தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுக முடிவெடுத்துவிட்டது.. ஆனால் ஆளும் விஜய்யின் நிலைப்பாடு என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள 132-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்த தொகுதி மறுவரையறை மசோதாவுக்குஆதரவு அளிப்பதாக திமுக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தமிழ்நாட்டின் தற்போதைய 7.18% பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு, எம்பி இடங்கள் 39-லிருந்து 59 ஆக உயரும் என்பதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த முடிவை 'தமிழ்நாட்டிற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி' எனக் கூறியுள்ளார்.

ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக மக்களிடையே இப்போது எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.. தமிழ்நாட்டை ஆளும் கட்சியான விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதுதான்.

tvk vijay

திமுகவைக் கேள்வி கேட்கும் தவெக : தன் நிலைப்பாட்டைச் சொல்லாதது ஏன்?

கடந்த இரண்டு நாட்களாகத் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நாடு முழுவதும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில், "திமுக தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும்; மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்" என்று தவெக தரப்பில் சமூக வலைதளங்களில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக, மத்திய அரசின் இந்தப் புதிய 132-வது சட்டத் திருத்த மசோதாவை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பது குறித்து முதலமைச்சர் விஜய் இதுவரை எந்தவொரு தெளிவான கருத்தையோ, அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டையோ அறிவிக்கவில்லை.

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50% இடங்களை உயர்த்தும் மத்திய அரசின் புதிய பார்முலாவை தவெக ஏற்கிறதா?

தமிழ்நாட்டிற்குக் கிடைக்கவுள்ள 20 புதிய எம்பி தொகுதிகள் மற்றும் 351 சட்டமன்றத் தொகுதிகள் குறித்து ஆளுங்கட்சியின் பார்வை என்ன?

இந்த மசோதா நிறைவேறினால், 2029-ல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மூலம் தமிழக சட்டமன்றம் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பேசப்படும் நிலையில், ஆளுங்கட்சியாக தவெக எடுக்கும் முடிவு என்ன?

இவை எதற்கும் ஆளுங்கட்சித் தரப்பில் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை.

கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்காவது குரல் கொடுக்க வேண்டாமா?

நாடாளுமன்றத்தில் தவெகவுக்கு ஒரு எம்பிகூட கிடையாது என்பது உண்மைதான். ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அதன் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடத்தி வருகிறது. இந்தியா கூட்டணியிலும் தவெக அங்கம் வகிக்கிறது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி இந்த மசோதாவைத் தங்களின் அரசியல் எதிர்காலத்திற்கே ஆபத்தானது எனக் கருதி கடுமையாக எதிர்த்து வருகிறது. இதற்காக மம்தா பானர்ஜி மூலமாக திமுகவிடம்கூட காங்கிரஸ் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், குறைந்தபட்சம் தங்களின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவாவது தவெக தலைவர் விஜய் குரல் கொடுத்திருக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆளுங்கட்சியின் மவுனம் ஏன்?

கடந்த ஏப்ரல் மாதம் பழைய மசோதா வந்தபோது, "தென் மாநிலங்களின் குரலை நசுக்கும் இந்த மசோதாவைத் தமிழ்நாடு உறுதியாக நிராகரிக்கும்" என்று முதலமைச்சர் விஜய் பேசியிருந்தார். ஆனால் போராட்டம் எல்லாம் செய்யவில்லை. அப்போது திமுக fair delimitation கேட்டது ஆனால், விஜய் கோலம் போடும் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயர்வு என்ற புதிய திருத்தத்துடன் மத்திய அரசு மசோதாவைக் கொண்டு வரும்போது, அதை ஆதரித்தால் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு எதிராகப் போய்விடும்.. எதிர்த்தால் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் 59 எம்பி இடங்களை எதிர்ப்பதாகிவிடும் என்ற இக்கட்டான சூழலில் தவெக சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

எது எப்படியோ, மாநிலத்தின் எதிர்காலத்தையும், சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையையும் தீர்மானிக்கப்போகும் இவ்வளவு முக்கியமான மசோதாவில், தமிழகத்தை ஆளும் கட்சி எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் காப்பது மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+