திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்..SC போட்ட ஆர்டர்! ஒட்டுமொத்த மலையையும் கண்ட்ரோலில் எடுத்த CRPF
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 9 யூனிட்களை சேர்ந்த CRPF வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பாதுகாப்பு படை வீரர்கள் எந்த எந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து உதவி கமாண்டர் சல்மா தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு யூனிட் களிலிருந்தும் சுமார் 150 பாதுகாப்பு படை வீரர்கள் மலை அடிவார பகுதிகள், மலை உச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக விளங்கும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ள மலைமீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி தீபம் ஏற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விசாரணையில், இன்று மாலைக்குள் திருப்பரங்குன்றம் மலைமீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பலத்த பாதுகாப்பு
இதையடுத்து, இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவையிலிருந்து வருகை தந்த 1000-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி மலைப்பகுதிக்குச் சென்றனர். அங்கு நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சிக்கந்தர் தர்கா
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் சிறப்புத் தொழுகை மற்றும் பிரார்த்தனை செய்வதற்காக கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் வருகை தந்தனர். இன்று காலை மட்டும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் பெயர், ஆதார் உள்ளிட்ட அடையாள விவரங்களைச் சேகரித்து, வீடியோ பதிவு செய்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மக்கள் அனுமதி
இதனைத் தொடர்ந்து, பழனி ஆண்டவர் திருக்கோயில் வழியாக மலைமீது உள்ள சிக்கந்தர் தர்காவிற்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்தனர். மேலும், மலைமீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காகவும், இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வைக் காண்பதற்காகவும் ராஜபாளையத்தில் இருந்து வந்த பக்தர் ஒருவரிடமும் பெயர் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்த பின்னர் மலைப்பகுதிக்குச் செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.
உச்சநீதிமன்ற உத்தரவு
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று மாலை தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட உள்ளதால், திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிஆர்பிஎப் வீரர்களின் கண்காணிப்பு மற்றும் காவல்துறையினரின் தீவிர சோதனைகளுக்கு மத்தியில் மலைப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சிஆர்பிஎப் வீரர்கள்
இதற்கிடையே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 9 யூனிட்களை சேர்ந்த CRPF வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்., பாதுகாப்பு படை வீரர்கள் எந்த எந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது குறித்து உதவி கமாண்டர் சல்மா தலைமையில் ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொரு யூனிட் களிலிருந்தும் சுமார் 150 பாதுகாப்பு படை வீரர்கள் மலை அடிவார பகுதிகள், மலை உச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Click it and Unblock the Notifications
