உரிக்காமலேயே கண்ணீர் வருது.. டபுள் செஞ்சுரி போட்ட வெங்காயம்! பூண்டு விலையை மட்டும் கேட்காதீங்க!
திண்டுக்கல்: போதிய மழை இல்லாததால் ஒட்டன்சத்திரம் கலைஞர் நூற்றாண்டு காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக சின்னவெங்காயம், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை குறையாமலேயே உள்ளது. சின்னவெங்காயம் கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரை விலை குறையாமல் ஒரு கிலோ 200 ரூபாய் வரையில் விற்பனையாகிறது. அதே போல் பூண்டின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு 200 முதல் 350 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது 800 ரூபாய் வரை விற்பனையாகிறது.
திண்டுக்கல்- கரூர் பைபாஸ் சாலையில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய வெங்காய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது

சின்ன வெங்காயம் திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிமந்தயம், ஒட்டன்சத்திரம் தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விளைவிக்கப்படுகிறது, இங்கு விளைவிக்கப்படும் வெங்காயம் திண்டுக்கல் ஒருங்கிணைந்த வெங்காய மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
வெங்காயம் விலை
இதற்கிடையே போதிய மழை இல்லாத காரணத்தினால் உள்ளூர் வெங்காய வரத்து முற்றிலும் தடைபட்டு விட்டது. உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் சின்ன வெங்காயத்தை நேரடியாக வியாபாரிகளிடம் விலையும் இடத்திலேயே வாங்கி விடுவதால் திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு குறைந்துவிட்டது. 50 கிலோ எடை கொண்ட 5000 பைகள் சராசரியாக வரும் நிலையில் தற்போது 1000 முதல் 1200 பைகள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.
சின்ன வெங்காயம்
இதனால் கடந்த வாரம் முதல் தர சின்ன வெங்காயம் கிலோ ரூபாய் 180க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் வரத்து குறைவின் காரணமாக முதல் தரம் கிலோ, ரூபாய் 200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரத்திற்கு ஏற்ப 10 கிலோ வெங்காயம் ரூபாய் 2000 முதல் 2100 வரை சில்லறை சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.
விலை உயர்வு
அதேபோல மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து வரும் பெரிய வெங்காயம்
வரத்து பல மடங்கு குறைந்த காரணத்தினால் கடந்த வாரம் 10 கிலோ பை அதிகபட்ச விலை 5000 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூபாய் 700க்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை தற்பொழுது குறைய வாய்ப்பில்லை என்றும் மழைப்பொழிவு வெளிமாவட்ட வரத்து அதிகரித்தால் மட்டுமே வெங்காயத்தின் விலை குறையும் என வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பூண்டு விலை
அதே போல் பூண்டின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பூண்டு 200 முதல் 350 ரூபாய் வரை விற்பனையான நிலையில் தற்போது 800 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலையானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், வெங்காயம் மற்றும் பூண்டு உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வு காரணமாக விற்பனை மந்தமாக இருப்பதாகவும் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.
இல்லத்தரசிகள் பாதிப்பு
இல்லத்தரசிகள் தினம் தோறும் சமையல் செய்வதற்கு வெங்காயம் முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் வெங்காயத்தை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேலும், ஹோட்டல்களிலும் விலையேற்றம் இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள்.


Click it and Unblock the Notifications
