• search
keyboard_backspace

தற்பாலினம்...வாழ்க்கை மரத்தின் கிளைகளை அங்கீகரிக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு-அ. குமரேசன்

Subscribe to Oneindia Tamil

பெரும்பான்மைக் கருத்திற்கு மற்றவர்களும் உடன்படுதல் அரசியலில் அடிப்படை ஜனநாயகம். ஆனால், பெரும்பாலோரின் அடையாளப்படியே மற்றவர்களும் வாழ வற்புறுத்துதல் சமூகத்தில் ஆதிக்க வன்மம். மாறுபாலினத்தவர்கள், தற்பாலின ஈர்ப்பாளர்கள் உள்ளிட்ட பாலின அடையாளத்திலும் பாலினத் தேர்விலும் சிறுபான்மையோராக இருக்கிற எல்ஜிபீடிக்யூஐஏ+ மக்கள் மீது இந்த வன்மம்தான் செலுத்தப்பட்டு வந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் லெஸ்பியன், கேய், பைசெக்ஸ்சுவல், டிரான்ஸ்ஜெண்டர், குயீர், இன்டெர்செக்ஸ், அசெக்ஸ் என்று இவர்களைக் குறிப்பிடுவதற்கான சொற்களாவது இருக்கின்றன. தமிழில்? ஓரினச் சேர்க்கைப் பிரியர்கள் என்று லெஸ்பியன்களுக்கும் கேய்களுக்கும் அவர்களை ஒழுக்கமற்ற உடலுறவு கொள்கிறவர்களாகக் காட்டுகிற ஒரே அடையாளச்சொல்தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இரட்டைப் பாலினத் தேர்வாளர்கள், குயீர் என்ற மாறுபட்ட இயல்பாளர்கள், தம் உடலிலேயே இரு பாலின உறுப்புகளும் கொண்டவர்கள், பாலியல் நாட்டமே இல்லாதவர்கள் - இவர்களுக்கான தனிச் சொற்கள் தமிழில் இல்லை. ஏன் உலகின் பல மொழிகளிலும் இல்லை.

ஒரு பாலின அடையாளத்தோடு பிறந்து, பின்னர் எதிர்ப்பாலினத்திற்கு மாறுகிறவர்களை இழிவுபடுத்துகிற சொற்கள் எத்தனை இருந்திருக்கின்றன! அத்தகைய சொற்களைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிற 'திருநங்கை', 'திருநம்பி' அல்லது இருவர்க்கும் பொதுவான 'திருநர்' போன்ற சொற்களால் அண்மைக் காலமாகத்தான் மாறுபாலினத்தவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். ஏன் அவர்களுக்கான தனிச்சொற்கள் இத்தனை காலமாக இல்லை என்றால், அவர்களை இத்தனை காலமாக சமூகம் மதிக்காததால்தான்.

Writer Kumaresans writes on Madras High Courts verdict on LGBTQIA+

பெருமித மாதத்தில்...

அந்த சமூக மதிப்புக்கான உலகளாவிய இயக்கமும் படிப்படியாக முன்னேறி வருகிறது. அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தை அவர்கள் "பெருமித மாதம்" என்று கொண்டாடி வருகிறார்கள். வானவில் ஊர்வலங்கள், விருந்துகள், கருத்தரங்குகள் என்றெல்லாம் இந்த மாதத்தில் நடைபெறும். அவர்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் பல நாடுகளின் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பபடுவது பற்றிய தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும். இந்தப் பெருமித மாதத்தில் அந்த மக்களும் அவர்களுடைய உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போரும் மனம் மகிழ்ந்து வரவேற்கத்தக்கதொரு தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கிறது.

எல்ஜிபீடிக்யூஐஏ+ பிரிவினரை அவர்களது "மூலப்பாலினத்திற்கு" மாற்றுவதாக, அல்லது அவர்களைப் பெரும்பான்மையானோரைப் போல "இயல்பானவர்களாக" மாற்றுவதாகச் சொல்லி மருத்துவ சிகிச்சை செய்வோர் இருக்கிறார்கள். மருந்து மாத்திரைகள், அறுவை சிகிச்சைகள், உளவியல் வழிகாட்டல்கள் என்று அந்த சிகிச்சைக்குப் பல வடிவங்கள் இருக்கின்றன. பெற்றோர்களின் முடிவால், உறவினர்களின் ஆலோசனையால், பள்ளி நிர்வாகங்களின் கட்டாயத்தால் என்று அப்படிப்பட்ட சிகிச்சையாளர்களிடம் அவர்கள் கொண்டுசெல்லப்படுகிறார்கள். அத்தகைய சிகிச்சைகளுக்குத் தடைவிதிக்கிற ஆணையைப் பிறப்பித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

உண்மையில் அந்த சிகிச்சைகள் அவர்களைக் "குணப்படுத்துவதில்லை". மாறாக உடல்நிலை சார்ந்த கடுமையான சீர்குலைவுகளையும், உளவியல் சார்ந்த சிக்கல்களையும்தான் ஏற்படுத்துகின்றன. ஆகவே, இப்படிப்பட்ட சிகிச்சைகளைச் செய்கிறவர்களுடைய தொழில் உரிமத்தை விலக்கிக்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் ஆணையிட்டிருப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். தேசிய மருத்துவ ஆணையம், இந்திய உளவியலாளர் சங்கம், இந்திய மறுவாழ்வு மன்றம் ஆகிய அமைப்புகளுக்கு அவர் இவ்வாறு ஆணையிட்டிருக்கிறார்.

பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்

பள்ளிகளில் மற்றவர்களோடு மாறுபடுகிற மாணவர்களுக்கான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துதல், அவர்களது கல்விச்சான்று ஆவணங்களில் பாலின அடையாள மாற்றப் பதிவுகளுக்கு உதவுதல் போன்ற அவரது ஆணைகளும் கல்வி நிறுவனங்களால் முறையாகப் பின்பற்றப்பட வேண்டியவை. குறிப்பாகப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் மூலம் அவர்களுக்கு இவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆணை உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டியது. குற்றச்செயல்களில் ஈடுபட்டுப் பிடிபடக்கூடிய, இப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தனிச் சிறைகள் ஏற்படுத்தவும் பரிந்துரைத்திருக்கிறார் நீதிபதி. தற்போது இரண்டு பாலினத்தவர்களுக்கும் தனித்தனிச் சிறைகள் இருப்பது போல இவர்களுக்கும் அமைப்பது கடினமல்ல. அது, சிறைக்குள் வக்கிர மனம் கொண்டவர்களின் அவமதிப்புகளிலிருந்தும் அத்துமீறல்களிலிருந்தும் இவர்களை விடுவிக்க உதவும். சிறைத்துறை இதனை நீதிமன்ற ஆணையாக மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்போடும் அணுகி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்படியொரு தீர்ப்புக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் எப்படி வந்தார் என்ற பின்னணியும் கவனத்திற்கு உரியது. மதுரையைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், இணைந்து வாழ முடிவு செய்து சென்னைக்கு வந்தனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரையும், தங்களுக்கு உதவியவர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டதையும் தொடர்ந்து அவர்கள் தங்களுக்குப் பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தை நாடினர். வழக்கு விசாரணையின்போது, இப்படிப்பட்டவர்களின் பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்காக நீதிபதி தானே உளவியல் வல்லுநர்களின் வகுப்புகளுக்குச் சென்றார். அதைத் தொடர்ந்தே இந்த இடைக்கால ஆணை. வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 31ல் நடைபெற உள்ளது.

"தற்பாலின ஈர்ப்பு பற்றிப் புரிந்துகொள்ளாத பெரும்பான்மையோரில் ஒருவனாகத்தான் நானும் இருந்தேன் என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. அறியாமையைக் காரணம் காட்டி எந்தவொரு பாகுபாட்டையும் இயல்பான நடைமுறையாக்கிவிட முடியாது," என்று கூறியுள்ள நீதிபதி, "ஆளைக் காணவில்லை என்ற புகார்களை விசாரிக்கிற காவல்துறையினர், சம்பந்தப்பட்டவர்கள் மன ஒப்புதலோடுதான் இருக்கிறார்கள் என்று தெரியவரும்போது, துன்புறுத்தாமல் வழக்கை முடித்துக்கொள்ள வேண்டும், ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் எல்ஜிபீடிக்யூஐஏ+ சமூகத்தை மாணவர்கள் புரிந்துகொள்ளத்தக்க வகையில் பள்ளி, பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் பயனுள்ள மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்," என்று பரிந்துரைத்திருப்பது காற்றோடு போய்விடக்கூடாது.

நீதித்துறைக்கே தேவைப்படுவது

இவர்களைப் பற்றிய விழிப்புணர்வை நீதித்துறையிலேயே கூட ஏற்படுத்த வேண்டியுள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ள அவர், இந்த மக்களைப் பற்றி சமூகத்தில் நிலவும் தவறான கருத்துகளை மாற்றத்தக்க வகையிலான கொள்கைகளை ஒன்றிய அரசு உருவாக்கவும் பணித்துள்ளார். தங்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறபோது இவர்கள் எளிதில் அணுகத்தக்க, இவர்களது பிரச்சினைகளை நன்கறிந்த வல்லுநர்களைக் கொண்ட தொண்டு அமைப்புகளின் பட்டியலிட்டு வெளியிடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எத்தகைய சூழல்களில் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது என்பது சுவையானது. அமெரிக்காவின் பல மாநிலங்களில், பழமைவாதிகளின் கட்டாயத்தால் மாறுபாலினத்தவர்களின் நலன்களுக்கு எதிரான சட்டங்கள் தயாராகிக்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இந்திய உச்சநீதிமன்றத்திலேயே, ஒரே பாலினத்தைச் சேர்ந்தோரின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அதை அங்கீகரிக்க இயலாது, அது நாட்டின் மரபுகளுக்கு எதிரானது என்று ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இத்தகைய செய்திகளின் பின்னணியில், அமெரிக்காவுக்கே அறிவுறுத்துகிற வகையில், இந்திய உச்சநீதிமன்றம் எப்படிப்பட்ட முடிவெடுத்தால் மனித உரிமைகளையும் உடல் சார்ந்த இயற்கையையும் உயர்த்திப் பிடிப்பதாக இருக்கும் என்று வெளிச்சமிடும் வழியில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.

காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அதிகாரிகளுக்கு சட்டவிதிகளையும், மீறல்களுக்கான தண்டனைகளையும் பற்றிப் புரியவைப்பது, பல மட்டங்களிலும் எல்ஜிபீடிக்யூஐஏ+ மக்களைப் புரிந்துகொள்வதற்கான விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது, இவர்களின் சட்ட உரிமைகள் குறித்துத் தொடர்ச்சியான முறையில் எடுத்துச்சொல்வது முதலிய வழிகாட்டல்களும் 125 பக்கத் தீர்ப்பில் வரைந்தளிக்கப்பட்டிருக்கின்றன. இவை சம்பந்தப்பட்ட மக்களுக்கான நீதியாக மட்டுமல்லாமல், தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டிருப்பது போல, சமூகநீதியை நிலைநாட்டுவதை நோக்கி முன்னேறுவதற்கான அடிவைப்புகளாகவும் இருக்கின்றன.

"வாழ்க்கை மரத்தில் பல கிளைகள் இருக்கின்றன. ஒரே வழிதான் இருக்க வேண்டுமென்பதில்லை. ஒவ்வொருவரும் தாங்கள் யாரோ அவர்களாகவே இருப்பதற்குப் போதுமான இடமிருக்கிறது," என்று பதிவுசெய்திருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். இந்த மக்களின் வாழ்க்கைத் தேர்வு செயற்கையானதல்ல, இயற்கையானதே என்று உணர்த்துகிற இந்தக் கவித்துவ மனம்தான் நியாயத் தீர்ப்பை எழுதவைத்ததோ!

English summary
Here is an article was written by Writer Kumaresan on Madras High Court's verdict on LGBTQIA+.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In