திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை.. பலத்த சோதனைக்கு பிறகு அனுமதி
மதுரை: திருப்பரங்குன்றம் கோயில் மலையின் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஒரு தரப்பும், தீபம் ஏற்ற கூடாது என்று மற்றொரு தரப்பும் கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் உச்ச நிதிமன்றம் சென்றது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் தர்காவுக்கு வருவோருக்கு எந்த தடையும் இருக்க கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி காலை முதல் ஏராளமான இஸ்லாமியர்கள் தர்காவுக்கு வருகை புரிந்துள்ளனர்.
திமுக ஆட்சியில் தொடங்கிய திருப்பரங்குன்றம் கோயில் மலை தீபம் விவகாரம், தவெக ஆட்சிக்கு வந்தும் ஓயவில்லை. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை திமுக, தவெக அமல்படுத்தவில்லை என்பது விமர்சனமானது. திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவில்லை. இதனிடையே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்காவில் இஸ்லாமியர்கள் தொழுகை
மலை முழுவதும் சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தர்காவுக்கு 50 மீட்டருக்கு அப்பால் அனைத்து பகுதிகளிலும் தீபம் ஏற்றலாம். தர்காவுக்கு வேலி அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். தர்காவுக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு எந்த தடையும் இருக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடிவாரத்தில் பலத்த சோதனைக்கு பிறகே இந்து மற்றும் இஸ்லாமிய பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
காத்திருக்கும் பக்தர்கள்
இந்நிலையில் சிக்கந்தர் தர்காவில் இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். ஒருபக்கம் அதிகாலை முதலே பக்தர்கள் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். மறுபக்கம் சிறப்பு தொழுகைக்காக காலை முதலே இஸ்லாமியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தர்கா செல்கிறார்கள். மதுரை மட்டுமல்லாமல், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வருகை புரிந்துள்ளனர்.
சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு
பாதுகாப்புக்காக திருப்பரங்குன்றம் அடிவாரம், மலைப் பகுதியில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படை, காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை 6 மணியளவில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றத்தில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications
