டபுள் கேம் திமுக.. பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் "முதுகுத்தியாக" மாறிய வரலாறு.. வன்னி அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான திமுக இப்படி கள்ளத்தனமாக பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் "முதுகுத்தியாக" மாறுவதை தமிழர்களும் மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா? திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை, இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது என சமூகநீதித்துறை அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு காட்டமாக தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக எடுத்துள்ள புதிய முடிவு தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவைத் தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தும் மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

thiruma

ஸ்டாலின் எடுத்த முடிவு

இதற்கு விளக்கம் அளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையாமல் பாதுகாக்கப்படும் என்றும், உணர்ச்சிவசப்படாமல் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறையில் திமுக ஆரம்பம் முதலே ஒரு முக்கிய நிபந்தனையை வலியுறுத்தி வந்தது. 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளின் விகிதம் மாறக்கூடாது என்பதுதான் அந்த நிலைப்பாடு.

முக்கியமாக, தமிழகத்தின் தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என்று திமுக வலியுறுத்தி வந்தது. இதற்காக 2024-ல் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. 2025-ல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தியது.

திமுக நிலைப்பாடு

இந்நிலையில், இன்று ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் புதிய முடிவு எடுக்கப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை தொகுதிகளை 50 சதவீதம் உயர்த்தும் மசோதாவால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்திலிருந்து 7.21 சதவீதமாக உயரும் என்பதால், மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்தது. இந்த மசோதா நவம்பர் 30-ம் தேதி மக்களவையிலும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையிலும் விவாதத்துக்கு வரவுள்ளது.

இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா இன்று செய்தியாளர்களிடம் சொல்லும்போது, தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் தற்போதுள்ள 7.18 சதவீதத்திலிருந்து 7.21 சதவீதமாக உயருமே தவிர குறையாது. எனவேதான் திமுக இந்த முடிவை எடுத்துள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.

அதிர்ச்சியில் திருமாவளவன்

ஆனால், திமுகவின் இந்த முடிவு விசிக தலைவர் திருமாவளவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைவிட திமுகவின் இந்த நிலைப்பாடு தனக்கு அதிக அதிர்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு தமிழகத்துக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்குமே ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், பாஜக மற்றும் சங் பரிவார்களின் ஒரே தேசம், ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற திட்டத்துக்கு வழிவகுக்கும் என்றும் விமர்சித்துள்ளார்.

வன்னி அரசு விமர்சனம்

திருமாவளவனைத் தொடர்ந்து விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசும் திமுகவின் முடிவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமூகநீதித்துறை அமைச்சரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு, இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"இன்று- தமிழ்நாடு முழுக்க தொகுதி மறுவரையறைக்கு எதிராக விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. கடந்த ஏப்ரல் 17,2026 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இந்த தொகுதி திருத்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மைக்கு 352 உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தி்ருக்க வேண்டும். ஆனால், 298 உறுப்பினர்களே ஆதரவளித்து வாக்களித்ததால் 131 வது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

எதிர்த்து வாக்களித்ததில் திமுக பங்கு முக்கியமானது. இந்த மசோதா வருவதற்கு முன்பாகவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்றைய திமுக அரசு கடந்த 14 பிப்ரவரி 2024 அன்று கொண்டு வந்த தீர்மானத்தை
அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்கள் வாசித்தார்.

பாஜகவின் சதிக்கோட்பாடு

இந்தியாவிலேயே பாஜகவின் சதிக்கோட்பாட்டை முதலில் அம்பலப்படுத்திய தீர்மானமாக அது அமைந்தது.
சட்டப்பேரவையில் விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன.பாஜகவை தவிர. ஆனால்,இன்று பாஜக எதிர்ப்பு நிலையை கைவிட்டு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களிக்கப்போவதாக வெளிப்படையாக திமுக அறிவித்திருப்பது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகமாகும்.

காலமுழுக்க மாநில உரிமை பேசிய இயக்கம் திமுக. இப்போது மாநில உரிமைகளுக்கும் துரோகம் செய்ய துணிந்துவிட்டது. அது மட்டுமல்ல, திருப்பரங்குன்றம் வழக்கில் மாநில உரிமையை அச்சுறுத்துகின்ற வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இதற்கு பின்னால் சனாதன சங்கிகள் இருப்பது வெளிப்படையானது.

திருப்பரங்குன்றத்தில் ஆகமவிதிப்படியே தீபம் ஏற்ற வேண்டும் என்பது தான் கோவில் மரபு.முருக பக்தர்களும் கோவில் நிர்வாகத்தினரும் இதையே கடந்த காலங்களில் கடைப்பிடித்து வந்தனர். அந்த நிலைப்பாட்டையே இப்போது தவெக அரசு எடுத்தது. மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் மிகச்சிறப்பாக சங்கிகளை கையாண்டார். உச்சநீதி மன்றத்தின் உத்தரவு தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிரானது என்பதை துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

பாஜக & திமுக

ஆனால், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை எடுக்காமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசரமாக எடுத்து CRPF படையை அனுப்பியுள்ளது பாஜக அரசு. இந்த வழக்கை பொறுத்தவரை மிகத்துணிச்சலாக கையாண்டது தவெக அரசு.இன்னும் அழுத்தமாக சொல்வதென்றால், கடந்த திமுக அரசை விட தவெக அரசு மிக சிறப்பாகவும் பொறுப்பாகவும் கையாண்டது. உண்மை இப்படி இருக்க திருப்பரங்குன்றம் தீர்ப்பு தொடர்பாக திமுக எந்த போராட்டமும் நடத்தாமல் கள்ள மவுனம் காத்து வருகிறது.

மாநில உரிமைக்காக போராடிய இயக்கமான திமுக இப்படி கள்ளத்தனமாக பாஜகவுடன் கை கோர்த்து தமிழ்நாட்டின் "முதுகுத்தியாக' மாறுவதை தமிழர்களும் மதச்சார்பற்ற சக்திகளும் மன்னிப்பார்களா? திமுகவின் இந்த இரட்டை துரோகத்தை- இரட்டை நாடகத்தை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+