திருப்பரங்குன்றம் விஷயமெல்லாம் சாதாரணமாவே முடிச்சுருக்கலாம்..இவ்வளவு பிரச்சினையா? சீமான் சொன்ன பதில்
மதுரை: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது நடவடிக்கையும் முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் எனவும், சட்டமன்ற உறுப்பினரை கைது செய்ய இத்தனை நாட்களாக எல்லாரும் பேசி.. இவ்வளவு அழுத்தம் கொடுத்த பிறகு தான் நடக்கிறது எனவும், திருப்பரங்குன்றம் விஷயமெல்லாம் சாதாரணமாகக் கையாண்டு இருக்க வேண்டிய விஷயம் என தூத்துக்குடி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்ல விமானநிலையத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்," ஒரு அமைச்சர் ஐபிஎஸ் அதிகாரியை இரவு நேரத்தில் வீட்டுக்கு வர சொல்வது இதெல்லாம் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. நாங்க வந்த பெண்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்போம் என்று சொல்லி வந்தார்கள்.
இவங்க சொன்னது போல், பச்சை பிள்ளைகள், சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் காணாமல் போகிறது. நாம் நாட்டுல தான் வாழ்கிறேமா அப்படிங்கிற கேள்வி வந்திருக்கு. போதையில சின்ன சின்ன பசங்க எல்லாம் போலீஸ்காரர்களை வெட்டுவதை பார்க்கிறோம்.
இப்ப போலீசுக்கே பாதுகாப்பு இல்லைன்னா.. சாதாரண பெண் பிள்ளைகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? இதெல்லாம் தமிழ்நாட்டில் நடக்கும் கொடுமை தான். சொல்வதற்கு ஒன்றும் இல்லை. திருப்பரங்குன்றம் விஷயமெல்லாம் சாதாரணமாகக் கையாண்டு இருக்க வேண்டிய விஷயம். திமுக ஆட்சியிலும் சரி இந்த ஆட்சியிலும் சரி, சிக்கந்தர் தர்காவில் வழிபடுவதற்கு பிரச்சனை இல்லாமல் விளக்கு ஏற்றுவதற்கும் பிரச்சனை இல்லாமல் அரசு செய்வதற்கு வேண்டும்.
அனைத்து மக்களுக்கு வழிபாடு செய்ய வழி விட வேண்டும். திமுக ஆட்சியிலேயே இதை சரி செய்திருக்க வேண்டும். திரும்ப திரும்ப அதை பிரச்சினையாக்கிக் கொண்டு வரும் போது பதற்றம் தான் வரும். தூணில் விளக்கை முருகனுக்கு விளக்கு ஏற்றுவது கணக்கு கேட்கிறார்கள். இதில் என்ன பிரச்சனை?
விளக்கை ஏத்தி விட்டு போங்க.. உங்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இரு சமய பெரியோர்களே அழுத்தி பேசி யாருக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருவரும் தனித்தனியாக வழிபட்டு கொள்ளவும் என விளக்கேற்றவும் விட்டிருக்க வேண்டும் என சொல்லி இருக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications
