திமுக வின் உதாசீனமும் வைகோ வின் விஸ்வரூபமும்!
-ஆர்.மணி
யாருக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இன்று தமிழக அரசியலில் ஒதுக்கித் தள்ள முடியாத சக்தியாகத்தான் உருவெடுத்து நிற்கிறார். கடந்த நான்கு மாதங்களாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்குவதில் வைகோவின் பங்கு மகத்தானது. எவராலும் புறந்தள்ள முடியாதது.
ஜூலை 31 ம் தேதி சசிபெருமாள் தற்கொலைக்குப் பின்னர் பூரண மதுவிலக்குக் கோரி தமிழகம் எங்கும் பிரச்சாரத்தைத் துவங்கினார் வைகோ. அவரது சொந்த ஊரான கலிங்கப் பட்டியில் இருந்த டாஸ்மாக் கடை மதிமுக தொண்டர்களின் போராட்டத்தின் போது அடித்து நொறுக்கப்பட்டது. பூரண மதுவிலக்கைக் கொண்டு வர டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குவது தான் ஒரே வழி என்று வெளிப்படையாகவே தமிழகம் முழுவதும் கர்ஜித்தார் வைகோ. இந்த காலகட்டங்களில், இது ஒரு நான்கு மாதகாலம் நீடித்தது. வைகோவின் பிரதான தாக்குதல் ஜெயலலிதா மீதுதான் இருந்தது. ஜெயலலிதா வை சராமாரியாக விமர்சனம் செய்தார் வைகோ.

சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அமைந்தகரையில் டாஸ்மாக் மதுபானக் கடையை அடித்து நொறுக்கிய வழக்கில் பலர் கைதாயினர். ஆனால் வெளிப்படையாகவே டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்குங்கள் என்று முழங்கிய வைகோவை தமிழக போலீஸ் நெருங்கவே இல்லை.
பின்னர் மக்கள் நலக் கூட்டியக்கம் மக்கள் நலக் கூட்டணியாக அரசியல் இயக்கமாக மாறியது. இந்த மாற்றத்துக்குப் பின்னர் வைகோவின் தாக்குதல் முழுக்க, முழுக்க திமுக வின் மீதும், குறிப்பாக அக்கட்சித் தலைவர் மு. கருணாநிதி மற்றும் அதன் பொருளாளர் மு.க. ஸ்டாலின் மீதும் திரும்பியது. ஒரு மணி நேரம் பேசினால் அதில் 45 நிமிடங்கள் திமுக வையும், மீதி நேரத்தை ஜெயலலிதா வை தாக்கவுமே வைகோ பயன்படுத்திக் கொண்டார். மக்கள் நலக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் வைகோ உருவெடுத்து விட்டார்.
ஆரம்பத்தில் தேமுதிக வை தங்களது கூட்டணியில் சேர்க்க ஆர்வம் காட்டிய வைகோ பின்னர் ஒரு கட்டத்தில் தங்களது அணி டேக் ஆஃப் ஆகி விட்டதாகவும், ஆகவே இனிமேல் இதில் விஜயகாந்த் தலைமை ஏற்று நடத்தும் சாத்தியக் கூறே இல்லை என்றும் வெளிப்படையாகவே பேட்டிக் கொடுத்தார். ஆனால் திடிரென்று நிலைமை மாறியது. மார்ச் 23 ம் தேதி பெளர்ணமி நாளன்று விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணியின் சார்பாக நான்கு கட்சித் தலைவர்கள் போய் சந்தித்தனர். விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளர் என்றும் அறிவித்து விட்டனர். தேமுதிக வுக்கு 124 இடங்களும், மக்கள் நலக் கூட்டணிக்கு 110 இடங்களும் ஒதுக்கப்பட்டு கையெழுத்தும் இடப்பட்டுவிட்டது.
விவகாரம் இதனுடன் நிற்கவில்லை. அடுத்து ஒரு படி மேலே போனார் வைகோ. ‘இனிமேல் இந்த அணி கேப்டன் விஜயகாந்த் அணி' என்றுதான் அழைக்கப்படும் என்றும் முழங்கினார். தனி மனித துதி பாடலை வெறுக்கும் கம்யூனிஸ்டுகள் திண்டாட ஆரம்பித்தனர். நாங்கள் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம் என்று முழங்கிய கம்யூனிஸ்டுகள், விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்த வுடனேயே நெளிய ஆரம்பித்தனர். அடுத்த கட்டமாக இந்த கூட்டணியே ‘கேப்டன் விஜயகாந்த் அணி' என்றுதான் அழைக்கப்படும் என்ற வைகோவின் முழக்கத்தால் தற்போது மெள்ளவும் முடியாமல், விழங்கவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்து விட்டனர்.

‘இது மக்கள் நலக் கூட்டணிதான். கேப்டன் விஜயகாந்த் அணி அல்ல' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறுகிறார். இதற்கு பதில் சொல்லும் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ‘கேப்டன் விஜயகாந்த் அணி' என்று சொன்னால்தான் கிராமத்தில் உள்ளவர்களுக்கும் கூட நன்றாக புரியும். அதனால் தான் இதனை இவ்வாறு அழைக்கிறோம்' என்று சராசரி இந்திய வாக்காளனின் ஆய்ந்தறியும், அறிவுத் திறனை பற்றிய தன்னுடைய விசாலப் பார்வையை முன் வைக்கிறார். நல்லகண்ணு இப்படி சொல்லுகிறாரே என்று கேட்கப் பட்டதற்கு, இதனை நீங்கள் நல்லகண்ணு விடமே போய் கேளுங்கள் என்று நக்கலான சிரிப்புடன் பதிலளிக்கிறார்.
1993 ம் ஆண்டு திமுக விலிருந்து கொலைப் பழி சுமத்தப் பட்டு வெளியேற்றப் பட்ட வைகோ சந்திக்கும் ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல் இது. 1996 ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், 2001 ல் தனியாகவும், 2006 அஇஅதிமுக வும் போட்டியிட்ட வைகோ 2011 தேர்தலை புறக்கணித்தார். 2016 ல் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
கடந்த ஏழு மாதங்களில் மதிமுக பெரிய அளவில் சிதைந்து போயிருக்கிறது. பல மாவட்டச் செயலாளர்களை திமுக இழுத்துக் கொண்டது. 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வுடன் சேர்ந்து கொண்ட முதல் கட்சியும் மதிமுக தான். பாஜக விடமிருந்து விலகிய முதல் கட்சியும் மதிமுக தான்.

கடந்தாண்டு கருணாநிதியின் பேரன் திருமணத்தில் அண்ணா அறிவாலயம் போன வைகோவுக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அடுத்த சில மாதங்களில் வைகோ திமுக வினரால் அவமானப்படுத்தப் பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் அதாவது 2015 ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வைகோ, வரும் சட்டமன்றத் தேர்தலை திமுக வுடனேயே சேர்ந்து சந்திக்க விரும்பியதாகவும், ஆனால் திமுக வில் இருக்கும் வேறு சில அதிகார மையங்கள் இதனை விரும்பாததால்தான் அவர் திமுக விடமிருந்து விலகியதாகவும் இந்த விவரங்களை நன்கறிந்தவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
‘இந்த தேர்தல் திமுக வுடன் சேர்ந்துதான் சந்திக்கப் பட வேண்டும். இதுதான் மதிமுக வுக்கு நல்லது' என்றுதான் வைகோவும் விரும்பினார். ஆனால் திமுக வில் உள்ள சூழல் சரியாக இல்லாது போயிருந்த காரணத்தால் வைகோ வெளியே போனார்.
"இதற்கு முழுக்க, முழுக்க திமுக வைத் தான் குறை கூறுவேன். கடந்த காலங்களில் வைகோ திமுக வுடனான உறவில் முரண்டு பிடித்திருக்கலாம், வெளியே போயிருக்கலாம். ஆனால் இந்த முறை வைகோ வெளியேறியதற்கு அவர் காரணமல்ல,'' என்று கூறுகிறார் திமுக வில் இருக்கும், மதிமுக வில் சில காலம் வைகோவுடன் பணியாற்றிய தென் மாவட்டப் பிரமுகர் ஒருவர்.

இதே கருத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவரும் இந்தக் கட்டுரையாளரிடம் உறுதிப் படுத்தினார். ‘நாங்கள் கடந்தாண்டில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியைப் பற்றிய கருத்தரங்கம் ஒன்றினை நடத்தினோம். அப்போது மதிமுக சார்பில் வைகோ வை கலந்து கொள்ளுமாறு அழைத்தோம். அதற்கு அவர், ‘நான் வருவது கடினம். இந்த முறை திமுக வுடன்தான் போகப் போகிறேன். இல்லையென்றால் என்னால் மதிமுக வைக் காப்பாற்ற முடியாது. வேண்டுமானால் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரையாவது அனுப்பி வைக்கிறேன்,' என்று கூறினார்.
ஆகவே எட்டு மாதங்களுக்கு முன்பு வரையில் திமுக கூட்டணியையே விரும்பிய வைகோவுக்கு திடீரென்று என்ன ஆனது என்பதுதான் புரியாத, சுவாரஸ்யமான புதிராக இருக்கிறது. விஜயகாந்த்தை மார்ச் 23 ம் தேதி தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்த போது வைகோவினுடைய குதூகலம் வெளிப்படையாகவே தெரிந்தது.
மேலும் கடந்த நான்கு வாரங்களாகவே வைகோ வின் தாக்குதல் முழுக்க, முழுக்க அஇஅதிமுக வை விட திமுக வை நோக்கியே திரும்பியிருக்கிறது. குறி வைத்து ஸ்டாலினை வைகோ தாக்கிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக 2ஜி ஊழல் வழக்கில் சம்மந்தப் பட்ட சாதிக் பாட்சா தற்கொலை சம்மந்தமாகவும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி சிக்க வைக்கப் பட்டிருப்பதாகவும், சாஹித் பல்வா ஸ்டாலினை சந்தித்தார் என்றும், 200 கோடி ரூபாய் டிடி யை ஸ்டாலினிடம்தான் கொடுத்தார் என்றும் கூறியது மேலும் அதிர்வலைகளை திமுக வில் ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போதய அரசியலை தாண்டி 2ஜி விவகாரத்தையும், அதிலும் குறிப்பாக சாதிக் பாட்சா தற்கொலையையும் வைகோ பேசத் துவங்கியிருப்பது திமுக வை கடுமையாக ஆத்திரமடைய வைத்துள்ளது. 'அஇஅதிமுக வே கையில் எடுக்காத விஷயத்தை வைகோ கையில் எடுத்திருக்கிறார். 500 கோடி ரூபாயை திமுக விஜயகாந்த்துக்கு கொடுக்க பேரம் பேசியது என்ற விவகாரத்துக்காக வைகோவுக்கு திமுக நோட்டிஸ் அனுப்பியிருக்கிறது. இது உண்மையில் அதற்கு அனுப்பபட்ட நோட்டீஸ் அல்ல. மாறாக சாதிக் பாட்சா தற்கொலை மற்றும் சாஹித் பல்வா வின் 200 கோடி ரூபாய் சம்மந்தமாக வைகோ பேசத் துவங்கியிருப்பதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதற்காக தொடுக்கப் பட்ட வழக்குதான்' என்று இந்தக் கட்டுரையாளரிடம் கூறினார் திமுக மூத்த தலைவர் ஒருவர்.
நிச்சயமாக இன்று வைகோ விஸ்வரூபமெடுத்துதான் நின்று கொண்டிருக்கிறார். எட்டு மாதங்களுக்கு முன்பு வைகோ வை கூட்டணியில் இருந்து வெளியேற்றியதன் பலனை திமுக அனுபவிக்கத் துவங்கியிருக்கிறது என்பது உண்மைதான்.
"இது திமுக செய்த பெரிய தவறு. வைகோ வுக்கு இன்று பெரிய அளவில் வாக்கு வங்கியில்லைதான். ஆனால் வைகோ இன்று மற்ற கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், இடது சாரிகள் மற்றும் விஜயகாந்த் போன்றோர் வந்து சேர்வதற்கான காந்தமாக, மையப் புள்ளியாக, ஆங்கிலத்தில் சொன்னால் "Rallying Point" & "Magnet" ஆக உருவாகி விட்டார். இது தான் திமுக செய்த பெருந் தவறு. இதற்கான பெரிதோர் அரசியல் விலையை நிச்சயம் திமுக கொடுக்கும்,'' என்று கூறுகிறார் திமுக விவகாரங்கள் நன்கறிந்த பத்திரிகையாளர் ஒருவர்.
‘கேப்டன் விஜயகாந்த் அணி' க்கு வாக்குகள் விழுகிறதோ, இல்லையோ, அது வேறு விஷயம். ஆனால் அரசியல் ரீதி யாக இந்தக் கூட்டணியை சரியானதோர் அரசியல் அஜெண்டா வுடன் வைகோ வழி நடத்தத் துவங்கியிருக்கிறார். இது அஇஅதிமுக வை விட திமுக வை தான் அதிகம் பாதிக்கத் துவங்கியிருக்கிறது என்பது திமுக விடுத்திருக்கும் லீகல் நோட்டீசிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
கட்சி துவங்கி 22 ஆண்டுகள் கழித்து முதன் முறையாக வைகோ ஒரு சட்ட மன்றத் தேர்தலில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறார். இது போன்ற கடந்த காலங்களில், மதிமுக ஆரம்பித்த காலங்களில் இருந்து, அவர் சுழன்றது கிடையாது. இதில் சுவாரஸ்யமான விவகாரம், இது போன்று பிரதான பாத்திரத்தை தரித்துக் கொள்ளுபவர்கள் ஐந்தாண்டுகள் ஆண்டு முடித்த ஆளும் கட்சிக்கு எதிராகத்தான் இருப்பார்கள். ஆனால் வைகோ ஆளும் கட்சிக்கு எதிராக அல்ல, மாறாக பிரதான எதிர்கட்சிக்கு எதிராக கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
வைகோ என்பவர் கிரேக்க வரலாறு பேசிக் கொண்டு, கடந்த காலத்தின் கரிய நிழலிலேயே வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு ஆரவாரப் பேச்சாளர் மட்டும் தான் என்ற கருத்து இன்று உடைந்திருக்கிறது.
ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், விஜயகாந்துக்காக திமுக வும் பாஜக வும் அல்லாடிக் கொண்டிருக்கையில், கேப்டனை மக்கள் நலக் கூட்டணிக்கு கொண்டு வந்தது வைகோ வின் மிகப்பெரிய சாதனைதான். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே பெருத்த வேறுபாடுகள் இருக்கிறது. மக்கள் நலக் கூட்டணியை மாற்றாக பார்த்தவர்கள் இன்று மனம் வெதும்பி யிருப்பதும் கூட உண்மைதான். ஆனால் விஜயகாந்த்தை கொண்டு வந்தது ஒதுக்கித் தள்ள முடியாத சாதனை.
இந்தக் கட்டுரை ஏதோ வைகோ வின் புகழ் பாடும் கட்டுரையல்ல. 1993 ம் ஆண்டில் மதிமுக பிறந்த போது அநேகமாக தினமும் வைகோ வை செய்திகளுக்காக சந்தித்த, இத்துனை ஆண்டுகளும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் வைகோ வின் அரசியலை அவதானிக்கும் ஒரு பத்திரிகையாளனின் கட்டுரை இது. அந்த வரலாறெல்லாம் சமூக வலைத் தளங்கள் பிறந்த பிறகு அரசியல் பேச ஆரம்பித்திருக்கும் இணைய பாவனையாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தனிக் கட்சி கண்ட வைகோவின் அரசியல் பரிணாம வளர்ச்சியில் இது முக்கியமான மைல் கல். இந்த முயற்சி தோற்கலாம், வெல்லலாம்... அது வேறு. விவிலியத்தில் ஒரு வாசகம் வரும்.. ‘வேலைக்கு ஆகாதென்று மூலையில் ஒதுக்கப் பட்ட கல்லே முதல் கல்லாயிற்று' என்று. அதுபோல நெருங்கி வந்த வைகோ வை வெளியேற்றியதன் பலனை இன்று திமுக அனுபவித்துக் கொண்டிருக்கிறது. வைகோ வின் வாள் சுழற்றலின் விளைவுகள் மே 19 ம் தேதி தெரிந்துவிடும்!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications