For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர்க்குற்றம்: நம்ப வைத்துக் கழுத்தறுத்த யு.எஸ். முயற்சியை இந்தியா முறியடிக்க வேண்டும்- வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை அரசே நடத்தும் வகையிலான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர உள்ளதாக அறிவித்துள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நம்ப வைத்து கழுத்தை அறுக்கும் முயற்சியை இந்தியா முறியடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பண்ருட்டி தி.வேல்முருகன் இன்று வெளியிட்ட அறிக்கை:

ஐநா மனித உரிமை மன்றத்தின் வரவிருக்கும் செப்டம்பர் மாத அமர்வில் சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானம் கொண்டுவரவிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்திருப்பது ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளிப்பதாக உள்ளது. இது தமிழர்களை நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் செயல்.

TVK condemns US stand against Eelam Tamils

இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லி கடந்த காலத்தில் தானே மனித உரிமை மன்றத்தில் முன்மொழிந்து நிறைவேற்றச் செய்த தீர்மானங்களிலிருந்து திடீரென்று அமெரிக்க அரசு பின்வாங்கியிருப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

இலங்கையில் சென்ற சனவரியில் அதிபர் தேர்தல் நடந்து மகிந்த ராஜபட்சே தோற்று மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றதாலோ, அண்மையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து ரணில் விக்கிரமசிங்கா வெற்றி பெற்று பிரதமர் ஆகியிருப்பதாலோ தமிழ் மக்களுக்கு நீதியோ மறுவாழ்வோ உரிமையோ எதுவும் கிடைத்து விடவில்லை. சிறையிலிருக்கும் இருநூறு அரசியல் கைதிகளில் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை. தமிழர் யாரும் அரசியல் கைதியாக இல்லை என்றே அரசு சாதிக்க விரும்புகிறது. இராணுவமும் சிங்களர்களும் கைப்பற்றிக் கொண்ட 70,000 ஏக்கர் நிலத்தில் 3,000 ஏக்கர் மட்டுமே மீட்டுத் தரப்பட்டுள்ளது. காணாமல் போன 18,000 - 30,000 தமிழர்களுக்கு எந்தக் கணக்கும் இல்லை. வடக்கிலும் கிழக்கிலும் தாழ்வுற்று வறுமை மிஞ்சித் தவிக்கும் தமிழர்களுக்கு எவ்விதத் துயர்துடைப்பு முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை. துயர்துடைப்பு என்று சொல்லி புலம்பெயர் தமிழர்களிடம் பணம் திரட்டுவதில்தான் அரசு குறியாக உள்ளது. இந்நிலையில் சிறிலங்காவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்கத் துணையமைச்சர் நிசா பிஸ்வால் கொழும்பில் பேசியிருப்பதன் பொருள் விளங்கவில்லை.

இனக்கொலை, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் குறித்து ஐநா மனித உரிமை மன்றத்தின் சார்பில் நடைபெற்ற புலனாய்வுக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை என்று நன்கு தெரிந்தும், புலனாய்வு அறிக்கை வெளிவருவதற்கு முன்பே, அமெரிக்க அரசு இலங்கைக்கு ஆதரவாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது உலகத் தமிழர்களின் முதுகில் குத்திய செயலாகும். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எந்தத் தமிழ் அமைப்பும் துணை போகக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறோம். நீதியில்லாமல் நல்லிணக்கம் இல்லை என்ற நிலைப்பாட்டில் சமரசத்துக்கே இடமில்லை.

அமெரிக்கத் துரோகத்தால் ஈழத் தமிழர்களோ தமிழகத் தமிழர்களோ உலகத் தமிழர்களோ சோர்ந்து விடப்போவதில்லை. ஈடுசெய் நீதிக்குப் பன்னாட்டுப் பொறிமுறை, அரசியல் தீர்வுக்குப் பொது வாக்கெடுப்பு என்ற முழக்கங்களை உறுதியாக முன்னெடுப்போம்.

ஐநா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா கொண்டுவரும் இலங்கைக்கு ஆதரவான தீர்மானத்தைத் தோற்கடிக்குமாறு இதர உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக இந்திய அரசு அத்தீர்மானத்தைத் தோற்கடித்து, தமிழ் மக்களுக்கு நீதியும் உரிமையும் கிட்டுவதற்கான மாற்றுத் தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு ஏற்கெனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஒருமனதான தீர்மானங்களுக்கிணங்க, அமெரிக்க-இலங்கைக் கூட்டுச் சதியை முறியடிக்கத் தமிழ் மக்களுக்கு உதவும் படி வலியுறுத்த வேண்டும். அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் கையளித்த விண்ணப்பத்தில் மீண்டும் எடுத்துரைக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டை வரவேற்கிறோம்.

அமெரிக்க அரசின் சிங்கள ஆதரவு வஞ்சகத்தை முறியடிக்கத் தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் வணிகர்களும் தொழிலாளர்களும் உழவர்களும் அனைத்துதரப்பு மக்களும் ஒங்கிக் குரல் கொடுக்கவும், ஒன்றுபட்டுப் போராடவும் முன்வர அழைக்கிறோம்.

இவ்வாறு வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan has condemned US stand against Eelam Tamils on War Crime issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X