2004-ல் பிரதமர் பதவியை சோனியா காந்தி மறுத்தது ஏன்? ராகுல் - பிரியங்காவின் கண்ணீர்! சுவாரசிய பின்னணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் இந்திய அரசியலின் வரலாற்றையே மாற்றியமைத்த ஒரு திருப்புமுனை. அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில்.. பாரதிய ஜனதா கட்சி இந்தியா ஒளிர்கிறது என்ற பிரச்சாரத்தை நாடு முழுக்க முன்னெடுத்தது. அதை முறியடித்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஒட்டுமொத்த தேசமும், காங்கிரஸ் தொண்டர்களும் சோனியா காந்திதான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று முழுமையாக நம்பினர்.

ஆனால், அந்த தருணத்தில் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்து, பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன் சிங்கை பிரதமராக அறிவித்தார். அந்த முடிவின் பின்னணியில் நடந்தது என்ன? தன் குடும்பத்துக்குள் நடந்த உணர்ச்சிகரமான போராட்டங்கள் என்னென்ன? கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கட்டாயத்தை அவர் எப்படி எதிர்கொண்டார்?

Sonia Gandhi

ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அவரின் புதிய சுயசரிதை புத்தகமான 'Belonging: A Journey of Love' என்ற நூலில், சோனியா காந்தி அந்த நாள்களில் நடந்த அத்தனை பரபரப்பான சம்பவங்களையும் மிக விரிவாக உடைத்துப் பேசியுள்ளார்.

தேர்தல் வெற்றிக்கு முன்பே நடந்த ரகசியப் பேச்சு

தேர்தல் முடிவுகள் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, சோனியா காந்தியின் வீட்டில் ஒரு முக்கியமான உரையாடல் நடந்தது. ஒரு நாள் அவரது பிள்ளைகளான ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் அவரிடம் நேரடியாக ஒரு கேள்வியைக் கேட்டனர்.

ஒருவேளை தேர்தலில் நம் கட்சி வெற்றி பெற்றால், நீங்கள் பிரதமர் பதவியை ஏற்பீர்களா? என்று கேட்டனர்.

அதற்கு சோனியா காந்தி சிறிதும் தயங்காமல், நிச்சயமாக இல்லை.. மாட்டேன்! என்று உறுதியாகப் பதிலளித்தார். உண்மையாகவா சொல்கிறீர்கள்? என்று பிள்ளைகள் மீண்டும் அழுத்தி கேட்டபோதும், நான் என் முடிவில் மிகத் தெளிவாக இருக்கிறேன் என்றார் சோனியா.

அந்த பதிலைக் கேட்டதும் ராகுல் மற்றும் பிரியங்காவின் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி தெரிந்தது. இதற்குக் காரணம், அவர்களது பாட்டி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதையும், தந்தை ராஜீவ் காந்தி மிகக் கொடூரமாகக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதையும் அவர்கள் நேரில் கண்டு வளர்ந்தவர்கள். அவர்களின் மனதில் பிரதமர் பதவி என்பது குடும்பத்தின் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் ஒரு முள் படுக்கையாகவே பதிந்திருந்தது.

இந்த முடிவை பிள்ளைகளைத் தவிர வேறு யாரிடமும் சோனியா காந்தி கூறவில்லை. தேர்தல் நேரத்தில் இதை வெளியே சொன்னால் கட்சிக்குள் தலைமைக்கான போட்டி வந்துவிடும், ஒற்றுமை குலைந்துவிடும் என்பதால் அவர் தேர்தல் முடியும் வரை அதைத் தனக்குள்ளேயே ரகசியமாக வைத்து இருந்தார்.

கூட்டணித் தலைவர்களின் முற்றுகையும் சோனியாவின் தடுமாற்றமும்

தேர்தல் முடிவுகள் வெளியாகி காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றதும், அரசியல் களம் மிக வேகமாகச் சூடுபிடித்தது. ராஜீவ் காந்தி கூட்ட அரங்கில் ஒரு நாள் மாலையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் இருந்த தலைவர்கள் ஒவ்வொருவராக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசினர். "நீங்கள்தான் பிரதமர் ஆக வேண்டும், வேறு எவரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்று சோனியா காந்தியை வற்புறுத்தினர். சோனியா அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். பேச்சு முடிந்ததும், அனைவரும் சோனியாவின் பதிலை எதிர்பார்த்துப் பார்த்தனர்.

அப்போது சோனியா காந்தி தனது தைரியத்தை வரவழைத்து, "என்னால் பிரதமர் பதவியை ஏற்க முடியாது" என்று கூறினார்.

அவ்வளவுதான்! அந்த அறையே பெரும் கூச்சலில் அதிர்ந்தது. அங்கிருந்த தலைவர்கள் அனைவரும் ஆவேசமாக எழுந்து சோனியாவைச் சுற்றி வளைத்தனர். சோனியாவும் தன் நாற்காலியை விட்டு எழுந்து நின்றார்.

இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்! நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியாது மேடம்! முடியாது என்ற பதிலை ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்!" என்று மிரட்டுவது போன்ற கடுமையான குரலில் பேசினர். பல தலைவர்கள் சூழ்ந்து நின்று ஒரே நேரத்தில் ஆவேசமாகப் பேசியதால் சோனியா காந்தி நிலைகுலைந்து போனார்.

இனி வேறு வழியில்லை என்ற விரக்தியில், சத்தமில்லாமல் மிக மெல்லிய குரலில் சரி... (Theek hai) என்று சொல்லிவிட்டார்.

அவர் வாக்கியத்தை முடிப்பதற்குள், அவர் சம்மதித்துவிட்டார்! சோனியாஜி ஏற்றுக்கொண்டார்! என்று தலைவர்கள் மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினர். சோனியா காந்தி என்ன செய்வதென்று தெரியாமல் சிலையாக நின்றுவிட்டார்.

கோபத்தில் கொந்தளித்த ராகுல் காந்தி, அழுத பிரியங்கா

ஆனால், இந்தச் சம்பவங்கள் நடந்துகொண்டிருந்த போது அறையின் ஜன்னல் திறந்து கிடந்தது. ஜன்னலுக்கு வெளியே நின்றபடி பிரியங்கா காந்தி இதையெல்லாம் அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தார். தன் தாயை ஆண் தலைவர்கள் சூழ்ந்து நின்று கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதைப் பார்த்ததும் அவர் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.

உடனே அவர் ஓடிச்சென்று ராகுல் காந்தியின் அறைக்குள் நுழைந்தார். என்ன நடந்தது பிரியங்கா? என்று ராகுல் பதற்றத்துடன் கேட்டார். அம்மா அவர்களுக்குச் சம்மதம் சொல்லிவிட்டார்! தலைவர்கள் அனைவரும் அம்மாவைச் சூழ்ந்து நின்று சம்மதிக்க வைத்துவிட்டார்கள்! என்று பிரியங்கா அழுதுகொண்டே கூறினார்.

தந்தையின் மறைவுக்குப் பிறகு தங்களின் தாயைப் பாதுகாக்கும் அரணாக நின்ற இரு பிள்ளைகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். ராகுலும் பிரியங்காவும் சோனியா காந்தியை நோக்கி வேகமாக நடந்து வந்தனர்.

ராகுல் காந்தியின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது. நீங்கள் சம்மதம் சொல்லிவிட்டீர்களா? என்று கர்ஜித்தார்.

அவர்கள் நான் சொல்வதைக் கேட்கவே இல்லை ராகுல்... எனக்கு இந்த பதவி வேண்டாம் என்பது உனக்குத் தெரியும். அவர்கள் என் மீது அளவுக்கு அதிகமான நெருக்கடியைக் கொடுத்தார்கள் என்று சோனியா விளக்க முயன்றார்.

அதைக் கேட்டு ராகுல் காந்தி மேலும் கொதிப்படைந்தார். நெருக்கடியா? உங்களுக்கு நெருக்கடி தந்தார்களா? எங்களைப் பற்றி நீங்கள் யோசித்தீர்களா? எங்கள் நிலையை நினைத்துப் பார்த்தீர்களா? என்று கோபத்துடன் சத்தமிட்டுவிட்டு, அறையை விட்டு வேகமாக வெளியேறிச் சென்றார்.

அப்போது அழுதுகொண்டிருந்த பிரியங்கா காந்தி தாயின் அருகே வந்தார். அம்மா, நீங்கள் எப்போதுமே உங்கள் முடிவில் தெளிவாக இருந்திருக்கிறீர்கள். யாருடைய கட்டாயத்துக்கும் பணியாதீர்கள். நீங்கள் என்ன முடிவு எடுத்தீர்களோ அதையே செய்யுங்கள். உங்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறினார். இருவரின் கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.

இறுதி முடிவு

அன்று இரவு சோனியா காந்திக்குத் தூக்கமில்லாத பெரும் போராட்டமாக இருந்தது. நாம் என்ன செய்ய போகிறோம்? என்ற கேள்வி அவரது மனதை வாட்டியது. தான் பிரதமரானால், நான் வெளிநாட்டு பெண் என்ற விவகாரத்தை பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு பெரிய அரசியல் பிரச்சனையாக மாற்றுவார்கள்.

மதரீதியான பிரிவினைகளைத் தூண்டி நாட்டில் தேவையில்லாத வன்முறைகளையும் குழப்பங்களையும் உருவாக்குவார்கள் என்ற அச்சம்.

அப்படிப்பட்ட நேரத்தில்.. தனது கணவரை மிஸ் செய்த சோனியா காந்தி.. தன் கணவர் ராஜீவ் காந்தி படுக்கும் பக்கத்தில் போய் படுத்துக்கொண்டார். ராஜீவின் நினைவுகளுடன் கண் அயரும் போது, அவரது மனசில் ஒரு குரல் தெளிவாக ஒலித்தது.. சோனியா, உனக்கு நீ உண்மையாக இரு. உனக்குதான் எது சரியென்று எப்போதும் தெரியுமே, அதைச் செய்.. இந்தப் பதவியை விட்டுவிடு! என்ற குரல் கேட்டது..

அவ்வளவுதான், அடுத்த சில மணி நேரங்களிலேயே தூங்கி விழித்த சோனியா, நேராக ராகுல் காந்தியின் அறைக்குச் சென்று கதவைத் தட்டினார்.

ராகுல், நான் ஒரு தெளிவான முடிவுக்கு வந்துவிட்டேன். நான் பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லை. என் முடிவில் நான் உறுதியாக நிற்கப் போகிறேன் என்றார்.

இதைக் கேட்டதும் ராகுல் காந்தி தாயை அன்போடு கட்டிப்பிடித்துக்கொண்டு, இதுதான் சரியான முடிவு அம்மா! என்றார். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு சோனியா காந்தியின் மனதுக்கு அன்றுதான் முதல்முறையாக முழுமையான அமைதி கிடைத்தது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெடித்த அழுகையும் சலசலப்பும்

அடுத்த நாள் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் கூடியது. சோனியா காந்தி உள்ளே நுழைந்ததும் அனைத்து எம்.பி.க்களும் எழுந்து நின்று மேசைகளைத் தட்டி பலத்த கைதட்டலுடன் அவரை வரவேற்றனர்.

ஒவ்வொரு தலைவராக எழுந்து, சோனியாதான் பிரதமராக வேண்டும் என்று உரை நிகழ்த்தினர். ஆனால், சோனியா காந்தி தனது கண்ணாடியை மாட்டிக்கொண்டு, கையில் வைத்திருந்த ஒரு சிறிய காகிதத்தை எடுத்தார். அந்த மண்டபத்தில் ஒரு மயான அமைதி நிலவியது.

சோனியா காந்தி தனது உரையைப் படிக்கத் தொடங்கினார்.

நான் அரசியலுக்கு வந்த இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு விஷயம் மிகத் தெளிவாக இருக்கிறது. பிரதமர் பதவி என்பது என் இலக்கு அல்ல. இந்த இடத்தில் நான் எப்போதாவது நிற்க நேர்ந்தால், என் மனசு சொல்வதை போலவே நடப்பேன் என்று கூறி இருந்தேன்.. அந்த மனசு இன்று எனக்கு இந்த பதவி வேண்டாம் என்கிறது.. அந்த மனசு இந்தப் பதவியை பணிவோடு மறுக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளையிடுகிறது.. அதையே செய்யப்போகிறேன், என்றார்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் கூட்டத்தில் பெரும் கூச்சல் குழப்பம் வெடித்தது! எம்.பி.க்கள் தங்கள் இருக்கைகளை விட்டு எழுந்து மேடையை நோக்கி ஓடிவந்தனர். "வேண்டாம் மேடம்! வேண்டாம்!" என்று கத்தினார்கள். பல மூத்த தலைவர்கள் மேடையிலேயே அழத் தொடங்கினர்.

நெருக்கடி அதிகரிக்கவே.. சோனியா காந்திக்கு மூச்சுத் திணறியது.. மயக்கம் வருவது போலிருந்தது. ஒரு சக உறுப்பினர் அவரது கையைப் பிடித்து மேடையை விட்டு வெளியே அழைத்துச் சென்றார். பிள்ளைகளும் அவருடன் வெளியே வந்தனர்.

சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட பிறகு சோனியா மீண்டும் உள்ளே வந்தார். இன்னும் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அடுத்த பிரதமரை நானே தேர்வு செய்ய எனக்கு அனுமதி கொடுங்கள் என்று சோனியா எம்.பி.க்களிடம் கேட்டார். அவர்கள் அமைதியாக ஒப்புக்கொண்டதும், சோனியா காந்தி கம்பீரமாக ஒரு பெயரை உச்சரித்தார்.. அந்த பெயர் "டாக்டர் மன்மோகன் சிங்"

அரங்கமே மீண்டும் கைதட்டலால் அதிர்ந்தது. ராகுலும் பிரியங்காவும் எழுந்து நின்று மகிழ்ச்சியோடு கைதட்டினர். இந்தியாவின் மிக உயரிய பொறுப்புகளில் ஒன்றான பிரதமர் பதவிக்கு ஜீனியஸ் ஒருவரை சோனியா தேர்வு செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.. சோனியா காந்தி தனது காகிதங்களை எடுத்துக்கொண்டு அமைதியாக மேடையை விட்டு இறங்கி வெளியே நடந்தார்.

இந்திய நாட்டின் மிகப்பெரிய அதிகாரங்களில் பிரதமர் பதவி ஒன்று.. ஆனால் அந்த நாற்காலி தேடி வந்தபோதும், தன் குடும்பத்தின் பாதுகாப்பு, அரசியல் நேர்மை மற்றும் தேசத்தின் நலன் ஆகியவற்றைக் கருதி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை துறந்த சோனியா காந்தியின் அந்தத் தியாகம், இன்றும் இந்திய அரசியல் வரலாற்றின் மறக்க முடியாத நிகழ்வாக நிலைத்து நிற்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+