For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பறையும் பரதமும்: அதிர்ந்தது அமெரிக்க அரங்கம்!

By Shankar
Google Oneindia Tamil News

டல்லாஸ்(யு.எஸ்): பண்டையத் தமிழரின் பறையிசையும் பாரம்பரிய நடனமான பரத நாட்டியமும் ஒருங்கே அரங்கமேறிய அரிய நிகழ்ச்சியில் பார்வையாளர்களின் கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

இந்த அற்புத காட்சியைப் பார்த்த போது, முன்னொரு காலத்தில் பரதமும் பறையிசையும் ஒன்றாக அரங்கேறியது சாதரணமான விஷயமாக இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 5ம் ஆண்டு விழா

டல்லாஸ் நகரில் தமிழ்ப் பணியுடன் அறப்பணியும் ஆற்றிவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 5ம் ஆண்டிற்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியாக ‘தாண்டவக்கோனே' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

அமெரிக்க நிகழ் கலைக் கழகத்தைச் சார்ந்த அமெரிக்க பறையிசைக் குழுவினரின் பறையிசை நடனமும், உடன் பரத நாட்டிய நடனங்களுடன், குழந்தைகள் பங்கேற்ற நடனம் உடபட பல்சுவை நிகழ்ச்சியாக அமைந்தது.

தாய்மண்ணே வணக்கம்!

தாய்மண்ணே வணக்கம்!

தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், முதலாவதாக ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் மண்ணே பாடலுக்கு மூவர்ண கொடியை சித்தரிக்கும் வகையில் உடையுடன் குழந்தைகள் நடனமாட, ஹேமா வடிவமைத்திருந்தார்.

பாடலின் இறுதியில் அசோகச் சக்கரத்துடன் தேசியக்கொடி அசைந்தாடுவது போல் இடம்பெற்ற நடனக் காட்சி அனைவரிடமும் அப்ளாஸ் வாங்கியது..

டிடிஎஸ் ஒலி போல் வந்த பறையிசை

டிடிஎஸ் ஒலி போல் வந்த பறையிசை

முரசு முழங்க , அரங்கத்தின் வாசலிலிருந்து இருபுறமாகவும் குழுவினர் பறையிசைத்துக் கொண்டே மேடைக்கு வந்த போது, டிடிஎஸ் ஒலி வடிவம் போல் அரங்கத்தில் இசை பரவியது. பார்வையாளர்களின் உடல் சிலிர்ந்தது.

வெவ்வேறு தாளத்துடனும் நடனத்துடனும் பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக பறையிசையுடன் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டு விட்டனர்.

இந்த கம்ப்யூட்டர் எஞ்சீனியர்கள் எங்கிருந்து இந்த வித்தையை கற்று இப்படி பிரமாதமாக அசத்துகின்றனர் என்ற கேள்வியும் உடன் எழுந்தது.

இளையராஜாவின் திருவாசகம்

இளையராஜாவின் திருவாசகம்

இளையராஜாவின் இசையில் உருவான 'பூவார் சென்னி...' திருவாசகப் பாடலுக்கு இயற்கைச் சூழலை விவரிக்கும் விதமாக கல்பனா நடனம் அமைத்திருந்தார். குழந்தைகள் தாமரையைச் சித்திரிக்கும் விதமாகவும், பட்டாம்பூச்சியாகவும் நடனமாடினர். உடன் பாம்பு நடனம் மற்றும் மயில் நடனம் சிறப்பு சேர்த்தது.

அமெரிககாவில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் இளையராஜவின் குரலில் தெய்வீகப் பாடலுக்கு நடனமாடியதை பார்த்த போது பிரமிப்பாகவும் இருந்தது. இளையராஜா நேரில் பார்த்திருந்தால் நிச்சயம் மெய் மறந்திருப்பார்.

பறையும் பரதமும்

பறையும் பரதமும்

அறப்பணிகளை வீடியோ காட்சிகளுடன் ரம்யா விவரித்தார். Child to Child Harmony மூலம் சென்னை உதவும் கரங்கள் குழந்தைகளுடன் நட்பு கொண்ட தமிழ்க் குழந்தைகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்.

தொடர்ந்து, மீண்டும் பறையிசைக்க , உடன் பரத நாட்டிய நடன ஆசிரியர்கள் பிரதிபா மற்றும் அன்னபூரணி வந்து இணைந்தனர். இரண்டும் எப்படி கலக்கும் என்று வியந்த வாறே பார்த்துக் கொண்டிருந்தால், எப்படி கலந்தது என்று தெரியாமலே நடனமும் பறையிசையும் மனதை கொள்ளை கொண்டு விட்டன.

தமிழும் இசையும் சங்கமம்

தமிழும் இசையும் சங்கமம்

இன்னொரு நடன ஆசிரியையான கல்பனாவின் குழுவினரும் இணைந்து கொள்ள அங்கே கண்களுக்கும் காதுகளுக்கும் மாபெரும் விருந்தாக அமைந்தது. பரத நாட்டிய நடனமும் பறையிசை நடனமும் ஒருவருக்கொருவர் இடம் கொடுத்து இணைந்ததும் ஒருங்கே ஆடியதும் அற்புதமான காட்சியாகும். அந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

பறையிசைத்து நடனமாடிய அனைவருமே தமிழ் மீது தீராக் காதல் கொண்டு பழம் தமிழர்களின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ளவர்கள். உடன் இணைந்த மூன்று நடன ஆசியர்களுமே தமிழ் மீதும் தமிழிசை மீதும் அதீத ஆர்வத்துடன், பல்வேறு புதிய முயற்சிகளில் தமிழைக் கொண்டாடி வருபவர்கள்.

இவர்கள் ஒன்றிணைந்த போது தமிழும் இசையும் சங்கமம் ஆனதில் வியப்பில்லையே!

புலிட்சர் பழனி குமணன்

புலிட்சர் பழனி குமணன்

பத்திரிக்கைத் துறையின் உயரிய விருதான புலிட்சர் விருது பெற்ற முதல் தமிழரான பழனி குமணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தனது முப்பாட்டனார், தாத்தா, தந்தை பழ நெடுமாறன் மற்றும் சகோதரி சகோதரர்கள் செய்து வரும் பத்திரிக்கைப் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விருதை கருதுவதாக குறிப்பிட்டார்.

தமிழ் மொழியின் சிறப்பை குறிப்பிட்ட அவர், மொழியின் செழுமையால் தமிழர்களின் சிந்திக்கும் திறன் அதிகம் என்றும் , உலகின் பல மொழிகளில் இடது வலது என்பதற்கான வார்த்தைகள் கூட இல்லை. அந்த மொழி பேசும் மக்களின் சிந்திக்கும் திறனும் குறைவு என்ற ஆராய்ச்சி பூர்வமான தகவலையும் குறிப்பிட்டார்.

திருக்குறள் நடனம்

திருக்குறள் நடனம்

இரா. இளங்குமரன் இயற்றியுள்ள திருக்குறள் போற்றி க்கு முதன் முறையாக நாட்டிய அஞ்சலி செலுத்தப்பட்டது. திருக்குறளை உலகுக்கு கொண்டு சேர்க்க வேண்டியதன் அவசியத்தை மையப்படுத்தி இது அமைந்திருந்தது.

பறை இசை கலைஞர்களுடன் அனைத்து நடன ஆசிரியைகள் மாணவர்களும் இதில் பங்கேற்றனர்.

அமெரிக்காவில் பிறந்து கல்லூரியில் பயிலும் மாணவி யாழினி, இடையில் மின்னல் போல் வந்து, சிலம்பம் சுழற்ற பார்வையாளர்கள் மிரண்டு போய்விட்டனர். அனாயசமாக இரண்டு கைகளிலும் அவர் கம்பு சுற்றிய போது, எம்ஜிஆர் படங்களை நினைவு படுத்தினார்.

தொடர்ந்து உடுக்கை, பம்பை, தவில், கட சிங்காரி போன்ற தமிழர் தாளக் கருவிகளை மையப்படுத்தி உருவான தமிழ்த் திரைப்பாடல்களை பாடி நினைவு கூர்ந்தனர். கட சிங்காரியை இளையராஜா அதிகம் உபயோகித்து இருப்பது முக்கிய பாடல்கள் மூலம் தெரிய வந்தது.

வாருங்கள் ஒன்றாகுவோம்

வாருங்கள் ஒன்றாகுவோம்

தமிழர்கள், ஏற்றத் தாழ்வு நீங்கி மன இறுக்கம் தளர்ந்து மகிழ்ந்து கொண்டாடுவதற்காக கும்மி, கோலாட்டாம், ஒயிலாட்டம் என அனைவரும் பங்கேற்கும் வகையில் பல சமூக நடனங்களை அறிமுகப் படுத்தி பின்பற்றி வந்துள்ளனர்.

காலப்போக்கில் நாம் கைவிட்டு விட்டால் கூட, வட நாட்டில் டாண்டியா , பாங்க்ரா என்ற பெயர்களில் இது போன்ற் நடனங்கள் இன்னமும் பிரபலம்.

நமது பண்டைய சமூக நடனங்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கும்மியாட்டம் நடைபெற்றது. தவில், உடுக்கை பம்பை அதிர கும்மி பாடல்களுக்கு அரங்கத்தில் உள்ள பெரும்பான்மையான பெண்கள் பங்கேற்றனர். ஆண்களும் சிறுவர் சிறுமிகளும் கூட மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர்.

மேடையில் மினி தமிழ் நாட்டையே பார்த்த உணர்வு ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் அருண்குமார் வரவேற்புரை ஆற்றினார். விசாலாட்சி நன்றியுரை கூறினார். மொத்தம் திரட்டப்பட்ட 60 ஆயிரம் டாலர்களில் ஏற்பாட்டுச் செலவு போக மீதி தொகை உதவும் கரங்கள் மற்றும் அமெரிக்க தமிழ்க் கல்வி கழகத்திற்கு வழங்கப்பட்டன.

-இர தினகர்

English summary
Thandavakone, a Tamil cultural music and dance programme was held at Dallas, USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X