திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்றும் நிகழ்வில் பங்கேற்க 50 பேருக்கு மட்டுமே அனுமதி! பரபரப்பு
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபமேற்றப்படும் நிலையில் 50 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என மத்திய பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனால் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் நிகழ்வை காண்பதற்காக காலை முதலே ஏராளமானோர் சென்றனர். இந்த நிலையில் மலை பகுதியில் ஏராளமானோர் கூடுவதற்குரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்யாததால் தற்போது பொதுமக்களை போலீஸாரும் சிஆர்பிஎஃப் படையினரும் அனுப்ப மறுத்து வருகிறார்கள்.

மேலும் மேலே இருந்த பக்தர்களும் கீழே அனுப்பப்பட்டுவிட்டனர். அது போல் தர்கா பகுதியில் இருந்த இஸ்லாமியர்களும் கீழேவந்துவிட்டனர். எனினும் மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரம் பார்த்து கோயில் நிர்வாக பொறுப்பாளர்களான முன்னாள் நீதிபதிகள் பார்த்திபனும், வைத்தியநாதனும் பூஜிக்கப்பட்ட கொப்பரைகளுடன் வந்ததால் அவர்களிடம் பொதுமக்கள் முறையிட்டனர். அப்போது அவர்கள் மேலே தீபமேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு பிறகு அனுமதிப்பதாக தெரிவித்தார்.
ஆனால் தற்போது 50 பேரை மட்டும் மலை உச்சிக்கு அனுப்புமாறு நீதியரசர்கள் தெரிவித்துவிட்டதால் எல்லாரையும் அனுப்ப முடியாது என சிஆர்பிஎஃப் படையினர் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் "உச்சநீதிமன்றம் பொதுமக்களும் செல்லலாம் என உத்தரவிட்டும் ஏன் மறுக்கிறீர்கள் " என வாக்குவாதம் செய்து வருகிறார்கள். அது போல் இந்து அமைப்பினரும் தங்களை அனுமதிக்கக் கோரி வருகிறார்கள்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. முதலில் 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது 50 பேரை அனுப்ப அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2.30 மணி முதல் 3 மணிக்குள்ளாக மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு யாருக்கும் மலை மேல் செல்ல அனுமதி இல்லை .
கோயில் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் 50 பேர் மட்டுமே மலை மீது அனுமதிக்கப்படுவர். மேலே எல்லாரையும் அனுப்பினால் விபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என போலீஸார் கோரியுள்ளனர். மேலும் எல்லா பக்தர்களுக்கும் மலை மீது பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்வதற்கும் குறைந்த நேரமே இருப்பதால் அது சாத்தியமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
