தொகுதி மறுவரையறை! ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்! என்ன முடிவு எடுக்க போகிறார்?
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. வரும் நவம்பர் 30ஆம் தேதி முதல் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் இன்று திமுக எம்பிக்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்ட ம் , 28ம் தேதி(இன்று)காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அது போது, திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் வரும் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30ஆம் தேதியும் மாநிலங்களவையில் டிசம்பர் 2 ஆம் தேதியும் இந்த கூட்டத் தொடர் தொடங்குகிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யும் போது திமுக எம்பிக்களின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை வழங்குவார் என சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே மார்ச் மாதத்தில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அது தோற்கடிக்கப்பட்டது. 298 பேர் ஆதரவாகவும் 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். ஆனால் மசோதா நிறைவேற 352 வாக்குகள் தேவைப்பட்டது.
அந்த மசோதாவை தோற்கடித்தததில் திமுகவுக்கு முக்கிய பங்கு இருந்தது. தொகுதி மறுவரையறை மசோதாவின் நகலை எரித்து அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின், எதிர்ப்பை காட்டியிருந்தார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் அந்த மசோதா சில திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டிய திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தாக்கல் செய்த மசோதாவில் தற்போது 3 திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாநிலங்கள் முழுவதும் மக்களவை இடங்களை 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு இடையேயான விகிதாச்சார முடக்கத்தை 25 ஆண்டுகளுக்கு நீட்டித்து மக்களவையில் ஒவ்வொரு மாநிலத்தின் விகிதாச்சார பங்கை தீர்மானிக்க 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடர்ந்து பயன்படுத்தவுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திற்குள்ளும் தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்ய 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை பின்பற்றப்படவுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்கள், 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்தது.



Click it and Unblock the Notifications
