பாஜக பொறியில் திமுக.. சிக்கினால் கதை முடிஞ்சுது.. ஸ்டாலினுக்கு கி. வீரமணி எச்சரிக்கை
சென்னை: மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளது. கடந்தாண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது திமுக எதிர்த்து போரடியது. அதனால் அப்போது அந்த மசோதா தோல்வியடைந்தது. தற்போதைய மசோதாவுக்கு திமுகவிடம், பாஜக ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளை மீறி மசோதாவை ஆதரிப்பதாக திமுக கூறியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக விரிக்கும் பொறியில் திமுக சிக்கி விடக்கூடாது என்று கி. வீரமணி எச்சரித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக திமுகவுக்கு நமது அவசர, அன்பு வேண்டுகோள் இது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன் திட்டமிட்டே கொண்டு வந்த தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றவிடாமல், மாநிலங்களின் - குறிப்பாக தென் மாநிலங்களின் உரிமையைப் பறித்து, குரலற்றவர்களாக்கும் சூழ்ச்சி வியூகம் அமைத்ததைத் தோற்கடித்தப் பெருமை திமுகவின் வரலாற்றுப் பெருமையானது.

திமுக நிலை கவலை
இந்தியா முழுவதும் பரவி, வரலாறு படைத்தது. தற்போது ஏதோ 'திமுக அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறி, புதிய சில மாய்மால ஜாலத் திட்டங்கள் - சதவிகித கணக்குக் காட்டி வஞ்சிக்கும், தேன் கலந்த விஷ உருண்டையை ஏற்றுவிட்டது; சமரசம் செய்துகொண்டது' என்ற பரவலானப் பிரச்சாரம், ஊடகம், சமூக வலைதளங்கள், திமுகவை அழிக்க விரும்பும் அரசியல் கட்சிகளிடையே வெகுவேகமாகப் பரவி வருவது குறித்து, தாய்க்கழகமான திராவிடர் கழகம் பெரிதும் கவலை கொள்கிறது. அது உண்மையாக இருக்காது.
உண்மையாக இருக்கக் கூடாது என்பதை உரிமையுடன் நம்புகிறோம். எனவே, திமுக தலைமைக்கு அதன் காவல் அரணான திராவிடர் கழகம் விடுக்கும் உரிமை வேண்டுகோள். அருள்கூர்ந்து, கடந்த காலத்தில், அதன் நிலைப்பாட்டினை - எவ்வளவு வாக்குறுதிகளை பிஜேபி அமித்ஷாக்கள் தந்தாலும், அதனை நம்பி, சதவிகித கணக்குத் தேனை உண்மையென நம்பி, வாக்காளர்களுக்கு இந்த கட்டத்தில், என்ன விளக்கம், சமாதானம் சொன்னாலும், மக்கள் மன்றத்தில் திமுகவிற்குக் கெட்ட பெயரும், தீராப் பழியும் தான் ஏற்படும் .
பாஜக வலையில் திமுக
இது திராவிடர் கழகத்தின் கருத்து மட்டுமல்ல; அதன் பாதுகாப்பில் அக்கறை கொண்ட பல பெருமக்கள் - அறிவுசார் பிரமுகர்கள் நம்மிடம் இடையறாது கடந்த இரண்டு நாள்களாகத் தொடர்பு கொண்டு, வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுத்த கதையாகி விடக் கூடாது; அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதை திமுகவிடம் வற்புறுத்திக் கூறுங்கள் என்றும் அன்புக் கட்டளையிட்டார்கள். எனவே, முந்தைய சட்டமன்றத் தீர்மானம், தொகுதி மறுவரையறைபற்றி 25 ஆண்டுகளுக்கு தற்போதைய முறையே தொடரும் என்பதில் உறுதியுடன் இருக்கவேண்டும்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா எல்லாம் என்ன நிலைப்பாடோ அதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும். தென்மாநிலங்களை பாதிக்கும் வகையில், எந்த முயற்சிக்கும் இடந்தரக்கூடாது. இந்திய அளவில் நமது குரல் நசுக்கப்படக் கூடாது. அதிக இடங்கள், விகிதாச்சாரக் கணக்கு என்ற பாஜக பொறியில் (Trap) திமுக சிக்கிவிட்டால், அது திமுகவை வீழ்த்திடத் துடிக்கும் இன, அரசியல் எதிரிகளுக்குச் சரியான வாய்ப்புத் தந்ததாக ஆகிவிடக் கூடும்.
அவசர வேண்டுகோள்
தமிழ்நாட்டில் உள்ள சூழ்நிலையில், வெண்ணெய் திரண்டு வரும்போது, தாழியை உடைத்தது போல் ஆகிவிடும் என்ற பெருங்கவலையால், இதனை அவசர வேண்டுகோளாக, உரிமை விழைவாக திமுகவுக்கு விடுக்கிறோம்.உறவோடும், உரிமையோடும் இதனைச் சுட்டுவது நமது கசப்பான கடமையாகும். சிந்திக்கவும், சிந்திக்கவும்!சறுக்கல் பெரிய விபத்தாகிவிடக் கூடும் என்பதே நமது கவலை"
என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
