சென்னை: ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமை தற்போது மலேசியாவில் படிக்கும் பாரதிதாசன் என்ற மாணவனுக்கு அரங்கேறியுள்ளதாகவும், சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் ஷோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெளிநாட்டில் படிக்கும் ஏழை மற்றும் எளிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் கனவை நனவாக்க உருவான திட்டம் 'அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்'. இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை கிடைக்காமல், மலேசியாவில் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் பாரதிதாசன் என்ற தமிழக ஆராய்ச்சி மாணவர் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் இருந்து உதவித் தொகைக் கேட்டு வருகிறேன். ஆனால், இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலைக் கழகத்தில் இருந்தே வெளியேற்றும் நிலை உருவாகியிருக்கிறது என்று மாணவர் பாரதிதாசன் தனது சமூக வலைத்தளத்தில் கண்கலங்கியிருந்தார். இந்த விவகாரத்தை கையில் எடுத்து இருக்கும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தவெக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- அம்பேத்கர் அயலக கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் #SofaModel அரசை வன்மையாக கண்டிக்கிறேன். தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம். மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது. ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த Reels அரசு துணை நிற்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.உதவித் தொகை கிடைக்கவில்லை
சமூகநீதி நாளில் சமூக அநீதி
ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமை