• search
keyboard_backspace

அன்று வாக்கு சீட்டில் ரஷ்யா மை... இன்று வாக்குப் பதிவு இயந்திரம் மீதும் புகார்கள்... பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

திடீரென்று என் மனைவி வந்து பதறியபடி கூறினாள்: "வாஷிங் மிஷனை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க போல... சரியாவே ஓடலே. துணியெல்லாம் சிக்கிக்கிச்சு.."

நான் திகைத்துப் போய், "சரி பொறுத்துப் பார்க்கலாம். நான் கையாலேயே துணியைத் துவைத்து தருகிறேன். கொஞ்சம்தானே.." என்று கூறியபடி காலையில் வந்த செய்தித் தாள்களை மேயலானேன்.

Writer PaaKis Article on Electronic Voting Machines

கொஞ்ச நேரத்தில் சமையலறையில் இருந்து இல்லத்தரசியின் கூக்குரல், "ஏங்க புதுசா வாங்கின மைக்ரோவேவ் ஸ்டவ் என்ன பிரச்சினையோ தெரியல்லே. இதையும் யாரோ ஹேக் பண்ணிட்டாங்க போல... காய்கறியை வேக வைக்க முடியவில்லை" என்றாள். உடனே, "ஏதாவது வோல்டேஜ் பிரச்சினையோ சரி குக்கர்லேயே வேக வெச்சிடு" என்றேன்.

சிறிது நேரம் கழித்து, செய்தித் தாள்களைப் படித்து முடித்த பிறகு, வாஷிங் மிஷனை இயக்கினேன். சரியாகத்தான் இருந்தது. சரி எதாவது மின்சார பாதிப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன். மைக்ரோவ் வேவ் ஸ்டவ்வும் பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை.

"மின்னணு சாதனங்களா இருந்தா கூட, இதையெல்லாம் யாரும் ஹேக் செய்ய முடியாதம்மா. காரணம், இதுலே எதுவுமே இணையத் தொடர்பு இல்லை" என்றேன்.

படித்த மனைவியிடம் இந்த விளக்கத்தை எளிதில் எடுத்துச் செல்ல முடிந்தது. தொடர்ந்து, "போனவாரம் மொபைல் போன்லே ஏதோ கிரெடிட் கார்டு அப்டேட் செய்யவேண்டும் என்று அழைப்பு வந்ததுன்னு சொன்னியே அதுலே உஷாரா இருக்கணும். அவங்கதான் விஷமிகள் எதையும் செய்வாங்க. நேத்தைக்கு என் வாட்ஸ் அப்லே வந்த படத்தைப் பற்றி நம்ம நண்பர் எச்சரித்தாரே நினைவிருக்கிறதா?" என்றேன்.

"அது போகட்டும், போன வருடம் என் மின்னஞ்சலிலிருந்து ஏதோ பணக் கஷ்டம்னு பலருக்கு மெயில் போயி, அவங்க போன்லே விசாரித்தார்களே நினைவிருக்கிறதா. அதுவும் யாராவது ஹேக் செய்த விஷமம்தான். அதற்குப் பிறகு மின்னஞ்சல் பாஸ்வேர்டை மாற்றிவிட்டேனே.."

இப்படி உரையை முடித்த பிறகு என் மனைவி செய்தித் தாளில் வெளியான சில செய்திகளைக் காட்டினார்.

"இதைப் பாருங்க, வாக்குப் பதிவு இயந்திரத்தை வைத்து மோசடியாகத் தேர்தல் முடிவை மாற்றலாம் என்று அரசியல் தலைவர் பேசியிருக்கிறார்...."

"இதுதான் அரசியல்... அப்படி சொல்றவங்க யாரும் தேர்தலில் வெற்றி பெற்றால் இதையெல்லாம் பேசமாட்டார்கள்." என்றேன்.

வாக்குப் பதிவு இயந்திரம் மீது பல அரசியல் கட்சியினர் தேவையில்லாமல் சந்தேகம் எழுப்பி வருவதால்தான் மேற்கண்ட நிகழ்வுகளைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

"ஆபத்து".. அடம் பிடிக்கும் சீனா.. இந்தியாவின் பேச்சுவார்த்தை.. ஏன் பலனளிக்கவில்லை.. ராகுல் கேள்வி

உடனே, வளர்ந்த நாடுகளில் எல்லாம் இல்லையே என்கிறார்கள். அங்கே மக்கள் தொகை மிகக் குறைவு இந்தியாவில் அதைப் போல் பல மடங்கு என்று சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

சரி காகிதத்தைப் பயன்படுத்தி வாக்குச் சீட்டுகளைத் தயாரித்த காலத்தில் 1996ம் ஆண்டு தேர்தலில் 70 ஆயிரம் டன் தாள் பயன்படுத்தப்பட்டது என்று தகவல் உள்ளது.

காகிதத் தாள்களை விட டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. தாள்களைக் குறைத்துக் கொண்டால், மரங்கள் உயிர் வாழும் என்று சூழலியல் செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

தற்போதைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் நூல்களை வைக்க இடமில்லாமல் மின்னணுப் புத்தகங்களையே சார்ந்திருக்கிறோம். செய்தித் தாள்களைக் கூட மொபைலில் படிப்பது அதிகரித்து வருகிறது. ஆனால், வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்பதை என்னவென்று சொல்ல...

வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று அறிவியல் பூர்வமாக இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை.

அஸ்ஸாமில் சேனி என்ற தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் 9 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கே கேமிராவும் உள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை அனைத்துக் கட்சியினரும் பார்வையிடலாம்.

கடந்த வாரம் ஒரு காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் அந்த அறைக்குள் மனிதர்கள் நடமாடுவதாகச் சந்தேகம் எழுப்பினார். உடனே தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளின் முழுப் பதிவையும் பெரிதாக்கி, அனைத்து அரசியல் கட்சியினருக்கும் விளக்கியபோது, அங்கே ஒரு சிலந்தி கேமிரா அருகே நடமாடிய உண்மை தெரியவந்தது.

"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்பார்களே அதைப் போல்தான் இதுவும்!

அதே சமயம் வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிழை நடக்கவே முடியாதா? என்று கேட்டால், இயலாது என்று மறுக்க முடியாது. வாக்குப் பதிவுக்கு முன்போ, வாக்குப் பதிவு சமயத்திலோ அப்படி பிழை நேர்ந்தால், அதை உடனே சரி செய்து விட முடியும். பல வாக்குச் சாவடிகளில் அப்படி நடந்திருக்கிறது.

அதே சமயம், வாக்குப் பதிவின்போது, அனைத்துக் கட்சிகளின் முகவர்களும் இருப்பதால், சந்தேகம் ஏற்பட்டால் குரல் எழுப்புவார்களே...

வாக்குப் பதிவு இயந்திரம் என்பது ஹார்டுவேர். அது பூட்டு சாவி மாதிரிதான். இயந்திரம் பழுதானால் எல்லாமே பழுதாகத்தான் காட்டும்.

சரியாகச் சொல்லப் போனால், மின் விளக்குடன் இணைக்கப்பட்ட சுவிட்சைத் தட்டினால், மின் விசிறி இயங்காது. மின் விசிறிக்கான சுவிட்சைத் தட்டினால் டிவி இயங்காது. அதைப் போல்தான் வாக்குப் பதிவு இயந்திரமும்.

ஒருவேளை ஏதாவது தவறு நேரும் என்றாலும். பிழையாக இயங்கும் இயந்திரத்தை உடனே கண்டறிந்துவிடலாம். உடனே மாற்று ஏற்பாடும் செய்ய முடியும். அதற்கும் தேர்தல் ஆணையம் தயாராகத்தான் இருக்கிறது. வாக்குப் பதிவு இயந்திரங்களை உடனே மாற்றி வைக்கும் வகையில் மாற்று இயந்திரங்களும் தயாராகத்தான் இருக்கின்றன.

சரி போகட்டும், 1971ம் ஆண்டு தேர்தலில் அப்போதைய இந்திரா காங்கிரஸ் தோற்றுப் போகும், எதிர்க்கட்சியான ஸ்தாபன காங்கிரஸே மத்தியிலும் தமிழகத்திலும் வெற்றி பெறும் என்று ஏராளமானோர் எதிர்பார்த்தனர். காரணம், அப்போது காமராஜர், நிஜலிங்கப்பா, சஞ்சீவரெட்டி, மொரார்ஜி தேசாய் போன்ற உன்னதமான தலைவர்கள் அக்கட்சியில் இருந்தனர். ஆனால், தேர்தல் முடிவு வேறாக அமைந்தது. தமிழக சட்டப் பேரவையில் காமராஜர் கடுமையாக எதிர்த்து வந்த கருணாநிதி தலைமையிலான திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

அப்போது, தேர்தலில் ஏதோ தில்லு முல்லு என்று சிலர் பேசிக் கொண்டனர். ரஷியாவிலிருந்து வந்த மையைத்தான் தேர்தல் ஆணையம் வாக்குச் சீட்டுகளில் பதிவிடப் பயன்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் சின்னத்தில் போடப்பட்ட முத்திரைகள் சில தினங்களில் மறைந்து போய் ஆளும் கட்சி சின்னத்தில் தாளில் தோன்றும் வகையில் சதி செய்யப்பட்டது என்று சிலர் குரல் எழுப்பினர். அதை காமராஜர் போன்ற தலைவர்கள் நிராகரித்தனர். "தேர்தல்லே மக்கள் நம்மை ஏத்துக்கல்லே. அதை ஏத்துக்கிட்டு தொடர்ந்து சேவை பண்ணணும்னேன்.." என்று கூறியதை அடுத்து, பிரச்சினை உடனே முடிவுக்கு வந்தது.

அதே இந்திரா காந்தி தலைமையில்தான் 1977ம் ஆண்டு தேர்தலை நாடு சந்தித்தது. நிலைமை மாறவில்லையா..?

குறைகளைக் கூறுவதற்கு ஓர் எல்லையும் வரம்பும் வைத்துக் கொள்வதே அரசியல் தலைவர்களுக்கு நல்லது.

English summary
Senior Journalist Paa Krishnan stresses that the EVM cannot be tampered He explains about apprehensions of political parties, which cannot be accepted.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In