• search
keyboard_backspace

போர்க்கொடி தூக்கும் சசிகலாவின் 'கார்' கொடி! கழகத்தில் வருமா கலகம்? பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வி.கே. சசிகலா கடந்த ஜனவரி 27ம் தேதி பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலை பெற்றார். நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் இருந்தவர், சிகிச்சை முடிந்து திரும்பிய போது ஓர் அரசியல் பரபரப்பு அரங்கேறியது.

சசிகலா தான் தங்கும் இடத்திற்குத் திரும்பிய காரின் முகப்பில் அனைத்திந்திய அண்ணா திமுக கொடி பொருத்தப்பட்டது சர்ச்சைக்கும் விவாதத்திற்கும் உரிய பொருளாகிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் அண்ணா திமுகவைக் கைப்பற்றுவாரா. அதற்குத் தலைமை வகிப்பாரா. பிரிந்து கிடந்த அதிமுகவினரை ஒன்றுபடுத்துவாரா என்றெல்லாம் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

Writer Paa Ki article on Sasikala Release and AIADMK Flag

காரணம், அவர் சிறைக்குச் செல்வதற்கு முன்பு நடந்த இரு முக்கிய நிகழ்வுகள்தான்.

ஒன்று, ஜெயலலிதா மறைந்த பிறகு வெற்றிடமாக இருந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு அவர் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜெயலலிதாவின் இருக்கையில் அமர்ந்தது.

இரண்டாவது, ஆளும் அதிமுக சட்டப் பேரவைக் கட்சியின் தலைவராக அதாவது முதலமைச்சராக சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் "அம்மா" இடத்தில் "சின்னம்மா" என்ற நிலையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. இதற்கெல்லாம் "ஆப்பு" வைத்தது போல உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா உள்ளிட்டோருக்குச் சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனால், நிலைமையே தலைகீழானது.

ஜெயலலிதா மறைந்தபோது, இரவு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றிருந்தாலும், அது இடைக்கால ஏற்பாடாகவே அப்போதே பேசப்பட்டுவந்தது. இதையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து ஆட்சியையும் அவர் ஏற்பார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டது.

வழக்கின் தீர்ப்பு எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு, அவரால் முதலமைச்சராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியே முதலமைச்சராக நீடிக்க நேர்ந்தது.

சிறை செல்வதற்கு முன் கட்சித் தலைமையை ஏற்றார், ஆட்சித் தலைமைக்கும் தயாரானார்.

அவர் விடுதலை ஆனதும் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார் என்று பேசப்பட்டது. ஆட்சித் தலைமையைப் பொறுத்தவரை அவர் சொல்கிறவர் பொறுப்பேற்பார் என்றே கருத்து நிலவியது.காரணம், குற்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்றவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட இயலாது. ஆட்சிப் பொறுப்பை ஏற்க இயலாது.

இதனால்தான், சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில், அண்ணா திமுக கொடியைப் பொருத்திய நிலையில் வெளியே வந்திருக்கிறார்.

அதாவது, 'அதிமுக என் கைக்குள்தான் இருக்கிறது, புரிந்து கொள்ளுங்கள்' என்று கட்சித் தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில் இப்படிச் செய்திருக்கிறார்.

பரப்பன அக்ரஹாரத்தின் காட்சி பரபரப்பு அண்ணா திமு கழக காட்சி ஆகிவிட்டது.

அண்ணா திமுகவுக்கு இதில் ஒரு சாதகமான அம்சம் இருக்கிறது. கட்சியில் பொதுச் செயலாளர் பதவி இல்லை. அது நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதாதான் என்று பிரகடனம் செய்துவிட்டார்கள். அதனால், சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட அப்பதவியை மீண்டும் அவரால் தற்போதைய நடைமுறைப்படி ஏற்க இயலாது. முதலமைச்சர் பொறுப்பிற்கு அவரால் 6 வருடம் வர இயலாது.

Writer Paa Ki article on Sasikala Release and AIADMK Flag

எனவே, காரிலாவது கட்சிக் கொடி பறக்கட்டுமே என்றுதான் சென்னைக்குப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் கலகத்தை சசிகலா தரப்பினர் தொடங்கியிருக்கிறார்கள் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

இந்தச் செய்தி வெளியான உடனே, கட்சியின் மூத்த தலைவரும் மீன் வளத் துறை அமைச்சருமான ஜெயகுமார், "அண்ணா திமுக கொடியைக் கட்சியினரைத் தவிர வேறு யாரும் பயன்படுத்துவது சட்ட விரோதம்" என்று கூறியிருக்கிறார்.

இதனிடையில், சசிகலாவை வரவேற்று சில இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதுவும் அண்ணா திமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் பெயரில். இதைப் பற்றிக் கேட்டால், "அவர்கள் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள். டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவில் இணைந்தவர்கள். கழகத்தில் இருந்த பொறுப்புகளை வைத்து சுவரொட்டி வைத்திருக்கிறார்கள். இதுவும் சட்ட விரோதம்" என்று அண்ணா திமுகவினர் கூறுகிறார்கள்.

"இந்த சுவரொட்டி என்ன பிரமாதம். நான் சொன்னால், சசிகலாவை எதிர்த்து லட்சம் போஸ்டர்கள் ஒட்ட முடியும்" என்று அமைச்சர் சி.வி. சண்முகம் குரல் எழுப்பியுள்ளார்.

"அதிமுக கொடி வைத்த காரில் சசிகலா வருவது அம்மா வளர்த்த அதிமுகவைப் பலவீனமாக்குவதற்காகவே செய்யப்பட்ட சதி" என்று சிலர் கூறுகிறார்கள். ஒரு சிலரோ ஒரு படி மேலே போய் திமுகதான் இதன் பின்னணியில் இருக்கிறது என்றும் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.

இப்படியாக கழகத்தில் பல விதமான கருத்துகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளாக சசிகலா குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் தவிர்த்து வந்த கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில், "அவர் அடிப்படை உறுப்பினர் பதவியைப் புதுப்பிக்கவில்லை" என்று கூறி, அவர் கட்சியில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் 'தர்மயுத்தம்' நடத்தியபோது, சசிகலா தரப்பு ஆதரவாளர்களாக இருந்த தலைவர்கள் எல்லோருமே இப்போது எதிர்ப்பாளர்களாக மாறிவிட்டனர்.

"செல்வி ஜெயலலிதாவின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து ஓர் உதவியாளரைப் போல்தானே இருந்தார். அவர் எப்படி கட்சித் தலைமையை ஏற்க இயலும்?" என்றும் அண்ணா திமுகவினர் கேள்வி எழுப்புகிறார்கள்.

"எம்ஜிஆர் இருந்தபோது, செல்வி ஜெயலலிதா கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்தார். மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டார். கட்சிக் கூட்டங்களில் பேசினார். பிரசாரங்களில் ஈடுபட்டார். அதனால், கட்சியினருக்கும் மக்களுக்கும் அரசியலில் எம்ஜிஆரால் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், ஜெயலலிதா உயிரோடு இருந்தவரையில், சசிகலா செயற்குழு பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றாரே தவிர, கட்சிக் கூட்டத்திலோ வேறு பொது வெளியிலோ பேசியதே இல்லை. தொண்டர்களுக்கும், மக்களுக்கும் அவர் அரசியலில் அறிமுகம் ஆனதேயில்லை. அதனால், மக்கள் ஆதரவைப் பெறுவது சிரமமே" என்று அரசியல் நோக்கர்கள் கருத்து கூறுகிறார்கள்.

விடுதலை ஆனதுமே காரில் அண்ணா திமுக கொடியைப் பறக்கவிட்டு, சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் சசிகலா. ஒரு வகையில் கட்சித் தலைமைக்குக் கேள்வி எழுப்பும் வகையில் மறைமுகமாகப் போர்க் குரல் எழுப்புகிறார்.

கார்க்கொடி மூலம் போர்க்கொடி ஏந்துகிறார். கழகத்தில் கலகம் வருமா என்பதை வெகு விரைவில் அறிந்து கொள்ளலாம்.

English summary
Senior Journalist Paa Krishnan says the car in which late Chief Minister J Jayalalithaa’s former personal aide VK Sasikala was travelling created controversy amidst elections are round the corner. One has to wait and see whether this will make a big impact on AIADMK party.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In