சுதீஷ் வீட்டு கல்யாணத்தில் விஜய பிரபாகரன் ஆட்டம்.. சண்முகப்பாண்டியன் மட்டும் அமைதி ஏன்?
சென்னை: எல்.கே. சுதீஷ் இல்லத் திருமண விழாவில் விஜய பிரபாகரன் டான்ஸ் ஆடியதை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒரு குடும்பத் திருமண விழாவில் அவர் தனது விருப்பப்படி நடனமாடியதில் என்ன தவறு இருக்கிறது என்று இயக்குநரும் நடிகருமான செய்யாறு பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
Cheyaaru Balu சேனலில் பேசியிருக்கும் அவர், "விஜயகாந்தின் மகன் என்பதற்காக விஜய பிரபாகரன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மற்றவர்கள் முடிவு செய்ய முடியாது. சுதீஷ் இல்லத் திருமணம் என்பது அவர்களுடைய குடும்ப விழா. அந்த விழாவில் விஜய பிரபாகரன் நடனமாடியிருக்கிறார். அதற்காக அவரை இவ்வளவு கடுமையாக விமர்சிப்பது தேவையற்றது.

விஜய பிரபாகரன்
அவர் வேறு ஒருவருடைய வீட்டு விசேஷத்திலோ, கட்சி மேடையிலோ, பொதுநிகழ்ச்சியிலோ இப்படி நடனமாடவில்லை. அவருடைய குடும்ப நிகழ்ச்சியில்தான் ஆடியிருக்கிறார். இதை வைத்து உருவக் கேலி செய்வதும், சினிமா படங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும் மிகவும் தவறான அணுகுமுறை.
அதேபோல், விஜய பிரபாகரனுக்கும் சண்முக பாண்டியனுக்கும் இடையிலான உறவை குறிப்பிட்டும் சிலர் விமர்சனம் செய்கிறார்கள். தாய்மாமன் மகளை திருமணம் செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்புகிறார்கள். இதற்குப் பதிலளிக்கும் வகையில் சண்முக பாண்டியன் ஏற்கனவே ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.
மாமா மகள் - அத்தை மகன்
சிறுவயதிலிருந்தே அனைவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள் என்பதால், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை போன்ற உணர்வுதான் தங்களுக்குள் இருந்ததாக அவர் விளக்கியிருக்கிறார். குடும்பத்தினர்கூட இதுபற்றி கேட்டதாகவும், ஆனால் தங்களுக்கு அப்படிப்பட்ட எண்ணம் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய தனிப்பட்ட குடும்ப உறவுகளை வைத்து விமர்சிப்பதும் சரியானதல்ல.
இன்னொரு தரப்பினர், விருதுநகர் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு மக்கள் இவ்வளவு ஆதரவு கொடுத்திருக்கும்போது, அவர் பொறுப்பான முறையில் நடந்துகொள்ள வேண்டாமா என்று கேட்கிறார்கள். அவருக்கு எம்பி, எம்எல்ஏ. அல்லது அமைச்சர் பொறுப்பு கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பார் என்றும் விமர்சிக்கிறார்கள்.
விஜயகாந்த் அட்வைஸ்
இதிலும் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். திருமண விழாவில் சுற்றிலும் கேமராக்களும், மீடியாக்களும், சோஷியல் மீடியாக்களும் இருக்கின்றன என்பது அவருக்குத் தெரியும். இருந்தாலும் அது அவருடைய குடும்ப விழா. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கும். சண்முக பாண்டியன் அமைதியாக இருக்கிறார் என்பதற்காக விஜய பிரபாகரனும் அதேபோல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.
அதே நேரத்தில், விஜயகாந்த் உயிருடன் இருந்திருந்தால் தனது மகனிடம், இவ்வளவு மீடியாக்கள் இருக்கும்போது கொஞ்சம் கவனமாக நடந்துகொள் என்று அறிவுறுத்தியிருக்கலாம். அதுவும் ஒரு அப்பாவாக அவர் சொல்லக்கூடிய விஷயம்தான்.
ரோல் மாடல்
ஆனால், அதற்காக விஜய பிரபாகரனை இழிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை... பொதுவெளியில் இருப்பவர்களை பாராட்டுபவர்களும் இருப்பார்கள், விமர்சிப்பவர்களும் இருப்பார்கள்... பொறாமையிலும் தனிப்பட்ட கோபத்திலும் பேசுபவர்களும் இருப்பார்கள்.
விஜய பிரபாகரனும் சண்முக பாண்டியனும் தங்களுடைய அப்பா விஜயகாந்தின் வாழ்க்கையையே முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காக வேறு யாரையும் தேட வேண்டிய அவசியமில்லை. விமர்சனங்களுக்கு பதிலளிப்பதைவிட, தந்தை விட்டு சென்ற நல்ல பெயரையும் மக்கள் அன்பையும் காப்பாற்றுவதுதான் முக்கியம்' என்று செய்யாறு பாலு தன்னுடைய பேட்டியில் சொல்லி உள்ளார்.


Click it and Unblock the Notifications
