பல அடி பள்ளம்.. திருப்பரங்குன்றம் தூணுக்கு பக்தர்கள் அனுமதியில்லையே ஏன்? உள்ளூர் மக்கள் சொன்ன தகவல்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கடந்த 24 ஆம் தேதி தீபம் ஏற்றப்படாத நிலையில் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தீபம் ஏற்றும் பகுதிக்கு சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளிட்டவற்றை கடந்துதான் செல்ல வேண்டும், அதிகமானோர் அப்பகுதியில் கூடினால் நெரிசல் ஏற்பட்டு காலிடறி பள்ளத்தில் விழும் அபாயம் இருக்கிறது. அதனால் தான் அங்கு மாவட்ட நிர்வாகம் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான அருள்மிகு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை தீப தினத்தன்று கோவில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவது வழக்கம்.

இந்த நிலையில் கோவில் மட்டுமல்லாது மலை உச்சியில் இருக்கும் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலதுசாரி அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் அது சர்வே தூண் தான் எனக்கூறி கடந்த ஆட்சி வரை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.
திருப்பரங்குன்றம் மலை
கடந்தாண்டு அங்கு உயர்நீதிமன்றம் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டது. மத்திய பாதுகாப்பு படையையும் அனுப்பியது. ஆனால் மேல்முறையீடு செய்யப் போவதாக சொல்லி அந்த தீபம் ஏற்ற திமுக அரசு அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து தமிழக அரசு சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 ஆம் தேதி தீப தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்றம்
ஆனால் பல்வேறு காரணங்களால் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. இதை அடுத்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இன்று தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டதோடு தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்தனர்.
கார்த்திகை தீபம்
இந்த நிலையில் இன்று மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலை முழுவதும் சிஆர்பிஎப் வீரர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு கொப்பரை, நெய், திரி உள்ளிட்டவை மலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
பாதுகாப்பு பிரச்சனை
சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் மட்டுமல்ல அது மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என சிஆர்பிஎஃப் கூறியுள்ளது. அப்படி மலையில் என்ன பாதுகாப்பு பிரச்சனை என உள்ளூர்வாசிகளிடம் கேட்டபோது சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
தீப தூண்
மலை அடிவாரத்தில் இருந்து படிக்கட்டுகள் வழியாகத்தான் குறிப்பிட்ட அந்த தீப தூண் செல்லும் பகுதிக்கு செல்ல முடியும். முதலில் உச்சி பிள்ளையார் கோவில் அதற்கு பிறகு ஒரு சிறிய பள்ளிவாசல், மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்கா, அதற்கு அருகில் தான் இந்த குறிப்பிட்ட தூண் அமைந்துள்ளது. சுமார் 12 அடி உயரம் கொண்ட இந்த தூணில் நான் தற்போது தீபம் ஏற்றப்பட உள்ளது.
பெரிய பள்ளம்
தற்போது மழை பெய்யும் நேரம் என்பதால் உயரமான மற்றும் வலுக்கும் தன்மை கொண்ட பாறையில் பொதுமக்களை ஏற அனுமதித்தால் விபத்துக்கு வழிவகுக்கும். மேலும் மலையை சுற்றி பள்ளமாக இருப்பதும் ஒரு ஓரத்தில் தீப தூண் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் அதிகமானோர் இப்பகுதியில் கூடும் போது கால் இடறி பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாயமும் உள்ளது. இதனால் தான் காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இங்கு பொது மக்களுக்கு அனுமதி மறுத்துள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
