத்தல், காய்கறி வாங்குதல், வெட்டுதல், நீர் பிடித்துவைத்தல், சமைத்த உணவைப் பரிமாறுதல் என்று எத்தனையோ இருக்கிறதே! அதெயெல்லாம் வகைப்படுத்திப் பொதுவில் கொண்டுவந்தார்கள். சமூக உணவகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக்கூட, வெனிசுலா நாட்டில் ஹியூகோ சாவேஸ் ஆட்சியில் இதுபோன்ற அணுகுமுறை கொண்டுவரப்பட்டது.

இந்த அணுகுமுறை இல்லாமல், வீட்டு வேலைகளுக்கு ஊதியம் கொடுத்துவிடுவதே தீர்வு என்று திரும்பத்திரும்ப முன்வைக்கப்பட்டு வந்ததால்தான், இதற்கான முன்முயற்சிகள் தொடங்கப்பட்ட நாடுகள் உட்பட உலகெங்கும் இன்னமும் இது இன்னமும் விவாதக்கட்டத்திலேயே இருக்கிறது. எந்தெந்த நாடுகளில் சோதனை முயற்சியாகவாவது இது மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்ற விவரம் கிடைக்கவில்லை. இந்தியாவில் 2018ம் ஆண்டில் வீட்டுப்பணிகள் பற்றிய ஒரு ஆய்வை தேசிய மாதிரிகள் ஆய்வு நிறுவனம் (என்எஸ்எஸ்ஓ) தொடங்கியது. 'இந்தியாவில் நேரப்பயன்பாடு - 2019' என்ற அதன் அறிக்கை சென்ற ஆண்டு செப்டம்பர் இறுதியில் புள்ளிவிவர அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது முதலில் பார்த்த புள்ளிவிவரங்கள் அந்த அறிக்கையில் உள்ளவைதான்.

புள்ளிவிவரங்களோடு நிற்கப்போகிறோமா, பெண்ணின் வீட்டுப்பணிகளுக்கு உண்மையான அங்கீகாரம் என்ற புள்ளியை நோக்கி நகரப்போகிறோமா?

English summary
Writer A Kumarsean's Article on Salary for Domestic works
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X