• search
keyboard_backspace

அன்று கருணாநிதி... இன்று மு.க.ஸ்டாலின்- திமுகவின் புதிய வேல் கோமாளி ‘ மேக் அப்’ - பா. கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

"அன்பே சிவம் என்றால், அவன் கையில் வேல் எதற்கு? வேர்க்கடலை தோண்டவா?"

--- இப்படி 1970ம் ஆண்டுகளில் பல சுவர்களில் பகுத்தறிவு வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததைக் கண்டிருப்போர் பலர். அது பகுத்தறிவு பிரசாரம் தலைதூக்கிய காலம். அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. சுவர்ப் பிரசாரம் செய்தவர்கள் திமுகவினர் இல்லையென்றாலும், அதற்கு மறைமுகமாக ஊக்கம் அளித்தார்கள்.

Writer PaKis Article on DMK President MK Stalins Political Drama

கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு, மத உணர்வைப் புண்படுத்தும் செயல் எல்லாம் அப்போதே தீவிரமாக இருந்தது. அப்போதைய முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி இதற்கு மறைமுகமாக ஆசிர்வாதம் அளித்துவந்தார் என்பதை அப்போதே எதிர்க்கட்சியினரும் பத்திரிகைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தனர்.

இப்படி இருந்த திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் இடையிடையில் இத்தகைய கடவுள் எதிர்ப்பு பிரசாரம், பிராமண எதிர்ப்பு ஆகியவற்றைக் கைவிட்ட காலமும் உண்டு. ஆனால், அதெல்லாம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் என்பது வெட்ட வெளிச்சம்.

திடீரென்று 1980ம் ஆண்டுகளில் திமுக மேடையில் இரு பிராமணர்களுக்குப் பெரிய மரியாதை அளிக்கப்பட்டது. திமுகவின் இந்த ஸ்டண்ட் நாடகத்தில் பிச்சாண்டி அய்யர், ஜீவன் அய்யங்கார் என்ற இரு பார்ப்பனர்களை மேடையில் ஏற்றி, கலைஞர் புகழ்ந்து பாராட்டி, பணமுடிப்பு கொடுத்து சிறப்பித்தார். மேடையில் பேசிய அவர், "திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைளை ஏற்றுக்கொண்டு பாடுபடுவோர் பார்ப்பன சாதியில் இருந்தாலும் அவர்களைக் கொண்டாடுவது கழகத்தின் தனிப் பண்பு. கோயிலில் குழப்பம் விளைவித்தது கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவரின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக என்று நானே திரைப்பட வசனம் எழுதியிருக்கிறேன்" என்று கலைஞர் பேசியிருக்கிறார்.

காரணம், அப்போது 1980ம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் காலம். அவருக்கு வாக்குகள் தேவைப்பட்டன. அதனால், பிராமணர்களையும் தாஜா செய்ய ஆரம்பித்தார்.

ஆனால், இந்த உத்தி அவருக்கு தேர்தலில் கைகொடுக்கவில்லை. மீண்டும் பகுத்தறிவுக் கோட்பாடும் இந்து மத எதிர்ப்பும் அவரது ஆயுதங்கள் ஆயின.

1996ம் ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது கழகம் முற்றிலும் மாறிவிட்டதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது. அதற்குப் பல காரணம் உண்டு. அப்போதைய வெற்றிக்குத் துணை நின்றவர்கள் திராவிடக் கொள்கைகளுக்கு முரணானவர்கள். ரஜினிகாந்த் கொடுத்த 'வாய்ஸ்' சோ, ஜி.கே.மூப்பனார் ஆகியோர் உறுதுணையாக இருந்ததால், பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு எல்லாம் பரணுக்குப் போய்விட்டன.

ஒரு கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் சில கூட்டங்களில் பேசியபோது, "தி.மு.கழகம் நாத்திகக் கட்சி அல்ல. சில தலைவர்கள் நாத்திகர்களாக இருக்கலாம்" என்று புதிய விளக்கத்தை அளித்தனர். அப்போதைய சட்டப் பேரவைத் தலைவராக இருந்தவர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன். அவர் எல்லா நேரமும் நெற்றியில் திருநீறும், மீனாட்சியம்மன் குங்குமமும் ஜொலிக்க இருப்பார். அவர் உண்மையிலேயே ஆன்மிகப் பற்றுள்ளவர்.

அதே சமயம் திமுகவின் சட்டப் பேரவை உறுப்பினரும் அன்றைய திமுக இளைஞர்அணிச் செயலாளருமாக இருந்த மு.க. ஸ்டாலின் ஆலயங்களில் தனக்கு அளிக்கப்பட்ட விபூதி பிரசாதத்தை பவ்யமாக ஏற்ற காட்சிகள் பத்திரிகைகளில் செய்தியாக வெளியாயின.

இப்படிக் கொஞ்ச காலம் இருந்தாலும், மீண்டும் பகுத்தறிவு தலை தூக்கிவிட்டது. கட்சிப் பிரமுகர் ஆதி சங்கர் நெற்றியில் குங்குமத்துடன் வந்து பார்த்தபோது, "நெற்றியில் வழிவது ரத்தமா" என்று கேலி செய்தவர் தலைவர் கலைஞர். தனது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அந்தியூர் செல்வராஜ் அம்மன் கோயில் நிகழ்ச்சியில் தீ மிதித்தபோது, "காட்டுமிராண்டித் தனம்" என்று விமர்சித்தார்.

சேது சமுத்திரத் திட்டம் குறித்த பிரச்சினையின்போது, "இராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்?" என்று கேள்வி எழுப்பினார்.

ஏ.பி.ஜே. அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்துவது குறித்த பேச்சு ஏற்பட்டபோது, "கலாம் என்றாலே கலகம்தான்" என்று அவரையே குத்திக் காட்டினார். அப்துல் கலாம் மீது அவருக்கு வெறுப்பு இருந்தது வேறு விஷயம்.

ஆனால், கலாம் என்ற சொல்லுக்கு "குர் ஆன்" என்ற பொருளும் இருந்ததால், இஸ்லாமியரிடையே பலத்த எதிர்ப்பு எழுந்ததும், பின் வாங்கிவிட்டார். முஸ்லிம்களின் ஓட்டு போய்விடுமே என்ற கவலைதான்.

ஒரு காலத்தில் இந்துக் கடவுளரைக் கிண்டல் செய்தால், யாரும் கேட்க மாட்டார்கள். இந்துக்களை விமர்சித்தால் பொருட்படுத்தமாட்டார்கள் என்ற நிலை இருந்தது. இப்போது சூழ்நிலை மாறி வருவதால், திமுக தனது வேடத்தை மாற்றிக் கொண்டு வருகிறது.

மத நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைப் பழித்தால், வோட்டு பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து மெல்ல மெல்ல புதிய வேடம் அணிந்து கொண்டு வருகிறது.

முருகப் பெருமானைப் போற்றும் கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமரிசித்த கறுப்பர் கூட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்தபோது, மவுனம் சாதித்த திமுக இப்போது முருகனின் வேலையே ஏந்தியிருக்கிறது. இது பக்தியாலா, பரிவினாலா பயத்தினாலா என்பது தெரிந்துவிடும்.

திருப்பதி வெங்கடாசலபதியைத் தரிசிப்பதை, "பொம்மையைப் பார்க்க கூடுகிறார்கள்" என்று கிண்டல் பேசிய கனிமொழி எம்பி நெற்றியில் குங்குமத்துடன் பழங்குடியினரின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் திமுக பிரமுகர்கள் நெற்றியில் விபூதி குங்குமத்தோடு வருகிறார்கள்.

எல்லாம் ஏன்.. தேர்தல் நெருங்குகிறதே, அதற்காகத்தான்..

இதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று தோன்றியது. திரைப்பட நடிகர்கள் படப்பிடிப்பின்போது சாதாரண உடையில்தான் வருவார்கள். படப்பிடிப்பு தொடங்கும் சமயத்தில் "மேக் -அப்" போட்டுக் கொண்டு ஆளே முற்றிலுமாக மாறிவிடுவார்கள். காரணம், கேமிரா முன் அப்படித் தோன்றியாக வேண்டுமே.. கேமிரா சுழன்று, படப்பிடிப்பு பூர்த்தியாகிவிட்டால், புனைந்த ஒப்பனையை நன்றாகக் கலைத்துவிட்டு, பழைய தோற்றத்தில் திரும்பிவிடுவார்கள்.

அதைப் போல்தான் தேர்தல் என்ற படப்பிடிப்புக்காக இப்படியெல்லாம் வேலை ஏந்துவது, குங்குமம், திருநீறு அணிவது எல்லாம் திமுகவினரின் "மேக் அப்". தேர்தல் என்ற படப்பிடிப்பு முடிந்ததும் அவர்கள் அதையெல்லாம் கலைத்துவிடுவது கடந்த கால வரலாறு.

பார்க்கலாம், இது நிரந்தர மாற்றமா? இல்லை, தேர்தலுக்கான மேக் அப்பா?

(Writer and Columnist Paa. Krishnan, exposes the fake rationalism of Dravidian parties, which are now taking up some spiritual activities for their political mileage. It is doubtful whether they will continue such activities with full spirit and one has to wait and see until the elections are over)

English summary
Writer PaKi's Article on DMK President MK Stalin's Political Drama
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In