ஓம் படத்தின் 8வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? தனுஷ் படத்தின் தற்போதைய நிலை இதுதான்!
சென்னை: தனுஷ் நடிப்பில் வெளியான ஓம் திரைப்படம் முதல் வாரத்தை கடந்து 2வது வாரத்திற்குள் நுழைகிறது. படம் வெளியாவதற்கு முன்பே தனுஷ், மம்முட்டி, சாய்பல்லவி என பெரிய நட்சத்திர கூட்டணி அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்ற எதிர்பார்ப்பு என ரசிகர்களிடையே படத்திற்கு நல்ல ஹைப் இருந்தது. அதற்கேற்றபடி முதல் சில நாட்களிலும் வசூல் இருந்த நிலையில் இப்போது படத்தின் வசூல் வேகம், எந்த அளவில் இருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயமாக மாறி இருக்கிறது.
ஓம் 8 நாள் வசூல்
ஓம் திரைப்படம் 8 நாட்களை திரையரங்குகளில் கடந்துள்ள நிலையில் உலக அளவில் 100 கோடி வசூல் என்ற மைல்கல்லை தாண்டி இருக்கிறது. பாக்ஸ் ஆபீஸ் தகவல்களின்படி, இதுவரை உலக அளவில் 116 கோடி முதல் 113 கோடிக்கு அதிகமான வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் மட்டும் இந்த படம் 71.50 கோடி நெட் வசூலை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. வெளிநாடு வசூலும் படத்திற்கு கணிசமாக வந்திருக்கிறது. ஆனால் முதல் 3 நாட்களில் இருந்த வேகத்தை இப்போது பார்க்க முடியவில்லை.

முதல் வார வசூல்
முதல் வார இறுதியில் நல்ல வசூலை கொடுத்த ஓம் திங்கள்கிழமையிலிருந்து படிப்படியாக குறைய தொடங்கியது. வார நாட்களில் வசூல் சரிவை சந்தித்த நிலையில் 8வது நாளான வெள்ளிக்கிழமை இந்தியாவில் சுமார் 2.20 கோடி வசூல் மட்டுமே கிடைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் தொடர்ந்து அதிக வசூலை பெற்றாலும், 2வது வாரத்தில் தொடக்கத்தில் திரையரங்குகளிலும், காட்சிகளிலும் ஏற்பட்ட மாற்றம் படத்தின் வசூலை பாதித்திருக்கின்றன.
குறிப்பாக முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது, 8வது நாள் வசூல் கணிசமாக குறைந்து இருக்கிறது. ஆனாலும் இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு என 2 நாட்கள் வார இறுதி என்பதால் இந்த நாட்களில் வசூல் அதிகரிக்கிறதா? என்பதுதான் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications
