For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யானைக்குட்டிக் கவளமும் கல்விச் சாலைக் கடிவாளமும்- அ.குமரேசன்

Google Oneindia Tamil News

அந்த யானைக் குட்டிக்கு தேவையான உணவைக் கவளங்களாக உருட்டி வைக்கிறார்கள். சில நாட்கள் அதைக் கொடுக்கிறார்கள். பின்னர் அந்த உணவுக் கவளத்தை மேலே உயர்த்தி யானையின் நெற்றியில் ஒட்டிவைக்கிறார்கள். பின்னர் அந்த உணவுக் கவளத்தை மேலேஉயர்த்தி யானையின்நெற்றியை ஒட்டிவைக்கிறார்கள்.யானை தன்துதிக்கையை உயர்த்தி அதை எடுத்துக்கொள்கிறது. இவ்வாறு உணவை நெற்றியில் வைக்கிறபோதெல்லாம் குறிப்பிட்ட சிலசொற்களை சொல்கிறார்கள். சிலநாட்களில் அந்தச்சொற்களும் உணவுக் கவளமும் சம்பந்தப்பட்டிருப்பதை யானைக்குட்டி பழகிவிடுகிறது. அப்புறம்உணவுக் கவளம் இல்லாமலே அந்தச்சொற்களைமட்டும் சொல்கிறார்கள். இப்போது யானைக்குட்டிநெற்றியில் உணவு இருக்கும் என்றுநினைத்துக்கொண்டே துதிக்கையை கொண்டுசெல்கிறது.

Writer Kumaresan Article on Education Sector

இப்படித்தான் யானை எதிரே இருப்பவர்களுக்கு வணக்கம் வைக்கவும் ஆசிவழங்கவும் "கற்றுக்கொள்கிறது". ஒரு சிங்கக் குட்டி முக்காலிகள் மேல் ஏறிநிற்கக் "கற்றுக்கொள்வது" இப்படித்தான்.

சர்க்கஸ் கூடாரத்தில் இப்படி என்றால் சாலையோர மரத்தடியில் விரித்த சிறு பாயில் அடுக்கிவைத்த அட்டைகளிலிருந்து, நிகழ்காலம் ஏற்படுத்திய குழப்பத்தோடு வருகிறவருக்கு எதிர்கால நம்பிக்கையைஏற்படுத்தும்படம்ஒன்றைஎடுத்துக்கொடுக்கிறதேகிளி, அதுஜோதிடம் "கற்றுக்கொள்வது" இப்படித்தான்.

சக உயிர்கள் இவ்வாறு செய்வதை "கற்றுக்கொள்வது" என்று சொல்லலாமா? இல்லை. இது கற்றுக் கொள்வது அல்ல மாறாகப் பின்பற்றப் பயிற்றுவிக்கப்படுவது. கற்றலின் ஒரு கூறாகப் பயிற்றுவித்தல் இருக்கிறது என்றாலும் கல்வியும் பயிற்சியும் ஒன்றாகாது.

கல்வி என்பது குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டதும் பயிற்றுவிக்கப்பட்ட பதில்களைச் சொல்வதல்ல. மாறாக கேள்வி கேட்க வைப்பதே கல்வி. கேள்விகளுக்கு சரியான பதில்களைச் சொல்கிறவர்கள் மதிப்பெண்கள் பெறலாம், ஆனால் சரியான கேள்விகளைக் கேட்கிறவர்களே புதிய பதில்களைக் கண்டுபிடிக்கிறார்கள், மாற்றங்களை நிகழ்த்துகிறார்கள். தெரிந்த பதில்கள் போதுமென்று நின்றுவிடாத கேள்விகளால் உலகின் மருத்துவச் சித்தர்கள் நோய் நீக்கும் அற்புத மருந்துகளைக் கண்டுபிடித்தார்கள்.ஏற்கெனவே சொல்லப்பட்ட பதில்களோடு தேங்கிவிடாத கேள்விகளால் அறிவியலாளர்கள் பேரண்ட உண்மைகளை வெளிப்படுத்தினார்கள்.மதிப்பெண்களுக்கான பதில்களோடு சுருங்கிவிடாததால் போராளிகள் சமுதாய மதிப்பை மேம்படுத்திய மாற்றங்களை நிகழ்த்தினார்கள்.

கேள்வி கேட்கக் கற்பிக்கிறது என்பதால்தான் பல நாடுகளின் கல்வி வாய்ப்புக் கதவுகள் பெரும்பகுதி மக்களுக்கு மூடப்பட்டிருந்திருக்கின்றன.அதிகாரச் சுவர்களோடு மோதிய நெடும்போராட்டச் சாவிகள்தான் அந்தக் கதவுகளைத் திறந்துவிட்டன.கேள்வியுரிமையாகிய கல்வியுடைமையைச் சமூகப்பொதுமையாக்குவது அரசியல் களப்போராட்டமாகவும் நடந்திருப்பதை வரலாற்று அத்தியாயங்கள் காட்டுகின்றன.கல்விக்களப் போராட்டங்கள் இயல்பாகவே சுதந்திரம், சமூகநீதி, பாலின சமத்துவம், மொழியுரிமை, பண்பாட்டு மதிப்பு ஆகியவற்றோடு அந்த அத்தியாயங்கள் இணைந்திருக்கின்றன.இன்றைக்கும் இந்தியாவில், தமிழகத்தில் எழுதப்படும் அந்த அத்தியாயங்கள் நியாயமானகல்வியை நிலைநாட்டுவதில் அரசியல் இயக்கங்களின் பங்களிப்பைக் கோருகின்றன.

வாக்குறுதிக்கான கோரிக்கைகள்

கடந்தகாலப் போராட்டங்களையும் அவற்றின் வெற்றிகளையும் பட்டியலிட்டால் கூட நீண்ட பதிவாகிவிடும்.அண்மைக்கால நிகழ்வுகளையும் தற்போதைய நிலைமைகளையும மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம். 2019ல் நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வந்தபோது, அக்கறையுள்ள கல்வியாளர்களாலும், கல்வி உரிமைக்காகச் செயல்படும் அமைப்புகளாலும் பல முக்கியமான கோரிக்கைகள் உருவாக்கப்பட்டு, அரசியல் கட்சிகளிடம் தரப்பட்டன. கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளில் அந்தக் கோரிக்கைகளை இணைத்துக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டன.விதிவிலக்குகள் தவிர்த்து, எத்தனை கட்சிகளில் அந்தக் கோரிக்கைகளை முழுமையாகப் படிக்கப்பட்டிருக்கும், வாக்குறுதிகளில் இணைக்கப்பட்டிருக்கும்?அதற்கொரு தனி ஆய்வு தேவை. கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில் ஓரடி முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாத நிலையில், பின்னிறக்கத்திற்குத் தள்ளிவிடும் சூழல்கள் ஏற்பட்டிருபபதாக ஓர் அச்சத்தையும் கவலையையும் கல்விக்களச் செயல்பாட்டாளர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.விடாமுயற்சியாக, தமிழகம் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிற தற்போதைய காலக்கட்டத்தில் அந்தக் கோரிக்கைகள் மறுபடியும் கட்சிகளிடம் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

உலகின் வேறெங்கும் இல்லாத கொடிய ஏற்றத்தாழ்வுகள், பணம் இருப்போருக்கும் இல்லாதாருக்கும் வேறு வேறு ஏற்பாடுகள், சாதிப் பாகுபாடுகள் மழலையர் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரையில் படர்ந்திருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். புற்றுநோய் படர்ந்தது போன்ற இந்த நிலைமைக்கு முக்கியமானதொரு காரணமாக, கல்வி வழங்கலில்சமுதாயப் பொறுப்பு - அதாவது அரசின் பொறுப்பு - படிப்படியாகக் கைகழுவப்படுவது பற்றி எச்சரிக்கிறார்கள். தனியார் வசம் ஒப்படைக்கப்படுவது, பல்வேறு பொருள்களையும் விற்கிற கடைகள் திறந்திருக்கிற 'மால்' கட்டுவது போன்றதுதான் என்று பதறுகிறார்கள்.

வளர்ந்த நாடுகள், வளர்ந்துகொண்டிருக்கும் நாடுகள் என்று அடையாளம் பெற்றுள்ள நாடுகளில் ஒரே வகைப்பட்ட கல்விமுறைதான் நிறுவப்பட்டிருக்கிறது.பணக்காரர்களானாலும் வறியவர்களானாலும் தங்களுடைய பிள்ளைகளை ஒரே பள்ளிக்குத்தான் அனுப்பியாக வேண்டும்.அந்தப் பள்ளி அருகமைப்பள்ளியாக, பொதுப்பள்ளியாக இருக்கும்.18 வயது வரையில் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கும் நிதிப்பொறுப்பை முற்றிலுமாக அரசாங்கமே ஏற்கும்.எந்த வீட்டுக் குழந்தையானாலும் கட்டணமின்றி வரவேற்கிற பள்ளியாக இருக்கும்.அந்தப் பள்ளியின் வகுப்பறைகள் தாய்மொழியில்தான் பாடங்களை நடத்தும்.ஒரே சாலையில் இருக்கிற இரண்டு பள்ளிகளில் ஒன்று"இது காஸ்ட்லியானது" மற்றொன்று, "இது சீப்பானது" என்ற உயர்வு/தாழ்வு மனப்பான்மையைக் குழந்தைகளிடையே வளர்த்துவிடுகிற பணக்கலாச்சாரம் இதன் மூலம் தடுக்கப்பட்டுவிடும். விலையில்லாக் கணினி, சைக்கிள் போன்றவற்றைப் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவது வரவேற்கத்தக்க சிறப்பான செயல்தான்.அதை விடவும் முக்கியமாகத் தேவைப்படுவது, முன்னுரிமை அளிக்கப்பட்ட வேண்டியது கட்டணமில்லா பள்ளிதான்.இதனை உறுதிப்படுத்தக்கூடியது அரசுப்பள்ளிகளாகவே இருக்க முடியும்.

உடனடியாக அனைத்துத் தனியார் பள்ளிகளையும் மூடிவிட முடியாத நிலையில், முழுக்க முழுக்க அரசுப் பள்ளிகளே என்ற மாற்றம் நிலைநாட்டப்படுகிற நாள் வரும் வரையில், விலை பெறாமல் கல்விப்பணியாற்றுகிற தனியார் அறக்கட்டளைகளைக் கண்டறிந்து அவற்றிற்கு மட்டும் அனுமதியளிக்கலாம் என்ற, நடைமுறைக்கு இசைவாக வரக்கூடிய ஆலோசனையையும் இந்த இயக்கங்கள் முன்வைத்திருக்கின்றன.இது சாத்தியமா?1960களில் தேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடீபி) கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இன்று அதை அதிகரிக்க வேண்டுமா என்ற வினா ஒருபுறமிருக்க, அந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அரை நூற்றாண்டுக்கு மேல் கடந்துவிட்ட பிறகும் கூட இன்னமும் அது 4.6 சதவீதத்தைத் தாண்டாமலே இருககிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நிறைவேற்றினால் அனைவருக்கும் கட்டணமில்லாப் பள்ளிக் கல்வி என்ற லட்சியத்தையும் அடைய முடியும்.

குழந்தைகளைக் கைவிடும் சட்டத்திருத்தம்

18 வயது வரையில் சிறார் பருவமென வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை எந்தவொரு தொழிலிலும் - குடும்பத் தொழில் உட்பட - இறக்கிவிடக்கூடாது. ஆனால், 2016ம் ஆண்டில், குழந்தைத் தொழிலாளர்முறை ஒழிப்பு மற்றும் வரன்முறை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தம், 14 வயது வரையில் குழந்தைகளை எந்தத் தொழிலும் ஈடுபடுத்தக்கூடாது என்றும், அதற்கு மேல் 18 வயது வரையில் அபாயகரமான தொழில்களில் இறக்கிவிடக்கூடாது என்று கூறுகிறது. இது குழந்தை நீதிக்கு எதிரானது, 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வேறுவகையான தொழில்களில் ஈடுபடுத்த வழிசெய்வது என கல்வி உரிமைக்களத்தினர் விமர்சிக்கிறார்கள்.குறிப்பாக அடித்தட்டுக் குழநதைகள் தங்கள் எதிர்காலத்தைத் தேர்வு செய்யும் உரிமையைப் பறித்துவிடுகிற இந்தச் சட்டத்திருத்தத்திற்கு ஒரு மறு திருத்தம் தேவை.அரசியல் கட்சிகள் நிச்சயமாகத் தங்களின் தேர்தல் அறிக்கைத் தயாரிப்ப்புக் கூட்டங்களில் பேசியாக வேண்டிய கோரிக்கை இது.

அருகமைப்பள்ளி என்றால், இருக்கிற பள்ளிகளிலேயே எந்தப் பள்ளி பக்கத்தில் இருககிறதோ அதுவல்ல. 8ம் வகுப்பு வரையில் குழந்தைகள் நடந்தே சென்றுவரக்கூடிய பள்ளியாக அது இருக்க வேண்டும். அந்தப் பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர், கணினி, உடற்கல்வி, ஓவியம், கைத்தொழில், சமூகப்பணி போன்ற ஒவ்வொரு சிறப்புப் பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர் என்ற முறையில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோருகிறார்கள்.ஒரு வகுப்பில் ஒரே ஒரு குழந்தைதான் இருக்கிறது என்றாலும் அந்த வகுப்புக்கென ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்கிறார்கள்.இது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் எவ்வளவு ஆழமான, ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உணர்ந்து இதையொரு வாக்குறுதியாக அளிக்கக் கட்சிகள் முன்வர வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளும் அருகமைப் பள்ளிகளாக்கப்பட வேண்டும் என்பது ஒரு கோரிக்கை. அதன் பொருள் பள்ளிகளை இடம் விட்டு இடம் நகர்த்துவதல்ல. அனைத்துப் பள்ளிகளும் தங்களைச் சுற்றியுள்ள அருகமைப் பகுதிகளிலிருந்து வரும் குழந்தைகளை மட்டுமே சேர்க்கும் கொள்கையை நோக்கி நகத்துவதே.

விட்டுவிடக்கூடாத விழுமியங்கள்

கல்விக்கொள்கையும், பாடத்திட்டங்களும், கற்பித்தல் முறைகளும், நாட்டின் பெருமைக்குரிய அரசமைப்பு சாசனத்தின் மாண்புமிக்க விழுமியங்களை ஒட்டியே, அவற்றை உயர்த்திப் பிடிப்பதாகவே இருக்கும் என்ற வாக்குறுதியையும் கல்வியாளர்கள் கோருகிறார்கள்.உலக அரங்கில் இந்தியாவிக்கு பெருமதிப்பை ஈட்டித்தந்துள்ள விழுமியங்கள் என்றால், அரசமைப்பின் மக்களாட்சி, கூட்டாட்சி, மதச்சார்பின்மை, அனைத்து நம்பிக்கைகளுக்கும் சம மரியாதை, சமூகத்துவம், பனமுகப்பண்பாட்டுப் பாதுகாப்பு, சமூகநீதி, அறிவியல் மனப்பான்மை ஆகியவை உள்ளிட்டவையே.

சுமையற்ற பாடத்திட்டம் வகுத்தல், எட்டு வயதுக் குழந்தைகளுக்குப் பத்துவயதுக் குழந்தைகளுக்கான பாடங்கள் திணிக்கப்படுவதைத் தவிர்த்தல், குழந்தைகள் தங்களின் வாழ்க்கைச் சூழலோடு பொருத்திப் பார்த்துப் புரிந்துகொள்ளும் திறமையை வளர்த்தல் போன்றவையும அரசியல் கட்சிகளின் பரிசீலனைக்குக் முன்வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவியல் பார்வையோடு இணைந்த மற்றொரு முக்கியமான கோரிக்கை, பள்ளிப் பாடங்கள் தாய்மொழி அல்லது மாநில மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பது."இங்கிலீஷ் மீடியம்" பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கப் பெற்றோர்கள் பலரும் விரும்புவதை வெறும் மோகம் என்று தள்ளிவிட முடியுமா? தாய்மொழிவழிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்கிறவர்களில் கூட பலர் தங்கள் குடும்ப நிர்ப்பத்தங்களைப் புறக்கணிக்க முடிவதில்லை, தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழிப் பள்ளிகளில் சேர்க்க முடிவதில்லை. குடும்பத்தினர் நிர்ப்பந்திப்பதில் அடிப்படையாக தாய்மொழி வழிக் கல்வியின் தேவை பற்றிய அறியாமை, ஆங்கில வழி பயின்றால் எதிர்கால வேலை வாய்ப்புகள் உறுதியாகும் என்பதாக ஏற்படுத்தப்பட்டுள்ள எண்ணம் (இப்போது இந்தி படித்தால்தான் வேலை வாய்ப்புகள் கனியும் என்ற எண்ணம் ஏற்படுத்தப்படுவது போன்றது இது), தற்போதைய சூழல்களை மீறித் தமிழ்வழிப் பள்ளிகளில் சேர்த்தால் பின்னர் பிள்ளைகளின் அல்லது உறவினர்களின் ஏசலுக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சம்.... இப்படியான காரணங்கள் உள்ளன. இதைப் பயன்படுத்திக்கொள்ளும்.பல தனியார் பள்ளிகள் இங்கீலிஷ் மீடியம் என்று சொல்லிக்கொண்டு மாணவர்களைச் சேர்த்துக்கொண்டாலும், வகுப்புகளைத் தமிழில்தான் நடத்துகின்றன. மாணவர் சேர்க்கையின்போதே, "கவலைப்படாதீர்கள், பாடங்களை உங்கள் குழந்தைக்குப் புரிவது போலத் தமிழில்தான் சொல்லித் தருவோம்," என்று சொல்கிற நிர்வாகங்களும் உண்டு!ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்பதை யாரும் எதிர்க்கவில்லை.ஆங்கில வழியில் கற்றாக வேண்டும் என்ற நிலைமை ஏங்றபடுத்தப்பட்டிருப்பதுதான் எதிர்க்கப்படுகிறது.

தமிழ்வழி அல்லது தாய்மொழி வழி கல்வி பற்றி மொழிப்பற்றுடன் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசப்பட்ட அளவுக்கு அறிவியல்பூர்வமாக விளக்கப்படவில்லை.மிஞ்சிப்போனால் தமிழ்வழி பயின்றோர் அறிவியல் வல்லுநர்களாக, உயரதிகாரிகளாக உயர்ந்திருக்கிறார்கள் என்று சொல்வதோடு சரி.அந்தக்காலத்தில் இது நடந்தது, இந்தக்காலத்தில் அது சாத்தியமாகுமா என்ற ஐயப்பாட்டை ஏற்கத்தக்க வகையில் தெளிவிக்க வேண்டும்.தாய்மொழியில் பயில்வதால் மூளையின் புரிதல் திறன் கூர்மையாகிறது.ஒரு தகவலையோ கருத்தையோ ஆங்கிலத்தில் கேட்கிறபோது, நமது மூளை அதைத் தமிழாக்கம் செய்தே புரிந்துகொள்கிறது.அதே போல் எதையாவது ஆங்கிலத்தில் சொல்வதென்றால், அதை முதலில் தமிழில் யோசித்து, ஆங்கிலத்தில் "டிரான்ஸ்லேட்" செய்தே சொல்கிறது.மூளையின் இந்த இரட்டை வேலை கணினியை விட வேகமாக நடக்கிறது என்றாலும் அதுவோர் இரட்டை வேலை.அந்த இரட்டை வேலை கற்றல் திறனை மட்டுப்படுத்துகிறது.ஆயுள் முழுக்க இதுவே தொடர்வதால் இழப்பதே அதிகம்.இத்தகைய அறிவியல் புரிதல்களைச் சமூகத்தில் ஏற்படுத்தத் தவறியது, தாய்மொழி வழி கல்விக்காக இயங்குவோரின் குற்றமா?அரசமைப்பு சாசனத்தின் வழிகாட்டலுக்கு ஏற்பச் செயல்படாத மத்திய/மாநில அரசுகளின் குற்றமா? இதெல்லாம் அரசியல்வாதிகளின் பிரச்சினை என்று விட்டுவிட்ட சமூக மனநிலையின் குற்றமா?

அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டது வேறொரு வேடிக்கை.அதுவும் கூட முறையாக இல்லை என்று கல்வியாளர்கள் சுட்டுகிறார்கள்.ஆங்கிலம் தெரிந்திருப்பது வேறு, ஆங்கில வழியில் பாடம் நடத்துவது வேறு.அதற்கென்றே தகுதி பெற்ற நிறுவனங்கள் இருக்கின்றன, அவற்றில் பயின்று சான்றிதழ் பெறுகிறவர்கள் மட்டுமே சரியான முறையில் ஆங்கில வழியில் பாடம் நடத்தக் கூடியவர்கள்.அப்படிப்பட்ட ஆசிரியர்களை எத்தனை தனியார் பள்ளிகள் நியமித்திருக்கின்றன?ஆங்கில வழி வகுப்புகள் நடத்தும் அரசுப்பள்ளிகளில் அவர்கள்தான் பாடம் நடத்துகிறார்களா?இதையெல்லாம் பெற்றோர்கள் எப்போது விசாரிக்கத் தொடங்குவார்கள்?

கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டியவர்கள்

கொரோனா ஊரடங்குக் காலத்தில் நேரடி வகுப்புகளுக்குச் செல்லாததால், என்னதான் இணையவழி வீட்டுப்பாடங்கள் வந்தாலும் கற்றலில் ஆர்வம் குன்றிப்போன குழந்தைகளே அதிகம். இதைத் தெரிவிக்கிற கல்வி உரிமை இயக்கத்தினர், இக்காலத்தில் அடித்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் குழந்தைத் தொழிலாளர்களாகியிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலையும் கூறுகிறார்கள். அரசு நினைத்தால் இவர்களைக் கண்டறிந்து பள்ளிக்கு மீட்க முடியும்.அவ்வாறு மீட்கிறோம் என்று இந்தத் தேர்தலில் வாக்குறுதியளித்து வாக்குகள் கேட்கக் கட்சிகள் முன்வர வேண்டும்.

ஊரின் பள்ளிகள் பற்றி கிராமசபைக் கூட்டங்களில் பேசப்படுவது, கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மெய்யான அக்கறையோடு செயல்படுவது, பொருளாதாரத்திலும் சமூக அடிப்படையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களுக்கான இடங்கள் அதே சட்டப்படி தனியார் பள்ளிகளில் முறையாக ஒதுக்கப்படுவது, பள்ளிக் கல்வித்துறை அதைக் கறாராகக் கண்காணிப்பது, மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அரசியல் இயக்கங்களிடமிருந்து கல்வி உரிமை அமைப்புகள் எதிர்பார்க்கின்றன. பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் - தமிழ்நாடு புதுச்சேரி, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை உள்ளிட்ட அமைப்புகளும் சில ஆசிரியர் அமைப்புகளும், சில மாணவர் சங்கங்களும் இப்படிப்பட்ட பல கோரிக்கைகளை மனுக்களாகவும் கடிதங்களாகவும் அவ்வப்போது அரசாங்கத்திடம் தாக்கல் செய்திருக்கின்றன. அதற்கு அரசாங்க எந்திரத்தில் எவ்விதத் தாக்கமும் தென்படாத நிலையில் இப்போது அரசியல் கட்சிகளை அறிக்கைகளோடு நாடியிருக்கின்றன. பள்ளிக் கல்வி சார்ந்த வேறு பல கோரிக்கைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான உயர்கல்வி சார்ந்தஇன்றியமையாத தேவைகள், தேசிய கல்விக்கொள்கை அரசமைப்பு சாசன லட்சியங்களுக்கு எதிரானதாக இருக்கிறதென்ற எச்சரிக்கைகள் ஆகியவையும் அந்த மனுக்களிலும் கடிதங்களிலும் அறிக்கைகளிலும் உள்ளன. அவற்றை ஆழமாக ஆராய வேண்டிய கடமைப்பொறுப்பு அரசியல் இயக்கங்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கம் இருக்கிறது.

மிக அடிப்படையாக ஒன்றைச் சொல்லலாம்: பள்ளிக் கல்வியின் மையமான நோக்கம் நன்றாகப் படிக்கிறவர்களை மேலேற்றிவிடுவதும், நன்றாகப் படிக்க இயலாதவர்களைக் கீழிறக்கிவிடுவதுமல்ல. அவ்வாறு நன்றாகப் படிக்க இயலாதவர்களைத் தொழில் கல்வி பயின்று வேலைக்குப் போய் பிழைத்துக்கொள் என்று அனுப்புவதுமல்ல. அவர்களும் நன்றாகப் படித்து மேலேறுவதற்கான படிக்கட்டாக இருப்பதே தரமான பள்ளி.இந்தப் புரிதல் அரசுக்கு, அரசியல் இயக்கங்களுக்கு, குடிமக்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அந்தப் படிக்கட்டு வலுவாகக் கட்டப்படும்.

English summary
Here is an Artcile of Writer Kumaresan Article on Education Sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X