For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகத் தொழிலாளர்களே, நீங்கள் இழப்பதற்கு நிறைய இருக்கிறது ! அ. குமரேசன்

Google Oneindia Tamil News

"இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத்தவிர. அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் காத்திருக்கிறது," என்று கார்ல்மார்க்ஸ்,ஃபிரடெரிக் எங்கெல்ஸ் இருவரும் வியர்வை வர்க்கம் ஒன்றுபடுவதற்காக அறைகூவல்விடுத்தனர். திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டப்படுகிற பொன்மொழியாகிவிட்ட சொற்கள் இவை. ஆனால், உலகப் பாட்டாளிகள் முழுமையாக அதை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை -வர்க்க உணர்வு பெற்றவர்களைத் தவிர.

"இன்றைக்குத் தொழிலாளர்கள் சொந்தமாக வீடு கட்டுகிறார்கள், நகைகள் சேர்க்கிறார்கள், வீட்டில் நவீன வசதிகளைப் பொருத்துகிறார்கள், வாகனங்கள் வாங்குகிறார்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்கிறார்கள். ஆகவே அவர்கள் இழப்பதற்கு நிறைய இருக்கிறது," என்று இதற்குக் காரணம் கூறுவோர் உண்டு. "இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதே இதையெல்லாம் பெறமுடிகிற ஒரு பொன்னுலகில்தான். ஒரு கற்பனையான எதிர்காலப் பொன்னுலகிற்காக இதை இழக்கத் தொழிலாளர்கள் தயாராகஇல்லை," என்று சொல்வோரும் உண்டு. வரலாற்று வளர்ச்சியின் இன்றைய முதலாளித்துவச் சமுதாய அமைப்பிலேயே இந்தப் பொன்னுலகமாற்றம் நிகழ்ந்துவிட்டது, ஆகவே புரட்சி முழக்கங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்ற நுட்பமான போதனையும் இதில் இழையோடுகிறது.

 Writer A Kumarseans Article on Working Class

ஆனாலும், உலகத் தொழிலாளர்கள் இழப்பதற்குவீடு, வாகனம் போன்ற பொருள்களன்றி மெய்யாகவே வேறு எதுவும் இல்லையா? நிறைய இருக்கிறது. உழைப்பாளிகள் உருவாக்கிய இந்த உலகமே இருக்கிறது. லாபப் பெரும் பசிக்காகச் சுரண்டப்படுகிற இயற்கைவளம் இருக்கிறது. சக உயிரிகளும் சம்பந்தப்பட்ட இயற்கைச் சமநிலை இருக்கிறது.

எல்லாவற்றையும் விட, கட்டிக் காத்து வளர்த்து வந்திருக்கிற மனிதம் இருக்கிறது. மனித உரிமை இருக்கிறது. ஆளுடைமை அடிமைச் சமூகத்திலிருந்தும், நிலவுடைமை மன்னராட்சியிலிருந்தும் வேறுபடவில்லையோ என்று கவலையை ஏற்படுத்துகிற அளவுக்கு, உலகம் முழுதும் ஜனநாயகத்தின் பெயராலேயே ஒடுக்கப்படும் விடுதலை இருக்கிறது. அதிகாரச் சட்டங்களாலும் விதிகளாலும் பறிக்கப்படும் கருத்துச் சுதந்திரம் இருக்கிறது.

உழைப்பாளிகளுக்கு உரியவை

இவையனைத்தும் உழைப்பாளிகளுக்கு உரியவை. உழைப்பாளிகள் என்றால் நிறுவனங்களுக்குள், நிர்வாகங்களின் கீழ் ஊதியம் கொடுத்துவேலை வாங்கப்படுகிறவர்கள் மட்டுமல்ல. நிலத்தின் கொடையாக உணவை எடுத்துக் கொடுக்கிற உழவர்கள், பெருநிறுவனங்களாக அல்லாமல் எளியோரின் வருவாய்க்கு வழி செய்யும் சிறு / குறு தொழில் முனைவோரும் உழைப்பாளிகளே. தெரு முனையில் வடை சுட்டு, டீ போட்டுக் கொடுக்கிற தேநீர்க் கடைக்காரர்கள், உலோகத்தை வளைத்துத் துளைத்துத் தருகிற பட்டறையாளர்கள், கட்டிடத்தில் கட்டடம் எழுப்புகிறவர்கள்.... என கரத்தால் உழைக்கிறவர்கள் எத்தனை கோடி! அலுவலர்கள், ஆசிரியர்கள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், கணினி நுட்பவியலாளர்கள்..... என கருத்தால் உழைக்கிறவர்கள் எத்தனைகோடி! வீடுகளில், சமையல் நன்றாக இருந்தது என்ற பாராட்டு கூட இல்லாதவர்களாக, கணவரும் பிள்ளைகளும் வயிறு நிறையச் சாப்பிட்டதே பாராட்டுதான் என்று மனநிறைவடையு ம்பெண்கள் முழு நேர உழைப்பாளிகள் அல்லவா? இவர்களெல்லாம் இழப்பதற்கு நிறைய இருக்கிறது இதுவரையில் அடைந்துள்ள உலகில்.

இயற்கையான உயிராதார அமைப்புகள் வன்மத்தோடு சுரண்டப்பட்டிருப்பதால் மற்ற உயிரினங்களோடு மனிதர்களும் பேரிடரைச் சந்திக்கப் போகிறார்கள் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கிறார்கள். அணைந்து போவதற்கு முன் ஒளிர்கிற சுடராய்க் கடல்களின் ஆழத்தில் அடக்கமாகிக் கொண்டிருக்கிற பவளப்பாறைகள் முதல், கட்டாந்தரையாய் மாறிக் கொண்டிருக்கிற காடுகள் வரையில் பூமியில் இயற்கை மீதான தாக்குதல்கள் கடந்த கோடி ஆண்டுகளில் நடந்ததைவிடவும் நூறு முதல் பலஆயிரம் மடங்குகள் வரையில் வேகமாக நடந்திருக்கிறது. ஐ.நா. புவி மதிப்பீட்டு அறிக்கை (2019) இதனைத் தெரிவிக்கிறது.

அந்த அறிக்கையை வெளியிட்ட, 450 அறிவியலாளர்களும் அரசுகளின் பிரதிநிதிகளும் கொண்ட ஆய்வுக்குழு, வன விலங்குகளின் உயிரி அடர்த்தி 82 சதவீதம் சுருங்கிவிட்டதாகக் கூறியுள்ளது. உயிர்களுக்கான இயற்கைச் சூழலமைப்புகளின் பரப்பு பாதியளவுக்குப் பறி போய்விட்டது. இதனால் அழியும் நிலையில் இருக்கிற உயிரினங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து லட்சத்தைத் தொடும். முன்பு டைனோசர்கள் அழிந்ததற்குக் காரணம் இயற்கை மாற்றங்களுக்குத் தகவமைத்துக்கொள்ள இயலாமை. பூச்சிகள், புழுக்கள், மீன்கள், பறவைகள், கால்நடைகள் உள்ளிட்ட இந்தப் பத்து லட்சம் உயிரினங்கள் அழிந்து கொண்டிருப்பதற்குக் காரணம் செயற்கையான வளச் சுரண்டல்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத நிலைமை. மனிதச் செயல்பாடுகளே இதற்குக் காரணம் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், ஆகப் பெரும் காரணம் முதலாளித்துவ வேட்டைதான். இன்றைய உலகளாவிய அடையாளச் சொல்லில் குறிப்பிடுவதானால், கார்ப்பரேட் வேட்டைதான்.

பூச்சிகள் நசுங்குவதால்

பூச்சித் தொல்லை என்கிறோம், ஆனால் பல பூச்சியினங்களின் அழிவால் தடைப்பட்டது என்ன தெரியுமா? மலர்களின் மகரந்தச் சேர்க்கை! அதாவது தாவரங்களுக்குக் கர்ப்பத்தடை! காடு சுருங்கியதால் பூச்சிகளின் உயிராதாரமான பூக்கள் புதையுண்டு போக, பூச்சிகள் குறைந்ததால் காடு மேலும் சுருங்குகிறது. பூமி முழுவதுமாகப் பத்துவகைப் பூச்சிகளுக்கு ஒன்று என்ற விகிதத்தில் அழியும் நிலைக்கு வந்துள்ளன, நமக்குப் பணமதிப்பில் சொன்னால்தான் இழப்பின் அளவு புரியும் என்பதால், மகரந்தச் சேர்க்கை இழப்பால் பயிர் விளைச்சலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தின்மதிப்பு 577 பில்லியன் டாலர் - 42 லட்சத்து 68 ஆயிரத்து 620 கோடியே 3 லட்சத்து 50 ஆயிரம்ரூபாய்.

உலகின் மூத்த தொழிலான மீன்பிடிப்பில் கார்ப்பரேட் வலை வீச்சாலும், கடல் சுரங்கத் திட்டங்களாலும் ஆழிச் சூழலின் மூன்றில் இரண்டு பங்கு அழிவுச் சூழலில் தள்ளப்பட்டுள்ளது. மனிதர்கள் இயல்பாகப் பயன்படுத்தி வந்த ஆறுகளிலும் ஏரிகளிலும் கார்ப்பரேட்டுகள் இறங்கி நீரைக் கலக்கியதில், பயிர்ப் பண்ணைகளுக்காகவும் கால்நடைப் பண்ணைகளுக்காகவும் முக்கால் பங்கு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக, சுமார் 5 லட்சம் உயிரினங்கள் நீண்ட காலம் பிழைத்திருப்பதற்குப் போதுமான வாழ்விடச் சூழலை இழந்துவிட்டன.

பாலூட்டி இனங்களில் கால்வாசியும், நீர்-நிலம்வாழ் உயிரிகளில் ஐந்தில் ஒரு பங்கும் அழிவை எதிர்கொண்டிருக்கின்றன என்று உலக இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (ஐயுஎன்பி) கணக்கிட்டுள்ளது. தங்களுக்குமான மண்ணின் பரப்பு அரிக்கப்பட்டுவிட்டதால், பல உயிரினங்களின் கருவுறும் ஆற்றல் அரிக்கப்பட்டுவிட்டது. அத்துடன், பருவநிலைச் சீர்குலைவோடு ஒட்டிப் பிறக்கும் நோய்களிலும் இதர மோசமான பாதிப்புகளிலும் இந்த உயிரிகள் சிக்கியிருக்கின்றன.

சந்தைக்கான சரக்குகளாக, சில குறிப்பிட்ட பயிர்களையும் "உயர்ரக" கால்நடைகளையும் மட்டுமே வளர்க்கக் கட்டாயப் படுத்தப்படுகிறது. இதனாலும் இயற்கை வளப் பகுதிகளின் தன்மை வம்படியாக மாறுகிறது. கடந்த 300 ஆண்டுகளில் ஈரமான நன்செய் நிலப்பரப்பில் 83 சதவீதம் உலர்ந்துவிட்டது. நீரின் தரம் வீழ்ந்து பறவைகளின் வாழ்நிலை மீதும் பலத்த அடி விழுந்திருக்கிறது.

பூமியைத் தந்தது இயற்கை, அதை உலகமாய் மாற்றியது உழைக்கும் கை. உழைப்பாளிகள் இயற்கையோடு பயணித்தே மாற்றங்களை நிகழ்த்தினார்கள். செயற்கையான லாப வேட்டையும், சந்தைப்பின்னலும், இரக்கமே இல்லாமல் உழைப்பைச் சுரண்டுகின்றன. அறிவே இல்லாமல் இயற்கையையும் சுரண்டுகின்றன. இதுதொடருமானால், அருகிவரும் உயிரினங்களின் பட்டியலில் மனிதர்களும் சேர்கிற நாள் வெகுதொலைவிலா இருக்கும்?

மிதிபடும் உரிமைகள்

உழைப்பாளிகள் இழக்கக்கூடியவை இவை மட்டுமல்ல. வரலாற்றுப் போராட்டங்களால் நிலைநாட்டப்பட்ட மனித உரிமைகளை இழக்கும் அபாயமும் அச்சுறுத்துகிறது. பல நாடுகளிலும் அதிகாரப் போதை தலைக்கேறிய ஆட்சியாளர்களும், முற்போக்கான மாற்றங்களை விரும்பாத சக்திகளும் உறுத்தலே இல்லாமல் உரிமைகளைத் தாக்குகிறார்கள். இயற்கையைச் சுரண்டுவதில் ருசிகண்டவர்கள் அந்தத் தாக்குதல்கள் தொடர்வதை விரும்புகிறார்கள். பெரும்பான்மைப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினருக்கு எதிரான பகைமை விசிறிவிடப்படுகிறது. பெண்களின் சுதந்திரச் சிறகுகள் கத்தரிக்கப்படுகின்றன. மாறு பாலினத்தவர்கள், தற்பாலின உறவாளர்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தேர்வுகள் அவமதிக்கப்படுகின்றன.

இந்தப் போக்குகள் தொழிலாளர் உரிமைகளில் கைவைப்பதில் போய் முடியும் என்று அனைத்து நாடுகளின் தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்திய கவலை உண்மையாகி வருகிறது. இன்றைய பெருந் தொற்றுப் பேரிடரைச் சாக்காக வைத்துக் கொண்டு தொழிலாளர்களின் வேலை நேரம் உள்ளிட்ட உடன்பாடுகள் அப்பட்டமாக மிதிக்கப்படுகின்றன. தொழிலாளர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அரசாங்கத்தின் பொறுப்பாக்குவது தொடர்பாக உலகத் தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. அந்த இரண்டையும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அரசுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அங்கீகரிக்க மறுப்பதன் பின்னணியில் யாருடைய நலன் இருக்கிறது என்று விளக்க வேண்டியதில்லை. நியாயமான வருவாயோடும், உறுதிப்படுத்தப்பட்ட வாய்ப்புகளோடும் கூடிய "கண்ணியமானவேலை" என்ற ஐஎல்ஓ கருத்தாக்கமே பொருளற்றதாக்கப்படுகிறது.

உரிமைகள் மட்டுமல்ல, உழைப்புச் சந்தையில் தொழிலாளர் எண்ணிக்கையே சரிந்துவருகிறது. தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் (எல்.எஃப்.பி.ஆர்.) கணக்கெடுப்பு இதைக்காட்டுகிறது. இந்தியாவில் வேலை செய்யும் வயது என்று வரையறுக்கப்பட்டிருக்கும் 15 முதல் 64 வரையிலான வயதுப் பிரிவுகளைச் சேர்ந்தோரில் 64 சதவீதத்தினர் வேலைகளில் இருந்தனர் அல்லது வேலை தேடிக் கொண்டிருந்தனர். இது 2011-12ம் ஆண்டில் 56 சதவீதமாகக் குறைந்தது. 2017-18ல் 50 சதவீதத்திற்கும் குறைவாகச் சுருங்கிவிட்டது. விடுதலைக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியை எட்டியிருக்கிறது என்று கூறப்பட்ட காலக் கட்டத்தில் தான் தொழிலாளர் விகிதத்தில் இந்தச் சரிவுகள்.

தகவல்கள், புள்ளி விவரங்களின் அடிப்படையில் கருத்துகளை முன்வைப்பதன் மீது தாக்குதல் தொடுப்பதில் உலக நாடுகளின் அரசுகளிடையே தீவிரமான போட்டியே நடக்கிறது. உலகத் தொழிலாளர்கள் இழக்கிற மிக முக்கியமான உரிமை இது.

பிறகு ஏன் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் அப்படிச் சொன்னார்கள்? என்ன தான் நல்லஊதியம், எவ்வளவு வசதிகள் இருந்தாலும், அவையெல்லாம் உழைப்புக்குக் கூலியாக வந்தவையே. அந்த உழைப்பை விற்கத் தயாராக இருந்தாலும் வாங்கிக்கொள்ள முதலாளிகள் தயாராக இருந்தாக வேண்டும். அந்த வாங்கும் சக்தியிலிருந்து யாரையும் வேலைக்கு எடுக்கமுடியும், எத்தனை பேரையும் வேலையிலிருந்து தூக்க முடியும். முதலாளித்துவம் தொழிலாளர்களுக்கு வேலையளிப்பதற்காகத் தொழில் தொடங்குவதில்லை, தொழிலை நடத்துவதற்காகவே தொழிலாளர்களைச் சேர்த்துக் கொள்கிறது. ஒரு நவீன தொழில்நுட்ப வருகையால் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்றால் கொண்டாடி வரவேற்கும். தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதையும், வேலைப் பாதுகாப்பையும், நியாயமான கூலியையும், இணைந்த உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டிய அரசாங்கம் முகத்தைப் புதைத்துக் கொள்ளும். தனது உழைப்பைத் தானே முடிவு செய்கிற வல்லமை மூலதன உடைமையிலிருந்தே வருகிறது. இழக்க முடியாத அந்த உடைமையும், அதுதரும் அதிகாரமும் இல்லை என்பதாலேயே உலகத் தொழிலாளர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் சொன்னார்கள்.

இன்றைய உலகத்தில் சகமனிதர்களோடு இழப்பதற்கு நிறையஇருக்கிறது. அவற்றையும் மீட்கிற உழைக்கும் வர்க்க எழுச்சியில், வஞ்சகங்களும் துரோகங்களும் இல்லாத, இயற்கையுடன் இணக்கமான உறவுகளும், மனித சமூக சமத்துவமும், சக உயிரினங்கள் மீதான அக்கறையும் ஒளிர்ந்திடும் பொன்னுலகம் அடையப்படும்.

English summary
Here is an artilce from writer A Kumaresan on Working Class.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X