For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா, ஓம் பிரகாஷ் சவுதாலா, லாலு பிரசாத் யாதவ்... தலைகளோ சிறைகளில் குழப்பமோ அறைகளில்

Google Oneindia Tamil News

"இதோ வரப்போகிறார், அதோ விடுதலை ஆகிறார்" என்று நீண்டகாலமாகவே நாடக பாணியில் கூறப்பட்டு வந்த மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி வி.கே. சசிகலா விரைவில் இந்த முறை விடுதலை ஆகப் போகிறார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவரும் தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்துவிட்டனர். சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்ததும் தமிழக அரசியலில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்த விவாதம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த காலங்களிலும் அவரது விடுதலை குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இந்த முறை நீதிமன்றத்திலேயே ஜனவரி 27ம் தேதி அவர் விடுதலை ஆகக் கூடும் என்பது பதிவு செய்யப்பட்டதால், அதிகாரப்பூர்வமானதாகவே கருத வேண்டியிருக்கிறது.

சசிகலா அரசுப் பொறுப்பு எதிலும் இருந்ததில்லை. ஆனால், சிறைக்குச் செல்வதற்கு முன்பு அவர் தமிழக சட்டப் பேரவையின் அண்ணா திமுக உறுப்பினர்களால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது முதலமைச்சராக ஆகியிருக்க வேண்டியவர். இறுதித் தீர்ப்பு வெளியானதை அடுத்து, அவர் சிறை செல்ல நேர்ந்தது.

Writer PaKis Article on Jailed Political leaders and Politics

இதனிடையில் சசிகலாவை அண்ணா திமுகவில் இணைக்கவேண்டும். அவர்தான் தலைமை ஏற்க வேண்டும் என்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பல காலமாகவே கூறி வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க, கடந்த காலங்களில் சசிகலா ஆதரவாளர்களை "மாஃபியா" என்றே வருணித்து வந்த "துக்ளக்" இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி அண்மையில், "திமுக, காங்கிரஸ் ஆட்சிக்கு வராமல் தடுக்க, அண்ணா திமுகவும் சசிகலா ஆதரவாளர்களின் அமமுக கட்சியும் இணைய வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். சசிகலாவின் ஆதரவு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் அதிமுக அரசை விமர்சிப்பதைக் குறைத்திருப்பதால், இணைவதற்குத் தயார் என்ற மன நிலையைக் கொண்டிருப்பது தெரிகிறது. விடுதலை ஆகும் சசிகலா தேர்தலில் 6 ஆண்டுகள் போட்டியிட இயலாது என்றாலும் கட்சிக்கு வழிகாட்ட இயலும்.

ஆனால், இந்த விஷயத்தில் அண்ணா திமுகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் யாரும் சசிகலாவை ஏற்கும் மனநிலையில் இல்லை. கடந்த பல காலமாக சசிகலாவைக் கட்சியில் சேர்க்க முடியாது என்று அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கூறிவந்தனர். தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே அதைக் கூறிவிட்டார். எனவே, சசிகலா வருகைக்கு அண்ணா திமுக தயாராக இல்லை என்பது தெளிவு.

இருந்தாலும், முன்பு எடப்பாடியாரையும் ஓ. பன்னீர்செல்வத்தையும் இணைத்த பாஜக சசிகலா வெளியே வந்தால் இன்னொரு இணைப்பை நடத்தும் என்று கருதப்படுகிறது. இதனால், அதிமுக கட்சி அறையில் குழப்பமே நீடிக்கிறது.

இதைப் போல் இன்னும் இரு அரசியல் ஆளுமைகளும் ஊழல் புகார்களில் சிறைத் தண்டனை பெற்றவர்கள். இவர்களும் விடுதலை பெற்றால், என்ன அரசியல் மாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.

ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவும் தண்டனை முடிந்து விடுதலை ஆக இருக்கிறார். அவரது பேரன் துஷ்யந்த் கட்சியிலிருந்து வெளியேறி ஜனநாயக ஜனதா கட்சி தொடங்கி, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து துணை முதலமைச்சராகியிருக்கிறார். துஷ்யந்த் தனது தாத்தா ஓம் பிரகாஷ் சவுதாலா ஊழல் குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால், அவர் நடத்தும் இந்திய தேசிய லோக தளத்துடன் தனக்கு உறவில்லை என்பதை நிலைநாட்டிவிட்டார். எனவே, சிறையிலிருந்து அவர் விடுதலை பெற்றால், அவருடன் அரசியல் உறவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா என்பதில் குழப்பமே மிஞ்சுகிறது.

பிகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றியை அடுத்து நிதீஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக ஆனபோதும் அவருக்கும் லாலு பிரசாத் நிறுவிய ராஷ்ட்ரீய லோக தளத்துக்கும் மீண்டும் உறவு மலரலாம் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். தேர்தலில் லாலு பிரசாத் பெயரை எங்கும் குறிப்பிடாமலேயே கணிசமான இடத்தை வென்றிருக்கிறார் அவரது மகன் தேஜஸ்வி யாதவ். சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் விடுதலை பெற்றாலும் உடல் நலம் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபட அவரால் இயலாது. அவர் விடுதலை பெற்றால் அரசியலில் ஏதாவது மாற்றம் நோருமா என்பதில் அக்கட்சிக்கு இப்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த மூன்று அரசியலிலும் ஒரே ஒரு ஒற்றுமை சிறையில் இருப்போர் விடுதலை பெற்ற பிறகு என்ன மாதிரியான அரசியல் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்பதுதான். தலைகள் சிறைகளில் இருந்தாலும், அந்தந்தக் கட்சிகளின் அறைகளில் குழப்பம் நீடிக்கிறது.

(Senior Journalist Paa Krishnan describes that the three convict politicians' releases are expected to make some impact on the political developments in their respective states.)

English summary
Writer PaKi's Article on Jailed Political leaders and Politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X