அடுத்தடுத்து செத்து விழுந்த குளத்து நாரைகள்.. பறவை காய்ச்சல் உறுதி! ஹை அலர்ட்டில் கோவை! மக்களே உஷார்
கோவை: கடலூர் மாவட்டத்தின் கட்டியாங்குப்பம், நடுத்திட்டு உள்ளிட்ட பகுதிகளில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பண்ணைகளில் உள்ள கோழிகளை அழிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த அதிர்ச்சியாக கோவையிலும் பறவை காய்ச்சல் பரவி இருப்பது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் சுமார் 15 குளத்து நாரைகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் தற்போது அவை பறவை காய்ச்சல் காரணமாகவே உயிரிழந்ததாக முடிவுகள் வந்துள்ளது.
கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே கடலூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து கோழிகள் உயிரிழந்தன. குறிப்பாக அக்டோபர் 25ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரை மட்டுமே குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்தடுத்து கோழிகள் செத்து விழுந்தன.

இதை அடுத்து கால்நடைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தி உயிரிழந்த கோழிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். கடந்த நவம்பர் 14ஆம் தேதி ஆய்வு முடிவுகள் வந்த நிலையில் பறவை காய்ச்சல் தான் அதற்கு காரணம் என்பது உறுதியானது.
பறவை காய்ச்சல்
இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கச்சியாங்குப்பம், நடுத்திட்டு, நொச்சிக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 15 கோழிப் பண்ணைகளில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் கோழிகளை வளர்க்கவும், விற்பனை செய்யவும் மூன்று மாதம் தடையும் விதிக்கப்பட்டது.
கோழிகள் அழிப்பு
மேலும் பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பண்ணை மற்றும் அதனைச் சுற்றி சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கோழிகளையும் அழிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்படாமல் அவசர அவசரமாக பல ஆயிரக்கணக்கான கோழிகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கோவையிலும் பாதிப்பு
இந்த நிலையில் கடலூரை தொடர்ந்து கோவையிலும் பறவை காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது மக்களை கடும் அதிர்ச்சி ஆளாக்கி உள்ளது. கோவையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பிராய்லர் கோழி பண்ணைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த கோவை சித்தாபுதூர் பி.கே.ஆர். நகரில் ஓடைக்கு அருகே 14 குளத்து நாரைகள் கடந்த 18 ம் தேதி இறந்து கிடந்தது.
குளத்து நாரைகள்
இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறைதுறை அதிகாரிகள் இறந்த நாரைகளின் உடல்களை சேகரித்து முழுப் பறவை மாதிரிகளையும் பறவைக் காய்ச்சல் பரிசோதனைக்காக போபாலில் உள்ள ICAR-NIHSAD-க்கு அனுப்பினர். அங்கு நாரைகளை பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியதன் பேரில் மாநகராட்சி சார்பில் பாதிக்கப்பட்ட பகுதியில் தேவையான உயிரியல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோழிப் பண்ணை
இறந்த நாரைகள் கிடந்த இடத்தை சுற்றி சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்தக் கோழிப் பண்ணையும் இல்லை என்பதும், எந்தக் கோழி இறப்பும் பதிவு செய்யப்படவில்லை என்ற நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள பிராய்லர் கோழிப் பண்ணையாளர்களுக்கு சங்கங்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ஹை அலர்ட்டில் கோவை
மேலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் கோழிகள் இறப்பு இருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கும்படியும் கோழிப் பண்ணையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் கொடுத்துள்ளது.இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தை அடுத்த தமிழக கேரளா எல்லையில் உள்ள 12 சோதனைச் சாவடிகளிலும் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
