"கதறும் காங்கிரஸ்".. ராஜ்யசபா எம்பி பதவியை வாங்கிவிட்டு பாஜக பக்கம் சாய்ந்த சரத்பவார்! செம ட்விஸ்ட்
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு 'இந்தியா' கூட்டணியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி ஆதரவு தெரிவித்துள்ளது. சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியினர் சரத்பவார் ராஜ்யசபா எம்பியாக ஆதரவு தெரிவித்தனர். அந்த தேர்தலில் சரத்பவார் வென்று எம்பியான நிலையில் தற்போது அவர் எங்களின் முதுகில் குத்திவிட்டு பாஜக பக்கம் தாவி உள்ளதாக காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு 'இந்தியா' கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி ஆதரவு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இப்படி இருக்கும்போது சரத்பவார் அணி மத்திய பாஜக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சரத்பவார் அணிக்கு தற்போது 8 எம்பிக்கள் உள்ளனர். இவர்கள் லோக்சபாவில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளனர்.
இந்நிலையில் தான் சரத்பவாரை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் விஜய் வடெட்டிவார் கூறுகையில், ''சரத் பவாருக்கு மற்றவர்களின் முதுகில் குத்தும் வரலாறு உள்ளது. அதிகார பசியில் துடிக்கிறார். தண்ணீரை விட்டு வெளியே வந்த மீனைப் போல அவர் தவிக்கிறார். அவருக்கு என்று எந்தவொரு உறுதியான கொள்கையும் இல்லை.
நாங்கள் தான் பவாரை ராஜ்யசபா எம்பியாக அனுப்பி வைத்தோம். சரத்பவார் ராஜ்யசபா எம்பியாக வேண்டும் என்பதற்காக நாங்கள் எங்களுக்கான வாய்ப்பை விட்டு கொடுத்தோம். தற்போதைய அவரது முடிவு மோசமானது. ஜனநாயகத்தை சிதைத்தவர்கள் என்ற வரலாறு எழுதப்படும்போது அதில் நிச்சயமாக சரத்பவார் பெயரும் இருக்கும். சரத் பவார் கட்சி செய்துள்ள இந்தச் செயல் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் தவறானது'' என சாடியுள்ளார்.
சரத்பவார் கடந்த மார்ச் மாதம் ராஜ்யசபா எம்பியாக காங்கிரஸ் ஆதரவில் தேர்வானார். மகாராஷ்டிராவில் காலியான 7 ராஜ்யசபா இடங்களுக்கு மார்ச் 16ல் தேர்தல் நடந்தது. ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் 36 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். அப்போது சரத்பவார் ராஜ்யசபா எம்பியாக ஆசைப்பட்டார். ஆனால் அவரிடம் 36 எம்எல்ஏக்கள் இல்லை. வெறும் 10 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஆதரவு வழங்கியது.
மகாராஷ்டிராவில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் (காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி) மொத்தம் 46 எம்எல்ஏக்கள் இருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு 16, உத்தவ் சிவசேனாவிற்கு 20, தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணிக்கு 10 என எம்எல்ஏக்கள் இருந்தனர். இதில் காங்கிரஸ், சிவசேனா எம்எல்ஏக்கள் சரத்பவாருக்கு ஆதரவு வழங்கினர்.
ஆனால் தேர்தலில் கூடுதலாக எந்த வேட்பாளர்களும் களமிறங்கவில்லை. மொத்தம் 7 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் சரத்பவாரும் ஒருவர். இதனால் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒருவேளை காங்கிரஸ் கட்சி கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தி இருந்தால் தேர்தல் நடந்து இருக்கும். அப்போது சரத்பவாருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய் இருக்கும். இதனால் தான் ராஜ்யசபா எம்பி பதவியை வாங்கி கொண்ட பாஜகவுக்கு ஆதரவாக மாறியுள்ளதாக காங்கிரஸ் கட்சி சாடி உள்ளது.


Click it and Unblock the Notifications
