Delimitation: “இரண்டே கேள்வி தான்.. 59 ஆக கூடணுமா? 31 ஆக குறையணுமா?” தங்கம் தன்னரசு கொடுத்த விளக்கம்
சென்னை: "தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு கொடுக்கவில்லை என்றால் பேராபத்து வந்திருக்கும். 39-ல் இருந்து 59-ஆக போக விரும்புகிறீர்களா இல்லை 39-ல் இருந்து 31 ஆக குறைய விரும்புகிறீர்களா என்பதுதான் கேள்வி" என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வரவுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிப்பது ஏன் என்பது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தங்கம் தென்னரசு, "தொகுதி மறுவரையறை மசோதா முன்னாள் கொண்டு வந்த போது திமுக கடுமையாக எதிர்த்தது. அந்த மசோதாவை மக்களவையில் கொண்டு வந்தபோது திமுக அதை தோற்கடித்தது. அந்த மசோதா அப்படியே கொண்டு வரப்பட்டிருந்தால் அது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடுபாட்டை உருவாக்கி இருக்கும்.
இன்றைக்கு நாம் சொன்னதை எல்லாம் ஏற்றுக்கொண்டு மசோதாவை கொண்டு வருகிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், ஆளுங்கட்சி ஒரு பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். ஒருவேளை திமுக இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன சூழ்நிலை வந்துவிடும்? ஆளுங்கட்சியின் இந்த மசோதா தோற்கடிக்கப்படலாம். உடனடியாக 2027ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தனிப்பெரும்பான்மையில் உடனடியாக இந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றினால், தமிழ்நாட்டில் உள்ள 38 என்கின்ற இந்த எண்ணிக்கையும் 31ஆக குறையும்.
நியாயமான தொகுதி மறுவரையறை அடிப்படையில் 39 இடங்களில் இருந்து 59 தொகுதிகளாக ஆகப் போவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறீர்களா? அல்லது வரக்கூடிய பேராபத்தை கவனிக்காமல் விட்டு, 2027 மக்கள்தொகை அடிப்படையில் யாருடைய தயவும் இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் மசோதாவை பாஜக நிறைவேற்றி இப்போது இருக்கக்கூடிய 39லிருந்து 31ஆக குறைந்து நம்முடைய மக்களவை உறுப்பினர்களை இழந்து நம் வலிமையை நாம் இழந்து நிற்கப் போகிறோமா? இந்த 2 கேள்வி தான்.
இந்த சூழலில், தமிழ்நாட்டின் உரிமையை காப்பாற்றுவதற்கு இந்த முடிவை எடுக்காவிட்டால் வருங்காலத்தில் தமிழ்நாடு அழிக்க முடியாத ஒரு பெரிய பேரழிவை அரசியல் ரீதியாக சந்திக்க நேரிடும். நம்முடைய உரிமைகள் முழுமையாக பாதிக்கப்பட வேண்டிய ஒரு நிலை வரும். அன்றைக்கு தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு யாருமில்லை, எனவே வரக்கூடிய அந்த ஆபத்தை தடுக்க வேண்டும் என்றால், இன்றைக்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கண்டிப்பாக நம்முடைய உரிமையை நிலைநிறுத்த வேண்டும்.
2 முக்கியமான கோரிக்கையை உள்ளடக்கி இருக்கக்கூடிய இந்த மசோதாவை நாம் ஆதரிக்கலாம் என்கின்ற முடிவை மு.க.ஸ்டாலின் எடுத்தார். 7.18% விகிதாச்சாரம் இருக்க வேண்டும், அதேபோல 25 வருடம் அந்த விகிதாச்சாரத்தில் மாற்றம் ஏற்படக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கை முன்வைத்தோம். மத்திய அரசு அதை ஏற்று கொண்டதற்கு பிறகுதான், அந்த மசோதாவை நாங்கள் ஆதிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
