பாரத் மாதா கீ ஜே! இது இந்து நாடு.. இந்து மக்கள் நாடு! திருப்பரங்குன்றம் கோவில் முன்பு சர்ச்சை கோஷம்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி முழுவதும் முருக பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர்கள் அரோகரா முருகா என்று கோஷங்களை முழுங்கியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாட்டுக்கள் பாடியும் முருகன் பாடல்களை பாடி தங்கள் பக்தினை வெளிப்படுத்தி தீபத்தில் ஏற்றப்படும் தீபத்தினை காண்பதற்கு திரளான கூட்டம் வந்துள்ளது. இந்நிலையில், கூட்டத்தில் சிலர் பாரத் மாதா கீ ஜே.. இந்த நாடு இந்து நாடு.. இந்து மக்கள் நாடு என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இன்று மாலை 5.00 மணியளவில் தீபத் தூணில் தீபம் பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கிடையே ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் மலையில் தூணில் ஏற்றப்பட உள்ள தீபத்துக்காக 3 கொப்பரைகளை கோவில் நிர்வாகத்தினரிடம் நீதி அரசர்கள் ஒப்படைத்துள்ளனர். திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றும் கொப்பரைகள், நெய், சூடம், திரி உள்ளிட்ட பொருட்களை வைத்து நீதிபதிகள் வைத்தியநாதன் பார்த்திபன் உள்ளிட்டோர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.
தொடர்ந்து கோவில் நிர்வாகத்திடம் 3 கொப்பரைகள் ஒப்படைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழுவினர், மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலை ஏறும் பாதை வழியாக சென்று , நேரில் ஆய்வு செய்து தேவையான விபரங்களை அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தனர்.
திருப்பரங்குன்றம் மலை முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில், மலைமீது தீபம் ஏற்றுபவர்கள் உள்ளிட்ட குறிப்பட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே தங்களையும் மலைக்கு மேல் அனுமதிக்க வேண்டுமென சில இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு காரணங்கள் கருதி மலைக்கு 50 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என திட்டவட்டமாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பிறகு குறிப்பிட்ட பக்தர்கள் மட்டுமே மலை மீது அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏற்பாடுகள் முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டது. தூண் மீது வைக்கப்பட்டிருந்த மண் கொப்பறையில் திரி, தீபம், சூடம் ஆகியவை வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்ட போது பக்தர்கள் அரோகரா என முழக்கமிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே அடிவாரப் பகுதியில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதாக குற்றச்சாட்டப்படுகிறது. முருக பக்தர்கள் பாஜகவினர் உள்ளிட்ட பலர் அங்கு கூடியிருந்த நிலையில், திடீரென கூட்டத்துக்குள் இருந்த சிலர் பாரத் மாதா கி ஜே.. இது இந்து நாடு.. இந்து மக்கள் வசிக்கும் நாடு என முழக்கமிட்டனர். இதற்கு பக்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications
