ஸ்டாலினைக் கலாய்க்க விஜய் செய்த அதே சைகை.. இப்போது திருப்பரங்குன்றத்தில் விஜய்க்கே திரும்பிய பூமராங்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மத்தியப் பாதுகாப்புப் படையின் முழுக் கட்டுப்பாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சற்று நேரத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்திலும், மலைப் பாதையிலும் கூடியுள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், முதலமைச்சர் விஜய்யைச் சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர்.
அந்தக் கை சைகை என்ன? பின்னணி என்ன?
கடந்த சட்டசபைக் கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சியான திமுகவையும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் விதமாக, முதலமைச்சர் விஜய் தனது கையால் ஒரு குறிப்பிட்ட சைகையைச் செய்து காட்டியிருந்தார். "உங்களால் ஒன்றும் செய்ய முடியாது, எல்லாம் முடிந்துவிட்டது" என்ற தொனியில் finish என்பது போல விஜய் செய்த அந்தச் சைகை, அப்போது தவெக தொண்டர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
ஆனால், இன்று திருப்பரங்குன்றம் வழக்கில் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்ற விடாமல் தடுக்கத் தமிழக அரசு எடுத்த அனைத்து முயற்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் தோல்வியடைந்துள்ளன. கோவில் அறங்காவலர் குழு சஸ்பெண்ட் செய்யப்பட்டு, மலையின் பாதுகாப்பு சிஆர்பிஎஃப் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் விஜய்க்குத் திரும்பிய 'பூமராங்'
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவையடுத்து, இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதைக் காணத் திருப்பரங்குன்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
கோவில் வளாகத்திற்குள் நின்று கொண்டிருக்கும் பக்தர்கள் பலரும், சட்டசபையில் விஜய் செய்த அதே கை சைகையைச் செய்து காட்டி, இப்போது என்ன ஆச்சு? என்பது போல அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.

தவெக அரசு இந்த வழக்கில் படுதோல்வி அடைந்து, தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளும் நிலையைச் சுட்டிக்காட்டி, பக்தர்கள் உற்சாகமாகக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். யாரைக் கலாய்க்க விஜய் அந்தச் சைகையைப் பயன்படுத்தினாரோ, அதே சைகையை இன்று அங்கு உள்ள மக்கள் விஜய்க்கு எதிராகப் பயன்படுத்துவது சமூக வலைதளங்களில் பெரிய பூமராங் விமர்சனமாக மாறியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் ஏற்றப்படும் தீபம் - உச்சகட்ட பாதுகாப்பு
இதற்கிடையில், உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரின் மேற்பார்வையில் தீபம் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தீபத்தூண் அமைந்துள்ள பகுதியில் தொழிலாளர்கள் மூலம் தற்காலிக மேடை அமைக்கப்பட்டு, தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மலை உச்சியில் உள்ள தர்காவுக்கு 50 மீட்டர் தள்ளி, பக்தர்கள் அமைதியான முறையில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், சிஆர்பிஎஃப் வீரர்கள் மலை முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளதால், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் பக்தர்களின் 'அரோகரா' கோஷத்தாலும், பரபரப்பாலும் நிரம்பி வழிகிறது.


Click it and Unblock the Notifications
