• search
keyboard_backspace

பெண்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் – வெறும் கவர்ச்சித் திட்டமா? - அ.குமரேசன்

Subscribe to Oneindia Tamil

பெண்கள் சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்ய அனுமதி என்ற ஆணையை தமிழகத்தின் புதிய முதலமைச்சர் மு.க.ஸடாலின் பிறப்பித்தது ஒரு விவாதத்தைக் கிளப்பியிருப்பதில் வியப்பில்லை. ஆனால், அவர் கையெழுத்திட்ட முதல் ஐந்து ஆவணங்களில் ஒன்றாக இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால் இது திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று.

இதனைப் பொதுவாக வரவேற்கிறவர்கள் ஒருபுறமிருக்க, விமர்சிக்கிறவர்களின் கருத்துகள் உரையாடலுக்கு உரியவையே. இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மாநியமாக வழங்க 1,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவது மாநிலக் கருவூலத்திற்கு நிதியிழப்பை ஏற்படுத்தும், நகரப் பேருந்துகளுக்கு மட்டுமென்று இருப்பதால் பெரிய அளவுக்குப் பயனில்லை, எல்லாப் பெண்களுக்கும் என்பதற்கு மாறாக வசதியில்லாத, ஏழைப் பெண்களுக்கு மட்டுமாக இந்தச் சலுகையைச் செயல்படுத்தலாம், பொதுப்போக்குவரத்தில் இலவசம் என்பதை விடவும் பாதுகாப்பான கண்ணியமான பயணத்தையே பெண்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.... இவ்வாறான கருத்துகள் சொல்லப்படுகின்றன. தேர்தலில் பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதி இது என்று இதனைச் சுளிப்போடு விமர்சிக்கிற குரல்களும் கேட்கின்றன.

அரசியல் சூழலில் தமிழகத்திற்கு மிகவும் தேவைப்பட்ட ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல், சமூக மாற்றத்திற்கு வழி செய்யக்கூடிய வேறு பல வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டுமானால், அரசுப் பொறுப்பு கிடைத்தாக வேண்டும், அதற்குப் பெண்களின் ஆதரவு உறுதிப்பட வேண்டும் என்கிற நிலையில் அவர்களின் மனம் மகிழச் செய்யும் ஒரு வாக்குறுதி இது. எடுத்த எடுப்பிலேயே இதனை நிறைவேற்றியிருப்பது பாராட்டி வரவேற்கத்தக்கதே.

Writer Kumaresans Article on Free Bus Travel for TN Women

சமூக அசைவு

பொதுவாக, திமுக தேர்தல் அறிக்கைகளில் உடனடிப் பணப் பலன்கள் சார்ந்த வாக்குறுதிகளை விடவும், நெடுங்காலத்திற்கான சமூக அசைவு சார்ந்த திட்டங்கள் இடம்பெறும். பேருந்துப் போக்குவரத்து தொடர்பான திட்டம் என்பதால், அது சார்ந்த முன்னோடித் திட்டம் ஒன்றையே இங்கே ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். 1948ல் சென்னையில் (அன்று மெட்ராஸ்) அரசுப் பேருந்துகள் ஓடத்தொடங்கிவிட்டன என்றாலும், 1967ல், அண்ணா தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும் சென்னை நகரின் அனைத்துத் தனியார் பேருந்துகளும் அரசுடைமையாக்கப்பட்டன. 1969ல் மாநிலம் முழுக்கப் பெரும் தனியார் நிறுவனங்களிடம் இருந்த பேருந்துகளை கலைஞர் தலைமையிலான அன்றைய திமுக அரசின் முக்கியமான சமூக அசைவு நடவடிக்கை. முதலில் அரசுப் போக்குவரத்துத் துறையாக இருந்து, 1971ல் அரசுப் போக்குவரத்துக் கழகமாக மாறியதைத் தொடர்ந்து, மலைக்கிராமங்கள் உள்பட ஊரகப் பகுதிகளுக்கெல்லாம் பேருந்துகள் சென்றுவரத் தொடங்கின. அதற்கான உள்கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் அந்த மக்கள் நகரங்களுக்கு வந்துசெல்லவும் தொழில், வணிக, கல்வித் தொடர்புகளைப் பெறவும் அந்தப் பேருந்துச் சக்கரங்கள் உதவின. பல மாநிலங்களுக்குத் தூண்டுதல் முன்மாதிரியாக அந்தச் சக்கரங்கள் ஓடத்தொடங்கின. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சரிசெய்யப்பட வேண்டிய குறைபாடுகள் இருக்கின்றன என்பதால் இதன் சமூகப் பங்களிப்பை மறுத்துவிட முடியாது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசம் என்றெல்லாம் தொடர்ச்சியாக வந்த நடவடிக்கைகளின் சமூகப் பலன் ஆழமானது. அத்தகைய ஒரு சமூகப் பலன் நோக்கிய பெண்களுக்கு சாதாரண நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் என்ற திட்டம் சாதாரணமானதல்ல. அரசின் அறிவிப்பிலேயே சொல்லப்பட்டிருப்பது போல, சமூகப் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பைப் பெருக்குவதற்கு இது உதவும்.

இன்றளவும் 45 சதவீதப் பெண்கள் வீட்டோடுதான் முடங்கியிருக்கிறார்கள் (2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தகவல்). குடும்பப் பொறுப்புகள் அதற்கொரு முக்கியக் காரணம். அதைச் சொல்லி, அந்தப் பெண்களுக்கு எதற்காக இலவசப் பயணம், அவர்கள் எங்கே போகப் போகிறார்கள் என்று கேட்பதில் பொருளில்லை. அந்தப் பொறுப்புகளில் பகிர்வு என்ற குடும்ப ஜனநாயகப் பண்பாட்டை வளர்ப்பதற்கு இதுவும் ஒரு வாய்ப்பாகப் பயன்படும். ஏன், வேலைக்குப் போனால்தான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டுமா? கட்டணச் சுமையைக் கருதியே பல பெண்கள் நகரத்திற்குள் வேறொரு பகுதியில் இருக்கக்கூடிய நெருங்கிய உறவினர்களின் வீடுகளுக்குக் கூட அடிக்கடி சென்று வர முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இது அழகானதொரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது.

கயிறு

வேலைக்குச் செல்கிற பெண்களிலேயே கூட மிகப்பலரும் நடந்தே செல்லக்கூடிய அளவுக்குத் தங்கள் வீடுகளுக்குப் பக்கத்தில் இருக்கிற, அல்லது அதிகத் தொலைவு செல்ல வேண்டியிராத இடங்களுக்குத்தான் செல்கிறார்கள். குழந்தை பராமரிப்பு, சமையல் உள்ளிட்ட வீட்டுக் கயிறுகள் அவர்களை அதற்கு மேல் போக முடியாமல் இழுத்துக்கொள்கின்றன என்றாலும், பேருந்துக் கட்டணம் கொடுக்கக் கட்டுப்படியாகவில்லை என்ற மற்றொரு முக்கிய கயிறாக இருக்கிறது. சிறு சிறு நிறுவனங்களில்தான் வேலை செய்கிறார்கள் என்பதால், கிடைக்கிற கூலியில் கணிசமாகப் போக்குவரத்துக்குச் செலவிடுவது அவர்களது வருவாயைச் சுருக்கிவிடுகிறது.

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நகரப் பேருந்துகள் இப்போது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்கின்றன. அவ்வகையில் நகரத்திற்கு வெளியே உள்ள பல ஊர்களில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்களையும் போய்ப் பார்த்துவிட்டு வர முடியும். அது முடியும் என்பதே முக்கியமானதொரு உளவியல் மலர்ச்சியாயிற்றே!

பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லை என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன் தில்லி அரசால் கொண்டுவரப்பட்டுவிட்டது. அங்கே மெட்ரோ ரயில்களிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்தான். இதை முதலமைச்சர் கெஜ்ரிவால் கொண்டுவந்த நேரத்திலும் இதே போன்ற விமர்சனங்களும் விவாதங்களும் வந்தன. இதன் மூலம் பெண்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாக மாற்றுகிறார்கள் என்று சில பெண்களே கூட கருத்துக் கூறியிருக்கிறார்கள். இந்த இரண்டாண்டு அனுபவத்திலிருந்து தில்லிப் பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்றொரு ஆய்வு தேவை.

அதே போல, உலகிலேயே பெண்களிடமிருந்து அனைத்துவகையான அரசுப் போக்குவரத்துகளிலும் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக்கொண்ட முதல் நாடு, ஒரே நாடு லக்ஸம்பர்க். சென்ற ஆண்டு மார்ச் மாதம் அங்கே இது நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தை, "ஒரு முக்கியமான சமூக நடவடிக்கை," என்றே அந்தச் சிறிய ஐரோப்பிய நாட்டின் அரசு கூறியது. "ஒரு பக்கம் இது மிகக்குறைவான வருவாய்ப் பிரிவினரின் கையில் பணம் எஞ்சியிருப்பதற்கு வழி செய்கிறது, இன்னொரு பக்கம், பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களே இதற்கான சுமையை ஏற்கிறார்கள். ஆம், இது வரி செலுத்துவோரின் பணத்தில்தான் செயல்படுத்தப்படுகிறது," என்றது லக்ஸ்ம்பர்க் அரசு. திட்டம் கொண்டுவரப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் அதன் தாக்கங்கள் குறித்த ஆய்வும் தேவைப்படுகிறது.

ஆய்வுகள் காட்டும் நிலை

ஆனால் பெண்களுக்கு இத்தகைய திட்டம் தேவைதான் என்று சுட்டிக்காட்டும் ஆய்வுகள் நடந்திருக்கின்றன. உலக வங்கி தனது பல ஆய்வுப்பூர்வ ஆவணங்களில், வறுமை ஒழிப்பு லட்சியத்தை நோக்கிச் செல்வதில் போக்குவரத்து வசதி மிக முக்கியமானது, குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்குமான போக்குவரத்து வசதிகள் ஒரே மாதிரியாக இருக்க முடியாது, இரு பாலினத்தவர்களுடைய தேவைகளும் மாறுபட்டவை என்று குறிப்பிட்டிருக்கிறது. போக்குவரத்து வசதிக் குறைபாடுகள் பெண்களின் கல்வி, பொருளாதார வாய்ப்புகள், உடல்நலப் பராமரிப்பு போன்றவற்றில் பெரும் இடைவெளியை ஏற்படுத்துகின்றன என்றும் உலக ஆவணங்கள் கூறுகின்றன. சில ஐரோப்பிய நாடுகள், சாலைகளில் தனியார் வாகனங்களின் பெருக்கத்தைக் குறைக்கும் ஒரு வழியாக, பேருந்துகளில் அனைத்துப் பயணிகளுக்கும் இலவசம், பெண்களுக்குக் கட்டணச் சலுகை போன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பல்வேறு நாடுகளில் பெண்களும் ஆண்களும் வேலைக்குச் செல்வதற்காகப் பயணம் மேற்கொள்வது பற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உணவுக்கட்டுப்பாடு மற்றும் செயல்பாடுகள் ஆய்வு மையம் ஆய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அந்த ஆய்வின்படி, இந்தியாவில் வேலைக்குச் செல்வதற்காக வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிற பெண்களின் விகிதத்தை விட, ஆண்களின் விகிதம் 4.48 மடங்கு அதிகம். அதாவது, 100 பெண்கள் பேருந்து, உள்ளிட்ட வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், ஆண்கள் 448 பேர்.

கால் நடையாக வேலைக்குச் செல்கிற ஆண்கள் 20.54 சதவீதம், பெண்கள் 29.91 சதவீதம். சைக்கிள் பெடல்களை மிதிக்கும் ஆண்கள் 16.04 சதவீதம், பெண்கள் 2.62 சதவீதம். ஸ்கூட்டரில் விரைகிற ஆண்கள் 15.01 சதவீதம், பெண்கள் 4.46 சதவீதம். காரில் பறக்கிற ஆண்கள் 3.09 சதவீதம், பெண்கள் 2.76 சதவீதம். ரிக்'ஷாவில் ஏறிக்கொள்ளும் ஆண்கள் 11.59 சதவீதம், பெண்கள் 10.86 சதவீதம். பேருந்துகளில் சென்றுவரும் ஆண்கள் 3.88 சதவீதம், பெண்கள் 2.14 சதவீதம். ரயில் பயணம் மேற்கொள்ளும் ஆண்கள் 0.29 சதவீதம், பெண்கள் 0.07 சதவீதம். படகு சவாரி மற்றும் இதர வழிகளில் செல்கிற ஆண்கள் 0.74 சதவீதம், பெண்கள் 0.34 சதவீதம். பயணிக்காத ஆண்கள் 25.92 சதவீதம், பெண்கள் 44.74 சதவீதம்.

தேடினால் இது போன்ற வேறு பல ஆய்வு விவரங்களும் கிடைக்கக்கூடும். எல்லா ஆய்வுகளும் வலியுறுத்துகிற கருத்து - பெண்களின் போக்குவரத்திற்காக, வீட்டுக்குள் முடங்கிவிடாமல் வெளியே சிறகடிக்கச் செய்வதற்காக, சமூக அசைவுக்காக அரசுகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சமூக ஊடகம் வழியாகப் பகிரப்பட்ட ஒரு பதிவு இது: "பெண்களுக்கு இலவசப் பேருந்து என்பது செலவல்ல, அது ஒரு முதலீடு."

எதற்காக வேண்டுமானாலும்

படிப்பதற்காக, வேலைக்காக, நண்பர்களைச் சந்திப்பதற்காக, ஏதோவொரு விழாவை உறவினர்களோடு கொண்டாடுவதற்காக, அவரவர் நம்பிக்கைப் படி வழிபடுவதற்காக, அவரவர் லட்சியத்தின்படி சமூக இயக்கங்களில் ஈடுபடுவதற்காக என்று எதற்காக வேண்டுமானாலும் சென்று வரட்டும். கையில் காசு இல்லாததால் இவற்றில் பங்கேற்க முடியாத, அல்லது அக்கம் பக்கம் கடன் வாங்கித்தான் பங்கேற்க முடியும் என்கிற நிலைமைகள் மாறட்டும்.

எல்லாம் சரி, எப்படியானாலும் அரசுக்கு ஒரு கூடுதல் நிதிச்சுமைதானே, அதை எப்படி சமாளிப்பது? லக்ஸம்பர்க் உதாரணம் இருக்கிறது - வசதிக்காரர்களுக்கு வரி விதிப்பது. இது இந்திய ஒன்றிய அரசிடமும் வலியுறுத்தப்பட வேண்டியது.

நண்பர்கள் இப்படிக் கேட்கிறார்கள்: "அடிப்படையில் நல்ல திட்டம்தான். ஆனால் எல்லாப் பெண்களுக்கும் என்றிருக்க வேண்டுமா? குறிப்பிட்ட வருமா'னத்திற்கு மேலே இருக்கிற பெண்கள் டிக்கட் எடுத்துப் போகலாமே?"

பெண்கள் டிக்கட் எடுக்கக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்படவில்லை. அவர்களிடம் டிக்கட் கேட்கக்கூடாது என்றுதான் ஆணை. விரும்புகிறவர்கள் டிக்கட் எடுக்கத் தடையில்லை. ஆனால், சிலர் எப்படி தங்களை இரண்டாம் நிலைக் குடிமக்களாக்குவது போல இருக்கிறதென்று கருதுகிறார்களோ, அதே போல, அரசோ கட்டணம் செலுத்த முன்வருகிறவர்களோ டிக்கட் எடுக்காத பெண்களை இரண்டாம் நிலையில் வைப்பதாகிவிடக்கூடாது.

"காலப்போக்கில், நெடுந்தொலைவு வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வகைப் பேருந்துகளுக்குமாக விரிவுபடுத்தப்படுமா?"

அப்படியான தேவையை சமுதாயம் உருவாக்குமானால் அதையும் அரசு பரிசீலிக்கலாம், தவறில்லை.

"தில்லி தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் இல்லையே?"

மாநிலங்களுக்கிடையே பேருந்துகள் செல்வது போல, பாலின சமத்துவத்தை நோக்கிப் பயணிப்பதற்கான இந்தத் திட்டம் எல்லா மாநிலங்களுக்கும் செல்லட்டும்.

English summary
Here is an Article has written by Writer Kumaresan on Free Bus Travel for TN Women.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In