முஸ்லிம்களை திருப்பரங்குன்றத்தில் நெகிழ வைத்த இந்துக்கள்.. இதுதான் நம்ம தமிழ்நாடு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, முருக பக்தர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.. அரோகரா முருகா என்ற முழக்கங்களும், முருகன் பாடல்களும் மலைப்பகுதி முழுவதும் ஒலித்தன. பக்தர்கள் பட்டாசுகள் வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.. ஆனால், இதே திருப்பரங்குன்றத்தில், நடந்த இன்னொரு சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் தலைமையிலான குழுவினர் நேரில் கண்காணித்தனர்.

Thiruparankundram Sikkandar Dargah Communal Harmony

தீபம் ஏற்றுவதற்காக 3 கொப்பரைகள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. நெய், திரி உள்ளிட்ட பொருட்களுடன் சிறப்பு பூஜையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மலைக்குச் சென்று ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

மலை முழுவதும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே மலை மீது செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அரோகரா முருகா - வெடித்த பட்டாசு

மாலை 5 மணியளவில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதும், அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா முருகா என முழக்கமிட்டனர். மலை அடிவாரத்திலும் ஏராளமானோர் திரண்டு நின்று தீபத்தைக் கண்டு மகிழ்ந்தனர். சிலர் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.

இதனிடையே, கூட்டத்தில் சிலர் பாரத் மாதா கீ ஜே, இந்து நாடு, இந்து மக்கள் நாடு என்று முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு சில பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

முஸ்லிம்கள் பிரார்த்தனை

இப்படி பல்வேறு விவாதங்களும் பரபரப்பும் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தபோது, அதே திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் மனதை நெகிழ வைக்கும் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.

மலைப்பகுதியில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்கு முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்ய வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஊடகத்தினர் அவர்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் இந்துக்கள், அங்கிருந்த செய்தியாளர்களிடம், "பிரார்த்தனை செய்ய வந்தவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம், அவர்களை பதற்றமடைய செய்ய வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை Times Now செய்தியாளர் தரணி பாலசுப்ரமணியம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "இன்று, சிக்கந்தர் தர்காவில் பிரார்த்தனை செய்வதற்காக திருப்பரங்குன்றம் மலைக்கு வந்த முஸ்லிம்களை ஊடகத்தினர் படம் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், பதற்றமடையச் செய்ய வேண்டாம் என்றும் உள்ளூர் இந்துக்கள் ஊடகத்தினரிடம் கேட்டுக்கொண்டனர். மேலும், இந்தப் பதிவுடன் "Tamil Nadu ❤️" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதநல்லிணக்கம்

ஒரே திருப்பரங்குன்றம் மலையில் ஒரு தரப்பினர் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இன்னொரு தரப்பினர் தர்காவுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். மதம் வேறுபட்டாலும், மற்றவர்களின் வழிபாட்டு உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதைத்தான் அங்குள்ள உள்ளூர் மக்களின் இந்தச் செயல் மீண்டும் நினைவுபடுத்துகிறது.

மதம், அரசியல் எனப் பல விவாதங்கள் எழுந்தாலும், ஒருவரின் வழிபாட்டு உரிமையை மற்றவர் மதிப்பதுதான் சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட உதவும்... பல்வேறு அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், திருப்பரங்குன்றத்தில் வெளிப்பட்ட இந்த மதநல்லிணக்கச் சம்பவம் பலரது மனதிலும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+