For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காய்கறிகள் மீதான தடையை நீக்காவிட்டால் தமிழகத்தில் கேரள நிறுவனங்கள் முற்றுகை- பண்ருட்டி வேல்முருகன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக காய்கறிகளுக்கு கேரள அரசு தடை விதித்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். கேரளா இந்த நிபந்தனையை நீக்காவிட்டால் தமிழகத்தில் இயங்கும் கேரளா நிறுவனங்களை முற்றுகையிடுவோம் என்று வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:

G.K.Vasan condemns Kerala not allowed to TN fruits and Veggies

உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் இருந்தால் மட்டுமே கேரள மாநிலத்திற்குள் காய்கறிகளை ஏற்றிவரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வெளிமாநில காய்கறிகளில் நச்சுத்தன்மை இருப்பதாக புகார் கூறி கேரளா இத்தகைய அடாவடியை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகளே மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

கேரளாவுக்கான பெரும்பகுதி காய்கறிகள் தமிழகத்தில் இருந்தே அனுப்பி வைக்கப்படுகிறது.இத்தனை ஆண்டுகாலமாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட காய்கறிகளே தற்போதும் அனுப்பி வைக்கப்படுகிறது. அத்துடன் கேரளாவுக்கு என்று தனியே எந்த காய்கறியும் விளைவிக்கப்படுவதில்லை. அந்த காய்கறிகளைத்தான் தமிழக மக்களும் உண்கிறார்கள். இங்கிருந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா என அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு காய்கறிகளுக்கும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சான்றிதழ் பெறுவது என்பது நடைமுறை சாத்தியமே அற்றது.

அண்மையில் கேரளா இத்தகைய புகாரை கூறிய போது கோவை வேளாண் பல்கலைக் கழகம் காய்கறிகளை ஆய்வு செய்து நச்சுத்தன்மை எதுவும் இல்லை என்று அறிவித்தது. இதன் பின்னரும் கூட கேரளா அரசு இப்படி அடாவடித்தனமாக செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகளின் நீர் ஆதாரமான முல்லைப் பெரியாறு, பாம்பாறு, சிறுவாணி என அனைத்திலும் முட்டுக்கட்டைப் போட்டுப் பார்த்து எதுவும் முடியாத நிலையில் இப்போது காய்கறிக்கு சான்றிதழ் காட்டினால்தான் அனுமதி என சவடால் பேசுகிறது கேரளா.

தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் போது தமிழகத்தின் உற்பத்திப் பொருட்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்வதற்கு உரிமை உண்டு. இதைத் தடுக்க எந்த மாநில அரசாலும் முடியாது. மத்திய அரசு உடனே இதில் தலையிட்டு கேரளாவின் அடாவடித்தனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள், விவசாயிகள் பிரச்சனைகளில் தொடர்ந்து இடையூறு விளைவித்து இரு மாநில மக்களிடையே மோதலை உருவாக்க வேண்டாம்; கேரளா அரசு இந்த நிபந்தனையை உடனே நீக்காவிட்டால் தமிழகத்தில் இயங்கும் கேரளா அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறேன் என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக காய்கறிகளில் நச்சு இருப்பதாக கூறி கேரள அரசு தடை விதித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் இருந்து வரும் பால் மற்றும் இறைச்சியை தடை செய்ய ஆலோசனை நடைபெறுவதாகவும் கேரள உணவுத்துறை அமைச்சர் கூறியிருப்பது தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஏற்கனவே விவசாயத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரள அரசின் இந்த அறிவிப்பு கேரளாவிற்கு காய்கறிகளை அனுப்பும் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் விளையும் காய்கறிகளின் மாதிரிகள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டு பல்கலை பூச்சியியல் துறையின் பூச்சிக் கொல்லி நச்சு இயல் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வகம் மத்திய அரசின் சோதனை மற்றும் அளவீட்டு ஆய்வுக் கூடங்களின் தேசிய அங்கீகாரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வின் படி 96 சதவிகிதம் காய்கறி மற்றும் பழங்களில் நச்சுத்தன்மை இல்லை என்பது தெளிவானது. இதனை தமிழக அரசு கேரள அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

கேரள அரசிற்கு இது குறித்து ஏதாவது சந்தேகம் இருப்பின் அதனைப் போக்குவதற்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தமிழக சிறு வியாபாரிகள், விவசாயிகள், காய்கறி உற்பத்தியாளர்கள் நலன் காத்திட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

English summary
TMC leader G.K.Vasan has condemned Kerala government for ban in Tamil Nadu fruits and Vegetables.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X