உலகப் பாகுபாடுகள் ஒழிப்பு நாள்- கடந்துவிட்ட ஒரு நாள், கடந்துவிடக்கூடாத ஒரு லட்சியம்- அ.குமரேசன்
இந்த ஆண்டின் மார்ச் 1, முந்தைய ஆண்டுகளின் மார்ச் 1 போலவே இந்தத் தேதியின் உலகளாவிய இயக்கம் பற்றிய விரிவான பேச்சுகள் ஏதுமின்றிக் கடந்திருக்கிறது. அதில் அக்கறையுள்ள அமைப்புகளைச் சேர்ந்தோர் சில இடங்களில் வெளிப்படையாகவும், பல இடங்களில் அலுவலகங்களுக்கு உள்ளேயும் தங்களுக்குள் இந்தத் தேதியின் முக்கியத்துவம் பற்றி உரையாடியிருப்பார்கள்.. அரசுக் கட்டமைப்பில் சம்பந்தப்பட்ட துறையின் வளாகங்களில் அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கக்கூடும். உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தினங்களாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ள வேறு சில தேதிகளைப் போல இந்தத் தேதி கவனம்பெறவில்லை. ஏனிந்தப் பாகுபாடு என்று கேட்க வைக்கிற இந்தத் தேதி எதற்கானது என்றால், பாகுபாடுகள் ஒழிப்புக்கானது! ஆம், மார்ச் 1 உலகப் பாகுபாடுகள் ஒழிப்பு நாள்!
ஐ.நா. அங்கீகாரத்துடன் கடைப்பிடிக்கப்படும் மார்ச் 8, அப்படிப்பட்ட அங்கீகாரம் இல்லாமலே கொண்டாடப்படும் பிப்ரவரி 14 போன்ற சில தேதிகளில், பல்வேறு இயக்கங்களின் உணர்வுப்பூர்வமான ஏற்பாடுகள் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல், தொழில் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களும் நிறைய வரும், குறிப்பிட்ட சிந்தனையை நினைவூட்டும். மார்ச் 1 போன்ற தேதிகளில் அப்படிப்பட்ட விளம்பரங்கள் அந்த அளவுக்கு வருவதில்லை. பாகுபாடுகள் ஒழிப்பு என்பதில் வணிக ஆதாயம் இல்லை என்பதாலா, அல்லது பாகுபாடுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் ஈடுபாடு இல்லாததாலா - எதனால் இந்தப் பாகுபாடு?

ஐ.நா. எய்ட்ஸ் விழிப்புணர்வு/கட்டுப்பாடு (யுனெய்ட்ஸ்) அமைப்புதான் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுவதைத் தொடங்கிவைத்தது என்பதால், இது அத்தகைய விழிப்புணர்வு/கட்டுப்பாடு முயற்சிகளில் ஈடுபட்டிருப்போருக்கான தேதிதானே என்ற எண்ணம் கூட காரணமாக இருக்கலாம். 2014ல் இந்த நாள் அறிவிக்கப்பட்டபோது, எய்ட்ஸ்/எச்ஐவி விழிப்புணர்வுக்கான இயக்கமாக, அவற்றின் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் சமுதாயத்தின் புறக்கணிப்புக்கு உள்ளாகக்கூடாது என்று எடுத்துரைப்பதற்கான பரப்புரையாகத்தான் தொடங்கப்பட்டது. ஆயினும், பின்னர் அது உலகப் பாகுபாடுகள் ஒழிப்பு நாளாக மாற்றப்பட்டுவிட்டது. எய்ட்ஸ்/எச்ஐவி பாதிப்பு உள்ளானவர்கள் புறக்கணிக்கப்படுவது தொடர்வதற்குக் காரணம் உலகம் முழுவதும் பாகுபாடுகள் தொடர்வதுதான் என்ற பார்வை உருவானதைத் தொடர்ந்து, அந்தப் பாகுபாடுகளை ஒழிப்பதைக் குறிவைத்தே இயக்கங்கள் பரவ வேண்டும் என்ற புரிதலோடு இவ்வாறு மாற்றப்பட்டது.
வேறுபாடும் பாகுபாடும்
அது மட்டுமல்ல, பாகுபாடுகள் தொடர்வதற்குக் காரணம், உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்வதுதான் என்று விவாதிக்கப்பட்டது. பாகுபாடுகள் ஒழிப்பு என்பது சமத்துவமற்ற நிலைமைகளை மாற்றுவதோடு தொடர்புடையதே என்ற புரிதலும் எட்டப்பட்டது. ஆகவே, பாகுபாடுகள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு இயக்கங்கள் சமத்துவமின்மைகளை மாற்றுகிற லட்சியத்தை முன்வைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டது. மனித உரிமைகளும் கண்ணியங்களும் மேலோங்கியிருக்கப் பாடுபடுகிற அமைப்புகளின் பிரதிநிதிகள் விவாதித்து ஒருமித்த கருத்திற்கு வந்ததன் அடிப்படையில், அனைத்து நாட்டு அரசுகளின் ஒப்புதலோடு இந்த லட்சியங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
எவ்வகையான பாகுபாடுகள்? வருமானம், பாலினம், வயது, உடல் ஆரோக்கிய நிலை, தொழில், இயலாமை, பாலினச் சார்பு, போதை மருந்துப் பயன்பாடு, பாலின அடையாளம், இனம், வர்க்கம், இனக்குழு, மதம் என்ற அடிப்படைகளில் உலகம் முழுவதும் பாகுபாடுகள் வெயிலும் மழையும் போல நிலவுகின்றன. வேறுபாடு என்னவென்றால், வெயிலும் மழையும் இயற்கையானவை, இந்தப் பாகுபாடுகள் செயற்கையானவை.
இதுபற்றிய ஒரு விவாதத்தின்போது ஒரு நண்பர், "ஒருவர் வெள்ளையாக இருப்பதும் இன்னொருவர் கறுப்பராக இருப்பதும் இயற்கைதானே? ஆணாகவும் பெண்ணாகவும் இருப்பது இயற்கைதானே? இனம் என்பதிலேயே குறிப்பிட்ட இனக்குழுவில் (அல்லது சாதியில்) பிறப்பது இயற்கைதானே? மாற்றுத் திறனாளியாக இருப்பதும் கூட இயற்கைதானே? அதை எப்படிச் செயற்கையானது என்று சொல்லலாம்," என்று கேட்டார். "இந்த வேறுபாடுகள் இயற்கையானவை, ஆனால் அதன் அடிப்படையில் உயர்வு-தாழ்வு கற்பிக்கப்படுகிற, சக மனிதர்களைச் சிறுமைப்படுத்துகிற பாகுபாடுகள் செயற்கையானவை," என்று அவருக்கு மற்றவர்கள் பதிலளித்தார்கள்.
இயற்கை மனிதர்களை மட்டுமல்லாமல் பூமியின் எந்த உயிரினத்தையும் பாகுபடுத்துவதில்லை. எல்லா உயிர்க்கும் பொதுவாகவே வெயில் கொளுத்துகிறது, மழை பொழிகிறது. ஆனால், வருமானத்தைப் பொறுத்து ஒருவர் கடும் வெயில் காலத்திலும் குளுகுளுவென்று சுகமாக இருக்கிறார். இன்னொருவர் பெரும் மழைக்காலத்திலும் ஒதுங்க இடமின்றி நனைகிறார். நோய் தாக்குகிறபோது லட்சக் கணக்கில் செலவுசெய்ய வழியிருப்பவர்கள் பெரும் தனியார் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகிறார்கள். வக்கில்லாதவர்கள் பொது மருத்துவமனைகளின் சூழ்நிலைகளோடு பொருத்திக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள். பொதுசுகாதாரத்தை வலுப்படுத்திப் பரவலாக்குவதற்கு மாறாக, மக்கள் தொகை பெருக்கமும், சிகிச்சைக்கு வருகிற மக்களின் அறியாமையுமே அந்த மருத்துவமனைகளின் அவலத்துக்குக் காரணம் என்று எளிமையான பதில்களைத் தயாராக வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த மக்களின் அறியாமைக்குக் காரணம் கூட, வருமான இடைவெளியும் சமூகப் பாகுபாடுகளும்தான் என்ற உண்மை ஒப்புக்கொள்ளப்படுவதில்லை.
திணறும் உரிமை மூச்சு
இனவேறுபாட்டை இனப்பாகுபாடாக மாற்றிய ஆதிக்கக் கோட்பாடுகள்தானே ஜார்ஜ் ஃபிளாய்டுகளின் மூச்சுத்திணறல்க/ளுக்கு இட்டுச்செல்கின்றன? இனக்குழு (அல்லது சாதி) வேறுபாட்டைப் பாகுபாடாக மாற்றிய வன்மங்கள்தான் ஆணவக்கொலைகள் முதல், ஊராட்சித் தலைவரேயானாலும் கொடியேற்ற அனுமதிக்காதது வரையில், ஊருக்கு வெளியேதான் குடியிருப்பு ஒதுக்குவது வரையில், ஏன் காவல்நிலையத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது வரையில் ஆளுமை செலுத்துகின்றன.
மதச்சார்பற்ற அரசு என்று சாசனம் உள்ள நாடுகளில் கூட பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த சில கும்பல்கள் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான பகைமை உணர்வை விசிறிவிட முடிகிறது. இதுதான் அரசின் அதிகாரப்பூர்வ மதம் என்ற சாசனம் உள்ள ஒற்றை மத ஆதிக்க நாடுகளிலோ கேட்கவே வேண்டியதில்லை.
வயதின் அடிப்படையில் பார்த்தால் குழந்தைகளுக்கும் இளையோருக்கும் சுயமாக முடிவெடுக்கும் சுதந்திரம் உண்டு என்பது இன்னமும் உணரப்படவே இல்லை. அது உணரப்பட்ட பிறகல்லவா அது அங்கீகரிக்கப்படுவது பற்றிய பேச்சே வரும். இதன் பின்புலத்தில் இருப்பது குழந்தைகளால் அல்லது வயதில் சிறியோரால் சரியான முடிவெடுக்க முடியாது என்ற கரிசனம் அல்ல, அவர்கள் வயதில் பெரியவர்களுக்கு அடங்கியிருக்க வேண்டியவர்கள் என்ற, மரியாதையின் பெயரால் காலம் காலமாக ஊட்டப்பட்டு ஊட்டமாக வளர்க்கப்பட்டு வந்துள்ள அடிமைத்தனமே. குழந்தைகளை நேசிப்பது வேறு, அவர்களை மதிப்பது வேறு என்ற ஞானம் எந்த அளவுக்குப் பரவியிருக்கிறது? அந்த ஞானத்தை மதிக்க எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? இறைநம்பிக்கை, மதப்பற்றி, சாதிப்புத்தி, கட்சி விசுவாசம் முதலியவற்றில், பெரியவர்கள் தங்களின் சார்பு நிலையைத்தானே குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்? தனக்கு ஒரு மதத்தின் மீது அல்லது கட்சியின் மீது நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கிறது என்பதற்காகக் குழந்தையின் கையில் வழிபாட்டுச் சின்னத்தையோ அல்லது கட்சிக்கொடியையோ கொடுத்து அணிவகுக்க வைப்பது உண்மையில் குழந்தை உரிமையை மீறுகிற செயல் என்பதைப் பெரும்பாலோர் பு/ரிந்துகொள்ளவே இல்லையே - முற்போக்காளர்கள் உட்பட?
குழந்தைக்கு ஊட்டப்படும் கருத்து
வயது வேறுபாட்டின் கீழ் இப்படியான பாகுபாடு ஒருபுறம் நீடிக்கிறது என்றால், இன்னொருபுறத்தில் இன்னமும் பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைப் பருவத்திலேயே பாலினப் பாகுபாடு புகுத்தப்பட்டுவிடுகிறது. ஆண் குழந்தையெனில் சிறப்புக் கவனிப்புடன் சீராட்டப்படுகிறது, பெண் குழந்தையென்றால் புறக்கணிப்புடன் வேறு வீட்டு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்தப்படுகிறது. இப்படியாகத் தொடங்குகிற பாகுபாடு, பெண்ணென்றால் ஒரு அளவோடு தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வெளியே வரக்கூடாது, ஆண்களோடு நட்பாகப் பழகலாகாது என்று வேலிபோடுவதாக வந்து நிற்கிறது.
இந்தப் பாலினப் பாகுபாடு, மாறுபாலினத்தவரை அவமானப்படுத்த அனுமதிக்கிறது. தற்பாலின உறவுத் தேர்வாளர்களைக் கேவலப்படுத்தச் செய்கிறது. இதையெல்லாம் அந்த மனிதர்களின் ஒழுக்கப் பிரச்சினையாகப் பார்த்து ஒதுக்க வைக்கிறது. இந்த உடலியல் வேறுபாடுகள் ஒரு இயற்கை விளைவே என்ற அறிவியல் உண்மையைக் காண விடாமல் கண்களை மூடிக்கொள்ளக் கட்டாயப்படுத்துகிறது.
மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சட்டப்பூர்வ ஏற்பாடுகளைக்கூடப் போராட்டம், வழக்கு என்றுதான் பெற முடிகிறது. அதன் பின்னால் இருப்பது வழக்கமான அரசு எந்திர மந்தப்போக்கா அல்லது அவர்களைத் தொல்லையாகக் கருதுகிற அதிகார மனப்போக்கா?
சாதி-மத-இன-பாலினப் பாகுபாட்டு வெறி ஒரு மோசமான போதையென்றால், போதைப் பொருள்களுக்கு அடிமையாகிவிட்டவர்களை ஒதுக்கி வைப்பது மற்றொரு கொடுமை. கல்வி, கண்ணியமான வாழ்க்கை, சமநிலை வாய்ப்புகள் போன்றவற்றிற்கான பாதைகளின் கதவுகள் மூடப்பட்டிருக்க, அரசாங்க மதுக்கடைகள் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கிடைப்பதற்கான வழிகளின் கதவுகள் விரியத் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கொரு முடிவு கட்டுவது பற்றிய சிந்தனை இல்லாதவர்களாக, ஒருவர் போதையடிமையானதற்கு ஏதோவொரு வகையில் நாமும் பொறுப்புதான் என்ற உறுத்தல் இல்லாதவர்களாக, அவர்களை வெறுத்து ஒதுக்குவதே சமூகக் கடமையாக மாற்றப்பட்டிருக்கிறது.
தனி மனிதர்களை உயரத்தைப் பொறுத்துப் பட்டப்பெயர் சூ,ட்டுவது, சமூகங்களை அவற்றின் மேல் வலிந்து ஏற்றப்பட்ட வேலைகளின் பேரில் மட்டம் தட்டுவது, நாடுகளை மீள முடியாதிருக்கிற வறுமை நிலையைக் கொண்டு ஒதுக்குவது... இப்படி நீக்கமற எங்கும் பாகுபாடுகள் பரவிக்கிடக்கின்றன. அதன் அடித்தளமாக எங்கும் சமத்துவ நீதி மறுப்புகள் விரவிக்கிடக்கின்றன. வரலாற்றில் முந்தைய சமுதாய அமைப்புகளிலிருந்து மாறுபட்டதாக நவீன அரசாங்கம், அதற்கான நாடாளுமன்றம், அதற்குரிய அடித்தளமாக ஜனநாயகம், அதன் அடிப்படையிலான நீதிமன்றம் என்ற கட்டமைப்புகள் உருவெடுத்தன. அவற்றின் பிரகடனங்கள் யாவும் சமத்துவத்தை நிலைநாட்டுவதும், பாகுபாட்டை நீக்குவதும்தான்.
ஆனால், இன்றளவும் இவற்றை முன்னிறுத்துகிற உலகளாவிய இயக்கமும் அதற்கான ஒரு தேதியும் தேவைப்படுவது எதைக் காட்டுகிறது? இந்தக் கட்டமைப்புகளின் தலைமையில் இருக்கிற முதலாளித்துவ அமைப்பால் இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது என்பதையே காட்டுகிறது. அதிலும், மக்களிடையே நீடிக்கிற பாகுபாடுகளைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயமாக்கிக்கொள்கிற கட்சிகள், ஆட்சிகள் ஆகிய முதலாளித்துவக் கருவிகள் அதிகாரத்தில் வீற்றிருக்கின்றன. மார்ச் 1 பாகுபாட்டு ஒழிப்பு நாள் என்று அறிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பே கூட, முதலாளித்துவத்துக்கு மாற்றான சமத்துவ அரசியல் அமைப்பை ஒரு லட்சியமாக முன்மொழியவில்லையே! அப்படி முன்மொழிய உலக முதலாளித்துவம் விட்டுவிடாதே!
ஆயினும், இன்றைய உலகின் அரசியல், சமூகக் களங்களுக்கு உள்ளேயே பாகுபாட்டு ஒழிப்புக்கும் சமத்துவச் செழிப்புக்கும் குரலெழுப்புகிறவர்களோடு தோள்சேரத்தான் வேண்டும்.