சென்னை : கடற்கரை -செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் ஏற்கனவே இயக்கப்படும் நிலையில், அடுத்ததாக சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையிலான ஏ.சி. மின்சார ரயில் சேவை நாளை முதல் 2 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஏற்கனவே இயக்கப்படும் கடற்கரை -செங்கல்பட்டு ஏசி ரயிலுக்கு பெரிய வரவேற்பு இல்லாத நிலையில், அரக்கோணம்வழித்தடத்திலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் ஏசி ரயில்கள் வரவேற்பை பெற என்ன செய்யவேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் அதிகளவில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகிறது. இங்கு தான் வந்தே பாரத், தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத், எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதேபோல, சென்னைக்கு தேவையான மின்சார ரயில்களும், ஏசி மின்சார ரயில்களும் தயாரிப்பதுமற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது போன்றவையும் மேற்கொள்ளப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை தினமும் 7 லட்சம் பேர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வரும் காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் கடுமையாக உயரும் என்றே தெரிகிறது. இந்நிலையில் பயணிகள் மெட்ரோ ரயிலில் செல்வது போல், குளுகுளுவென ரயிலில் செல்வதற்காக ஏ.சி. மின்சார ரயில்கள் ஐ.சி.எஃப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், முதல் ஏ.சி. மின்சார ரயிலானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இச்சேவையை நாள்தோறும் 6 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், 2-வது ஏ.சி. மின்சார ரயில் தயாரிப்பு பணி கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கியது. பல்வேறு சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்ட இந்த ரயிலானது கடந்த மார்ச் மாதம் தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏ.சி.மின்சார ரயில் சென்னையை அடுத்த அண்ணணூர் ரயில்வே பணிமனையில் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது. பல மாதங்களாக இந்த ரயில் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என பயணிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில், ஏ.சி. மின்சார ரயிலானது சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் வழித்தடத்தில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. ரயிலானது சோதனை அடிப்படையில் டிசம்பர் 24-ந்தேதி வரையில் 2 மாத காலத்திற்கு மட்டும் இயக்கப்பட உள்ளது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இயக்கப்படும். இந்த ரயில் காலை 6.30 மணிக்கு ஆவடியில் புறப்பட்டு 7.45 மணிக்கு அரக்கோணம் வந்தடையும். பின்னர், காலை 8 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 9.30 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். சென்ட்ரலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு 10.25 மணிக்கு ஆவடி சென்றடையும். இதேபோல, மாலை 5.25 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு 6.10 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும். மாலை 6.30 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். கடைசி சேவையானது இரவு 8.10 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு 9.10 மணிக்கு ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். 2 மாத காலத்திற்கு பின்னர் பயணிகளின் வரவேற்பை பொறுத்து இந்த ரயிலானது நீட்டிப்பு செய்யப்பட இருக்கிறது. ஏ.சி.மின்சார ரயில் 12 பெட்டிகளை கொண்டது. தானியங்கி கதவு, கண்காணிப்பு கேமரா, டாக் பேக், டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த ரயில் மக்களிடம் வரவேற்பை பெற வேண்டும் என்றால், , சென்ட்ரல்-ஆவடி 30 நிமிடங்கள்; அரக்கோணம்-சென்ட்ரல் 75 நிமிடங்கள் என்ற இலக்கை நோக்கி ரயில்வே திட்டமிட வேண்டும். தற்போது சென்ட்ரல் → ஆவடி இடையே 45 நிமிடம் என்றும், சென்ட்ரல் ஆவடி 1.30 மணி நேரம் என்றும் உள்ளது. இது சற்றே நாம் கூறியது போல் 15 நிமிடங்கள் குறைந்தால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அதேபோல் கட்டணமும் சென்னை மெட்ரோ ரயிலுக்கு நிகரான கட்டணமே வசூலிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தால் தினமும் பல ஆயிரம் பேர் ஏசி மின்சார ரயிலை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.