தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷிடம் 4 மணி நேரம் விசாரணை! அதிகாலை 4 மணிக்கு சிறையில் அடைப்பு
கடலூர்: பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர் இன்று காலை கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கடலூருக்கு அழைத்து வருவதையொட்டி சிறை வளாகத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
பெண் கலெக்டர் ஒருவருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கு மதுபோதையில் சென்று தொல்லை கொடுத்தது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.

கடந்த ஜூலை மாதம் இந்த சம்பவம் நடந்த போதிலும் அது நவம்பர் மாதம்தான் வெளிச்சத்திற்கு வந்தன. இது குறித்து தலைமைச் செயலாளருக்கு புகார் அளிக்கப்பட்டதாம். ஆனாலும் எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
23 ஆம் தேதி பெண் ஆட்சியர் புகார்
இந்த நிலையில் அரசியல் கட்சிகள், நீதிமன்றம், மகளிர் ஆணையம் உள்ளிட்டவையின் தலையீடை அடுத்து சம்பந்தப்பட்ட ஆட்சியர், கடந்த நவம்பர் 23 ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் அவர் மீது கட்சி அளவில் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அருள் விக்னேஷிடம் விசாரணை
இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து புகார் கொடுத்த பெண் ஆட்சியரிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் வாக்குமூலத்தையும் பெற்றார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக எம்எல்ஏ அருள் விக்னேஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை அருள் விக்னேஷை அவரது வீட்டில் வைத்து சிருஷ்டி சிங் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தியாகதுருகம் சுற்றுலா மாளிகையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
ஓடோடி வந்த மனைவி
அப்போது அவரது மனைவி தனது 3 வயது குழந்தையுடன் வந்து தன்னை உள்ளே அனுப்புமாறு போலீஸாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

4 மணிக்கு சிறையில் அடைப்பு
அவரை டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அருள் விக்னேஷ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையொட்டி அங்கு போலீஸார் ஏராளமானோர் குவிக்கப்பட்டிருந்தனர். சிறை நடைமுறைகளை முடித்துக் கொண்டு அவர் அதிகாலை 4 மணிக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.

அருள் விக்னேஷ்
இதனிடையே தியாகதுருகம் சுற்றுலா மாளிகைக்கு வெளியே அருள் விக்னேஷை பார்க்க போலீஸாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்திருந்தனர். அருள் விக்னேஷின் கைதை அரசியல் கட்சியினர் வரவேற்றனர். அது போல் அழுத்தத்தின் பேரில்தான் இந்த கைது நடவடிக்கை நடத்தப்பட்டதே தவிர, அவரை காப்பாற்றத்தான் தவெக அரசு போராடியது என்றும் அவர்கள் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
