நான் ராஜினாமா செய்ய மாட்டேன்! - சிறை சென்றும் பிடிவாதம் பிடிக்கும் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள்
சென்னை: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் நேற்று (அதிரடியாகக் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கட்சிக்கும் ஆட்சிக்கும் ஏற்பட்டுள்ள அவப்பெயரைத் துடைக்கும் வகையில், அருள் விக்னேஷை தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வைக்குமாறு தவெக தலைமை கடும் அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நான் எந்தத் தவறும் செய்யவில்லை; ராஜினாமா செய்ய மாட்டேன் என அருள் விக்னேஷ் பிடிவாதம் பிடித்து வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது முதல் சிறைவாசம் வரை நடந்தது என்ன?
பாதிக்கப்பட்ட பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மாவட்ட விரைவு நீதிமன்ற நடுவரிடம் சுமார் 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட எஸ்.பி சிருஷ்டி சிங் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கள்ளக்குறிச்சியில் உள்ள அருள் விக்னேஷின் இல்லத்திற்குச் சென்று அவரைக் கைது செய்தனர்.
பின்னர் தியாகதுருகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் வைத்து அவரிடம் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பானுமதி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அருள் விக்னேஷை டிசம்பர் 11-ஆம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கும் தவெக தலைமை
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்குத் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குப் பெரும் தலைகுனிவையும் அரசியல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
இதனால், இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கட்சியின் நற்பெயரைக் காப்பாற்றவும் அருள் விக்னேஷை தனது கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வைக்கத் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மூலம் அவருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
அருள் விக்னேஷ் பிடிவாதம் பிடிப்பது ஏன்?
ஆனால், "நான் எந்தத் தவறும் செய்யவில்லை.. அரசியல் சதியால் என் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. எனவே, நான் ஒருபோதும் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்" என அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்து அடம்பிடித்து வருவதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அருள் விக்னேஷின் எம்.எல்.ஏ பதவி தானாகவே பறிபோகும் நிலை ஏற்படும். அப்படி நீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிபோனால், அது கட்சிக்கு இன்னும் பெரிய அவமானமாக மாறிவிடும் என்பதாலேயே, அதற்கு முன்பாகவே அவரைத் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்குமாறு தவெக தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
