கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ்-ஐ ராஜினாமா செய்ய வைக்க முயற்சி? காய் நகர்த்திய புஸ்ஸி ஆனந்த்!
சென்னை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 நாட்களுக்கு பின் தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன் அருள் விக்னேஷ்-ஐ பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிட தவெக தீவிரம் காட்டி இருக்கிறது. அதன்பின் அவரை தவெகவில் இருந்து நீக்கினால், இமேஜ் சரியாது என்று ஆட்சி மேலிடம் கணக்கு போட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சுமார் 4 நாட்களாகிய பின் தான், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றம் தலையிட்ட பின் உடனடியாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, கைது நடவடிக்கைக்கு தயக்கம் காட்டியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

தேசிய அளவில் தவெக ஆட்சிக்கு கெட்டப் பெயர் உருவாக்கிய விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தவெக தலைமை தயக்கம் காட்டியது ஏன் என்பதே அக்கட்சியினரின் கேள்வியாகவும் உள்ளது. இதுகுறித்து விசாரித்த போது, அருள் விக்னேஷ்-ஐ கைது செய்வதில் தவெக தலைமை பல்வேறு குழப்பத்தில் இருந்துள்ளது.
முதலில் பதவியை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, கைது செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் தான் தவெக தலைமை காய் நகர்த்தி இருக்கிறது. கைது செய்த பின் ராஜினாமா செய்ய வைத்தால், அது சட்டசபையில் பதிவாகிவிடும். மறுபுறம் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தாலும், அது சட்டசபை கோப்புகளில் பதிவாகும்.
இது நடக்காமல், எப்படி அவரை ராஜினாமா செய்ய வைக்கலாம் என்பதே தவெகவின் யோசனையாக இருந்திருக்கிறது. ஏனென்றால் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது என்பது கட்சியின் இமேஜை சரிக்க தொடங்கும் என்று கணக்கு போட்டுள்ளனர். சட்டசபை கோப்புகளில் வராமல் இருக்க, அவரை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, பின்னர் கைது நடவடிக்கை எடுக்கலாம் என்று உறுதியாக முடிவு எடுத்திருக்கின்றனர்.
ஆனால் அருள் விக்னேஷ் பதவியை ராஜினாமா செய்ய முன் வரவில்லை. புஸ்ஸி ஆனந்த் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், அவர் இறங்கி வர மறுத்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி அருள் விக்னேஷ்-ஐ கைது செய்ய தவெக தலைமை முடிவு எடுத்துள்ளது. இறுதியாக நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications
