For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரணம்... எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?

By Shankar
Google Oneindia Tamil News

- கவிஞர் வைரமுத்து

ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப் புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார்.

மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.

 Poet Vairamuthu condoles for Jayalalithaa's demise

அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை.

ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை.

திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை.

கலையுலகில் 'அம்மு' என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் 'அம்மா' என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை.

தமிழ்நாட்டிலிருந்து ஒரு 'பிரதமர் வேட்பாளர்' என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை.

போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப் பெருமையைக் கரைத்துக் கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.

உறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். 'கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக' என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். 'கன்னடம் வாழ்க' என்று சொன்னாலும் செல்வேனே தவிர எந்த நிலையிலும் 'தமிழ் ஒழிக' என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர் மொழிமாறாதவர் ஜெயலலிதா.

கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆட முடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். 'ஆயிரத்தில் ஒருவனில்' அவரது அழகு சந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.

சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது.

மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?

English summary
Poet Vairamuthu has conveyed his deep condolences for the demise of CM Jayalalitha.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X