மதவாத சக்திக்கு துணை போகலாமா ஸ்டாலின்.. திமுக முடிவை மறுபரிசீலனை செய்யுங்க.. பிரகாஷ் ராஜ் கோரிக்கை!
சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக வரலாற்றுப் பிழையான முடிவை எடுக்க கூடாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா மிகவும் ஆபத்தானது என்று கூறிய பிரகாஷ் ராஜ், சுயநலமான முடிவை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நாளை மறுநாள் கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற என்சிபி - எஸ்பி மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன் வைத்த 2 நிபந்தனைகளையும் பாஜக ஏற்றுக் கொண்டது. குறிப்பாக அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு மற்றும் 25 ஆண்டுகளுக்கு இதே நிலை தொடரப்படும் என்ற கோரிக்கையை மத்திய அரசு மசோதாவில் இணைத்துள்ளது. அதேபோல் சில பிரச்சனையான விஷயங்களை விவாதிக்கவும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் திமுக தயாராகி இருக்கிறது.
மேலும் சில கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் முன் வைக்கும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுகவின் இந்த முடிவு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இதனால் இந்தியா கூட்டணி ஆதரவாளர்கள் பலரும் திமுக தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியினர் திமுக இந்த மசோதாவை ஆதரிப்பது சரியா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிரகாஷ் ராஜ், அவசர அவசரமாக சில திருத்தங்களோடு பாஜக தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது. மதம், மொழி, இனம, சிறுபான்மையினருக்கு, இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இதனை எல்லாருக்கும் உணர்த்திய திமுக, மதவாத சக்திக்கு துணைப் போவது முதுகில் குத்தும் செயல் இல்லையா?
இது சுயநலமான முடிவு.. ஒட்டுமொத்தமாக மக்களுக்கு துரோகம் செய்யும் முடிவை ஏற்க முடியாது. மாநில உரிமைக்கு போராடி இந்தியாவுக்கு வழிகாட்டிய திமுக, வரலாற்று பிழையான முடிவை எடுக்க கூடாது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். உங்களின் இந்த முடிவு அடுத்த தலைமுறையை தீர்மானிக்க போகிறது. இந்த முடிவால் அடுத்த தலைமுறை உங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
