Octopus Review: அர்ச்சனாவின் "ஆக்டோபஸ்” வெப் சீரிஸ் எப்படி இருக்கு? கதை இதுதான்.. ஒர்த்தா, இல்லையா? விமர்சனம் இதோ!
சென்னை: தமிழில் இப்போ எல்லாம் க்ரைம், மர்மம், திரில்லர், வெப் சீரிஸ்கள் நிறைய வெளியாகி வருகின்றன. ஆனால் ஒரு சின்ன கதையை எடுத்துக்கொண்டு அதை கடைசி வரை நம்மை யோசிக்க வைக்கும் விதத்தில் சொல்வது எல்லோருக்கும் கைவருவதில்லை. அந்த வகையில் தற்போது ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஆக்டோபஸ் வெப் சீரிஸ் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் வந்திருக்கிறது.
இயக்குனர் ஜெயச்சந்திர ஹாஸ்மி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடரில் அஸ்வின் குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன், வினோத் கிட்சன், சித்து குமரேசன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். சினிமனம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகியுள்ள இந்த தொடருக்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். மொத்தம் 7 எபிசோடுகள் கொண்ட இந்த சஸ்பென்ஸ் திரில்லர் நேற்று நவம்பர் 27ஆம் தேதி வெளியாகி உள்ளது. ஏழு எபிசோடுகளின் சேர்த்து சுமார் 3 மணி நேரத்திற்குள் பார்த்து முடித்து விடலாம். சரி சீரிஸ் எப்படி இருக்கிறது என்று விரிவாக பார்ப்போம் வாங்க.

ஆக்டோபஸ் வெப் சீரிஸ் கதை
இந்த சீரிஸ் கதையே கொஞ்ச பேருக்குள் தான் நடக்கிறது. ஐந்து குடும்பங்கள் வசிக்கும் "அன்பு நகருக்கு" 6வதாக ஒரு தம்பதி வந்து குடியேறுகிறார்கள். அந்த கணவனை பார்த்ததுமே அவன் குடிகாரன், மனைவியை சந்தேகப்படுபவன், சைக்கோ மாதிரி நடந்து கொள்பவன் என்று எல்லோருக்குமே தெரிந்து விடுகிறது. வந்த முதல் நாளே மனைவியை எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்துவது, பக்கத்து வீட்டுக்காரர்களிடம் எரிந்து விழுவது என அவனுடைய கேரக்டரை பார்த்தாலே எல்லோருக்கும் அப்படியே கன்னத்தில் ஓங்கி அறையனும் என்பது போல என்று தோன்றிவிடும். அப்படி ஒரு கேரக்டராக இருக்கிறான்.
அவனுடைய மனைவி அவனுக்கு அப்படியே ஆப்போசிட்டாக இருக்கிறார். கணவன் வேலைக்கு போன பிறகு பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாரிடமும் பாசமாக பேசி, அவர்கள் குடும்பத்தில் ஒருத்தி ஆக மாறிவிடுகிறார். அந்த அன்பு நகரில் இருக்கும் 5 குடும்பமே ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக ரொம்பவும் நெருக்கமான குடும்பமாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் இந்த பெண்ணும் ஒருத்தியாக மாறிவிடுகிறார்.

கதையின் திருப்பம்
ஆனால் அந்தப் பெண்ணை அவளுடைய கணவன் அடித்து, சூடு வைத்து சித்திரவதை செய்வதை எல்லாம் பக்கத்தில் இருப்பவர்கள் பார்த்து, அந்த பெண்ணுக்கு அட்வைஸ் செய்ய ஆனால் அந்த பெண்ணோ தன்னுடைய கணவருக்கு ரொம்பவே சப்போர்ட் பண்ணுகிறார். ஆனால் அர்ச்சனா அந்த சைக்கோ கணவனுக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்பதை வீடியோ ஆதாரமாக மனைவியிடம் காட்டி விடுகிறார். அதைப் பார்த்து அந்த பெண்ணும் நான் இன்னைக்கு அவரிடம் இதைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரப் போகிறேன் என்று சொல்கிறார்.
ஆனால் அந்த இரவு அந்த பெண் திடீரென காணாமல் போகிறார். நள்ளிரவில் அவள் கத்திய சத்தம் மட்டும் எல்லோருக்கும் கேட்கிறது. அதனால் அந்த பெண்ணுக்கு என்ன ஆச்சு? அவளுடைய கணவன் தான் ஏதோ செஞ்சிருக்க வேண்டும் என்று எல்லோருக்குமே சந்தேகம் வந்து, போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். ஆனால் விசாரணையில் அப்படி ஒரு பெண்ணே இல்லை, அவனுக்கு திருமணமே ஆகவில்லை என்று தெரிய வரும்போது கதை அடுத்த கட்டத்துக்கு நகருகிறது.

உண்மையில் அந்த பெண் யார்? அவளுக்கு என்ன ஆனது? அந்த குடியிருப்பில் நடப்பது என்ன? என்பதுதான் மீதி கதை. இந்த கதையின் ஆரம்பமே ஒரு நல்ல ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஒரு பெண் காணாமல் போனது மட்டுமல்லாமல், அவள் இருந்ததற்கான அடையாளமே இல்லை என்று சொல்வது கதைக்கு வித்தியாசமான திருப்பத்தை கொடுக்கிறது. யாரை நம்புவது? யார் சொல்வது உண்மை? யார் பொய் சொல்கிறார்கள்? என்று நாமும் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து யோசிக்க ஆரம்பிக்கிறோம்.
பிளஸ் பாயிண்ட்
குறிப்பாக கதையின் மர்மத்தை கடைசி வரை தக்க வைத்திருப்பது, உண்மையை வெளிப்படுத்தும் விதமும் நன்றாக இருக்கிறது. வினோத் கிஷனுக்கு இந்த சீரியஸில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் உண்மை தெரிய வரும்போது அவர் வெளிப்படுத்தும் ஆத்திரம் அழுகை பரிதவிப்பு என அந்த காட்சிகளில் உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். அந்த ஒரு பகுதியில் அவருடைய நடிப்பில் நம்மை கலங்கடித்து விடுகிறது. மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
ஜீ5-ல் வெளியான 'தடயம்’ – உண்மை சம்பவத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சமிட்ட த்ரில்லர் சீரிஸ்.. ரிவ்யூ இதோ!
இயக்குனர் ஜெயச்சந்திரன் இந்த கதையை கொரோனா காலகட்டத்தில் எழுதத் தொடங்கியதாகவும், அந்த சமயத்தில் குடியிருப்புகளில் மக்கள் ஒன்றாக அடைப்பட்டு வாழ்ந்த அனுபவங்கள் கதைக்கு தூண்டுதலாக அமைந்ததாகவும் கூறியிருக்கிறார். ஒரு குடியிருப்பில் இருக்கும் மனிதர்களை வைத்தே மர்மத்தை நகர்த்துவது நல்ல முயற்சி. குறைவான கேரக்டர்களை கொண்டு ஒரு முழுமையான கதையை சொல்ல முயற்சி இருக்கிறார்கள்.

குறைகள்
ஆனால் தொடரில் சில குறைகளும் இருக்கின்ற. சில காட்சிகள் ரொம்ப நாடகத்தனமாக எழுதப்பட்டிருக்கின்றன. கொஞ்ச கேரக்டர்களை மட்டுமே வைத்து கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றதால் அவர்கள் திடீரென காணாமல் போனது போன்ற விஷயங்கள் அப்பட்டமாக தெரிகிறது. ஒரு சில இடங்களில் இன்னும் தெளிவாக எழுதி இருக்கலாம். சில காட்சிகளை அவசரப்படாமல் அமைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக கதாபாத்திரங்களில் பின்னணி இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருந்தால் கதையோடு நம்முடைய ஈடுபாடும் அதிகமாக இருக்கும்.
முதல் மூன்று எபிசோடுக்கு ஒரு கல்லூரி காதலர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இவங்க எதற்கு தேவையில்லாம வராங்க என்று நமக்கு தோன்றலாம். ஆனால் அவர்களை வைத்து தான் மொத்த கதையுமே நகர்ந்து இருக்கிறது என்பது கடைசியில் தான் தெரிகிறது. அதிலும் கடைசி 2 எபிசோடுகள் இந்த படத்திற்கு இருந்த குறைகளை ஓரளவுக்கு மறக்க வைத்து விடுகிறது. கதையின் உண்மையான முடிச்சுகள் அவிழும் விதமும், நீதிமன்றத்தில் உண்மைகள் வெளிவரும் காட்சிகளும் நன்றாக இருக்கின்றன.
பார்க்கலாமா? வேண்டாமா?
"பொய் சாட்சிகளால் ஒருவரை குற்றவாளியாக்க முயற்சி செய்தவர்கள், இறுதியில் தங்களுடைய உண்மைகளாலே அம்பலப்படுவது" ஒரு நல்ல நீதிக் கதையாகவும் இருக்கிறது. மொத்தத்தில் அக்டோபஸ் ஒரு குறைவில்லாத வெப் சீரிஸ் கிடையாது, சில இடங்களில் திரையில் கவனம் செலுத்தி இருக்கலாம். சில கதாபாத்திரங்களில் இன்னும் சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் வித்தியாசமான கதைக்களம் கடைசிவரை நம்மை யோசிக்க வைக்கும் மர்மம், நீதிமன்றத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகள் நல்ல முயற்சியாக இருக்கிறது. 3 மணி நேரத்திற்குள் 7 எபிசோடுகளை பார்த்து முடித்து விடலாம் என்பதால் ஒரு வித்தியாசமான மர்ம தொடரை தேடுபவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம்.



Click it and Unblock the Notifications
