தொகுதி மறுவரையறை மசோதா.. திமுக முடிவு அதிர்ச்சியாக உள்ளது! திருமாவளவன் ஷாக்
சென்னை: நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. திமுகவின் இந்த நிலைப்பாட்டுக்கு விசிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறுகையில், "உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், திமுக எடுத்து இருக்கும் நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலைப்பாடு" என்று கூறியுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்ட உள்ளது. வரும் 30 ஆம் தேதி லோக்சபா கூட உள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுகு ஆதரவு அளிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திமுக எடுத்துள்ள இந்த நிலைப்பாடு, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கும் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த திருமாவளவன் கூறியதாவது:- "திமுக எடுத்து இருக்கிற நிலைப்பாடு இந்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைவிடவும் பெரும் அதிர்ச்சியை தருவதாக உள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், திமுக எடுத்து இருக்கும் நிலைப்பாடு தேசத்திற்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய நிலைப்பாடு. சங் பரிவார்களின் சதி நிலைப்பாடுக்கு துணைபோகிற நிலைப்படாக இருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ஆட்சி என்ற சங் பரிவார்களின் சதி அரசியலுக்கு இது வழிவகுக்கும்" என்றார்.
முன்னதாக இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:- #FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு.. கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டு முதல் தி.மு.க மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!.. 1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.க ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
திமுகவிற்கு லோக்சபாவில் 22 எம்பிக்களும், ராஜ்யசபாவில் 8 எம்பிக்களும் உள்ளனர். தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளதால், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.




Click it and Unblock the Notifications
