For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை ஊதியம்: அன்புமணி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பதற்கான அறிகுறிகள் கூட இன்னும் தென்படவில்லை. அரசு ஊழியர்கள் நலன் சார்ந்த விஷயங்களில் தமிழக அரசு கடைபிடிக்கும் அணுகுமுறையும், அலட்சியமும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

Govt. employees'll be given salary once in 15 days: Anbumani Ramadoss

விலைவாசி உயர்வால் ஏற்படும் கூடுதல் செலவுகளை ஈடு செய்யும் வகையில் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். பண வீக்கத்தின் அளவுக்கு ஏற்றவாறு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வின் அளவும் மாறுபடும். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஒருமுறையும், ஜூலை மாதம் ஒருமுறையும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

கடந்த ஜனவரி முதல் வழங்கப்பட வேண்டிய 6% அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி அறிவித்தது. வழக்கமாக மத்திய அரசு அறிவித்த இரு வாரங்களில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால், மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டால் அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.366 முதல் ரூ.4620 வரை கூடுதல் ஊதியம் கிடைக்கும். ஆனால், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படாததால் சுமார் 18 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வூதியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், இதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.

அகவிலைப்படி உயர்வு பற்றி விளக்கம் கேட்கும் அரசு ஊழியர்களிடம், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால் தான் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க முடியவில்லை என்று தமிழக அரசின் உயரதிகாரிகள் சிலர் கூறியதாக தெரிகிறது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்க தேர்தல் ஆணையம் தடை விதிக்காது. இது வழக்கமான நடைமுறை தான் என்பதால், தமிழக அரசுத் தரப்பில் இதற்கான அனுமதி கோரிய உடனேயே வழங்கப்பட்டு விடும்.

2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது கூட ஏப்ரல் 3-ஆம் தேதியே 10% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இவ்வளவு தாமதம் செய்யப்படுவதைப் பார்க்கும் போது ஊழியர்களுக்கு எதிரான பழிவாங்கலில் அரசு ஈடுபடுகிறதோ? என எண்ணத் தோன்றுகிறது.

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இன்னும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படாவிட்டால், அதன்பின் மே மாத இறுதியில் தான் கிடைக்கும். எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல், தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி பெற்று 2016 ஆம் ஆண்டு ஜனவரி - ஜூன் மாதங்களுக்கான 6% அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களின் நலன்களையும், கோரிக்கைகளையும் திராவிடக் கட்சி அரசுகள் நிராகரித்தே வருகின்றன. அகவிலைப்படியின் அளவு 100 விழுக்காட்டைத் தாண்டியவுடன், அதில் 50 விழுக்காட்டை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க வேண்டும் என்பது மரபு. ஆனால், கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலேயே அகவிலைப்படி 100 விழுக்காட்டைத் தாண்டி விட்ட நிலையில், அப்போதே 50% அகவிலைப்படி உயர்வை அடிப்படை ஊதியத்துடன் இணைத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்ய தமிழக அரசு மறுத்து விட்டது.

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் கடந்த ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்பதால் அவை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இத்தகைய தருணங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படுவது தான் இயற்கை நீதியாக அமையும். ஆனால், அதைக் கூட அரசு ஊழியர்களுக்கு வழங்க திராவிடக் கட்சிகளின் அரசுகள் தயாரில்லை.

பா.ம.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு ஊழியர்களின் அனைத்து குறைகளும் ஆய்வு செய்யப்பட்டு சாத்தியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இதற்காக அரசுத்துறை செயலாளர் தலைமையில் தனி ஆணையம் அமைக்கப்படும், அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக அடிப்படை ஊதியத்தில் 15% சேர்த்து வழங்கப்படும், புதிய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய முறை நடைமுறைப்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை பாட்டாளி மக்கள் கட்சி நிறைவேற்றும். இதற்கெல்லாம் மேலாக அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியம் 15 நாட்களுக்கு ஒருமுறை வீதம் இரு தவணைகளில் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK CM candidate Anbumani Ramadoss said in a statement that government employees will be given salary once in 15 days in their rule.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X